`அவங்க ரெண்டு பேரும் எனக்கு செய்வினை வைத்துவிட்டார்கள்’ – புலம்பும் விஜயகாந்த்

சமீபத்தில் வெளியான விஜயகாந்தின் புகைப்படம் அவரது உடல்நிலை குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியிருக்கிறது. விஜயகாந்த் எப்படியிருக்கிறார்?

விஜயகாந்த் உடல்நிலை என்ன ஆனது?

திரைப்படத் துறையில் நடிப்பு, அரசியலில் கட்சித் தலைவர் என இரண்டு துறையிலும் ஈடுபட்டு முக்கியமான இடத்தைப் பிடித்தவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும். அவர்களுக்கு அடுத்து அதேபோல், இரண்டு துறையிலும் கால்பதித்து தனக்கென தனி அடையாளத்தைப் பெற்றவர் விஜயகாந்த்.

Vijayakanth
Vijayakanth

திரைத்துறையில் ரஜினிகாந்த், கமலஹாசனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்து, தனக்கென நிலையான மார்கெட்டையும், நிரந்தர ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருந்தார். அதுபோல், அரசியலில் தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு மாற்றாக, தே.மு.தி.க என்ற கட்சியைத் தொடங்கி, அதைத் தமிழக அரசியலின் மூன்றாவது பெரிய சக்தி என்றளவிற்கு வளர்த்துக் கொண்டு வந்தார். இடையில் திடீரென அவருடைய உடல் ஆரோக்கியம் மிகப்பெரும் பாதிப்பிற்குள்ளானது. அவர் உடல் ஆ ரோக்கியம் மோசமானதும், அரசியலில் அவருடைய கட்சி அங்கிகாரத்தை இழந்ததும் ஒரே நேர்கோட்டில் நிகழ்ந்த சோகம். அதுபற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பைப் பார்க்கலாம்…

கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி முதல் தேர்தலை 2006-ஆம் ஆண்டு சந்தித்த விஜயகாந்த், அந்த த் தேர்தலில் அவர் மட்டும் வெற்றி பெற்றார். தனது கட்சிக்கான சட்டமன்ற பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் அவர் மட்டும் சட்டமன்றம் சென்றார். அதற்கடுத்து வந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட விஜயகாந்த், தி.மு.க-வை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி சட்டமன்ற எதிர்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றார். ஆனால், அதன்பிறகு அவருடைய அரசியல் வாழ்விலும், தனிப்பட்ட முறையில் அவருடைய ஆரோக்கியமும் இறங்குமுகமாகமானது.

சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும், அவருடைய அமைச்சர்களையும் நாக்கை துருத்திக் கொண்டு, கை முறுக்கிக் கொண்டு விஜயகாந்த் பேசிய பேச்சில், ஜெயலலிதா கடும் கோபத்திற்கு ஆளானர். அதையடுத்துப்பேசிய ஜெயலலிதா, இனிமேல் தே.மு.தி.க-வுக்கு இறங்குமுகம்தான் என்று சட்டமன்றத்திலேயே சூளுரைத்தார்.

Vijayakanth - Jayalalithaa
Vijayakanth – Jayalalithaa

விஜயகாந்த் மீது தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு வழக்குப் போட்டது. ஒவ்வொரு நீதிமன்றமாக தமிழகம் முழுவதும் விஜயகாந்த் அலைக்கழிக்கப்பட்டார். தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏ-க்களாக அணி மாறினர். அதையடுத்து, விஜயகாந்தின் தே.மு.தி.க, பிரதான எதிர் கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது. அப்போது முதல் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் விஜயகாந்த் பாதிப்பிற்குள்ளானார். குறிப்பாக, பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களில் பேசும் போது, விஜயகாந்திற்கு வாய் குளறல் ஏற்பட்டது. வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியவில்லை. அவர் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ஞாபக மறதி பிரச்சினையும் அதிகமானது. அதோடு, கண்களில் இருந்து நீர் வடிவதும் அதிகமானது.

ஆனாலும், 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் பிரச்சாரத்தில் விஜயகாந்த் ஈடுபட்டார். அந்த தேர்தலிலும் விஜயகாந்தின் தே.மு.தி.க-விற்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. அதோடு, விஜயகாந்த் உடல்நிலையும் இன்னும் மோசமானது. இருந்தாலும், அனைத்தையும் சமாளித்துக் கொண்டு, தே.மு.தி.க தொண்டர்களைச் சந்தித்து, “உங்களுடன் நான்” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார். ஆனால், அதைத் தொடர முடியாத நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை மிக மோசமான பாதிப்பிற்குள்ளானது. அதையடுத்து, 2014 ஜூலை 9-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து வீடு திரும்பிய விஜயகாந்த், அதன்பிறகு 13-ம் தேதி இரவு 11 மணிக்கு சிங்கப்பூர் சென்றார். அப்போது, தேமுதிக சார்பில் வெளியான அறிக்கையில் சகாப்தம் திரைப்பட சூட்டிங்கிற்காக சிங்கப்பூர் சென்றதாக சொல்லப்பட்டது. ஆனால், உடல்நிலை மோசமானதையடுத்து, சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்குத்தான் சென்றார் என்பது பின்னால் உறுதியானது.

Vijayakanth
Vijayakanth

அதன்பிறகு பொதுநிகழ்ச்சிகளில் அவர் அதிகம் கலந்து கொள்ளவில்லை என்றாலும், 2016 சட்டமன்றத் தேர்தல் வேலைகள், கூட்டணிப் பேச்சுவார்த்தை என அனைத்தும் தேமுதிக-வில் விஜயகாந்த் தலைமையில்தான் நடைபெற்றது. மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களோடு கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதியாக அந்தக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். ஆனால், 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, மக்கள் நலக்கூட்டணிக்கும் சரி… தே.மு.தி.க-விற்கும் சரி… ஒரு எம்.எல்.ஏ-கூட கிடைக்கவில்லை. அதையடுத்து அரசியலில் தே.மு.தி.க மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தும் போனது. விஜயகாந்தின் உடல்நிலை இன்னும் அதிகமாக மோசமாகத் தொடங்கியது. அதன்பிறகு வருடத்திற்கு ஒருமுறை சிங்கப்பூர் மௌண்ட் எலிசபெத் மருத்துவமனையில் செக்கப்புக்கு செல்வதை விஜயகாந்த் வழக்கமாக வைத்திருந்தார்.

2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தி.மு.க தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தேமுதிக தலைவர் விஜயகாந்தும் சிங்கப்பூர் மௌண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Vijayakanth
Vijayakanth

கலைஞர் மரணத்திற்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துப் பேசினார் விஜயகாந்த். அதில்கூட அவரால் எந்த வார்த்தைகளையும் உச்சரிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் உடைந்து அழத் தொடங்கிய விஜயகாந்தின் அந்த வீடியோ, தமிழகத்தையும், தே.மு.தி.க தொண்டர்களையும் உருக வைத்தது. அதன்பிறகு சில வாரங்கள் கழித்து, சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் நேரடியாக கலைஞரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். ஏறத்தாழ அதுதான் கடைசியாக பொதுவெளியில் விஜயகாந்தை பத்திரிகையாளர்கள் பார்த்தது. அதன்பிறகு விஜயகாந்த் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, அரசியல் கூட்டங்களை நடத்துவது என்று எந்த நிகழ்விலும் பங்கேற்கவில்லை.

2019 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விஜயகாந்தால் வெளியில் வரவே முடியவில்லை. தேர்தல் தொடர்பான கூட்டணிப் பேச்சு வார்த்தைகள், பிரச்சாரங்கள் எதிலும் அவர் பங்கேற்கவில்லை. மாறாக இவை அனைத்தும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவருடைய மகன் விஜய பிரபாகரன், மைத்துனர் சுதிஷ் தலைமையில்தான் நடைபெற்றது. ஆனால், அந்த த் தேர்தலில் விஜயகாந்தின் உடல்நிலையைப் போன்றே, தே.மு.தி.க-வின் நிலையும் பரிதாபத்திற்குரியதானது.

Vijayakanth
Vijayakanth

அதன்பிறகு, விஜயகாந்த் வீட்டில் இருக்கும் ஒரு சில வீடியோக்கள் வெளியிடப்பட்டன. அதில் அவருடைய கம்பீரம், மிடுக்கு என எல்லாம் மறைந்து, ஒரு குழந்தையைப் போல் காட்சியளித்தார். மேலும் வெளியாட்கள் யாரையும் சந்திப்பதையும் விஜயகாந்த் தவிர்த்து வந்தார். அவருடைய குடும்பத்தினரும் மற்றவர்கள் விஜயகாந்தை சந்திக்க அனுமதிக்கவில்லை.

விதிவிலக்காக, விஜயகாந்த் திரைத்துறைக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் அவரோடு பழகிய பத்திரிகையாளர்கள் சிலருக்கு மட்டும் அந்த அனுமதி இருந்தது. அவர்கள் மட்டும் அவ்வப்போது அவரைச் சந்தித்து பேசி வருகின்றனர். அவர்களிடம் பெரும்பாலும் சைகையிலும், வார்த்தைகளை உச்சரிக்க சிரமப்பட்டும் பேசும் விஜயகாந்த் அடிக்கடி அழுதுவிடுகிறார். அப்படிச் சந்தித்த சில பத்திரிகையாளர்களிடம் விஜயகாந்த் தனக்கு இந்த நிலை ஏற்பட்டதற்கு காரணம் எனப் புலம்பியிருக்கிறார். “என்னை அரசியல்ல இருந்து ஒழிக்கனும்னு நினைச்சவங்க திட்டமிட்டு செஞ்ச வேலை இது. அவங்களை எதிர்த்து நின்னேன்… அதட்டினேன்னு வஞ்சம் வைச்சு செய்வினை வைச்சுட்டாங்க. என் கூட சேர்ந்து ஜெயிச்ச கரிசனம் கூட இல்ல. அவங்களும் அவங்க கூடவே நிழலா இருக்கிறவங்களும் சேர்ந்துதான் எனக்கு செய்வினை வைச்சுட்டாங்க. அவங்க நல்லா இருக்கிறதுக்கு கோயில் கோயிலா போய் கும்பிடுறது சரி. ஆனா, நான் வீணா போகனும்னு இப்படி பண்ணலாமா’ என கண்கலங்கி வருந்தியிருக்கிறார். தன்னுடைய தற்போதைய நிலைக்கு அந்த இருவரும் வைத்த செய்வினைதான் காரணம் என விஜயகாந்த் ஆழமாக நம்புகிறார்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

தற்போது விஜயகாந்தை 24 மணி நேரமும் கவனித்துக் கொள்ள குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தான் விஜயகாந்தை குளிக்க வைத்து, உணவு கொடுப்பது முதல் அனைத்து வேலைகளையும் பார்க்கிறார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் முழு நேர வேலையே விஜயகாந்தைப் பார்த்துக் கொள்வதுதான்.

அடிக்கடி விரக்தியாகும் விஜயகாந்த், ‘நான் எப்டி இருந்தேன்.. என் நிலைமை இப்டி ஆகிருச்சே…’ என்று உடைந்து அழும்போது, அவரை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை. மேலும், தற்போது வெளியாட்கள் யாரையும் சந்திக்க அனுமதிப்பதில்லை. மிக முக்கியமான ஆளுமைகள், பெரிய அரசியல் தலைவர்கள் சந்திக்க விரும்பினால் மட்டும், அன்று விஜயகாந்தை புதிய உடை உடுத்தி, கண்ணாடி அணிய வைத்து வரவேற்பறைக்கு அழைத்து வருகின்றனர். திரைத்துறை, அரசியல் இரண்டிலும் சாதித்த விஜயகாந்தின் பொதுவாழ்க்கையில் கருத்து மாறுபாடு கொண்டவர்கள் கூட, அவருடைய மனிதாபிமானம், உதவும் பண்பில் நெகிழ்ந்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட மனிதாபிமானம் நிறைந்த அந்த மனிதர் விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக மீண்டும் புத்துணர்ச்சியோடு நடமாட வேண்டும் என்று தமிழ்நாடு நவ் விரும்புகிறது.

Also Read – `புன்னகை முதல் பெருமிதம் வரை..’ முதல்வர் மு.க.ஸ்டாலினின் `நவரசா’ மொமண்ட்ஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top