இந்தியாவின் நைட்டிங்கேல்’,
இசைக்குயில்’ என்று புகழப்படும் பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் மும்பையில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. மராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட லதா, தமிழில் இளையராஜா இசையில் `வலையோசை’ உள்பட 3 பாடல்களைப் பாடியிருக்கிறார். மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனைத் தனது உடன்பிறவா சகோதரராகவே எண்ணி, அவரது குடும்பத்தினரோடு அன்பு பாராட்டியவர்.
லதா மங்கேஷ்கர்
தற்போதைய மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் 1929ம் ஆண்டு செப்டம்பர் 29-ல் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். இவரது சகோதரி ஆஷா போன்ஸ்லேவின் இந்தியாவின் பிரபலமான பிண்ணனிப் பாடகியாவார். இவர் சிறுவயதில், 6 மாதக் குழந்தையாக இருந்த தனது தங்கை ஆஷாவைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்குச் சென்றிருக்கிறார். ஆனால், கைக்குழந்தையோடு பள்ளிக்கு வந்த லதாவை ஆசிரியர் கடிந்துகொள்ளவே, அந்த ஒரு நாளோடு லதாவின் பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. வீட்டிலிருந்தபடியே மராத்தியைக் கற்றுக்கொண்ட அவர், பின்னாட்களில் நாட்டின் முக்கியமான பின்னணிப் பாடகியாக உருவெடுத்தார்.
இசைத்துறைக்கு இவரின் சேவையைப் பாராட்டி, 1987-ல் தாதா சாகேப் பால்கே விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. அத்தோடு, நாட்டின் உயரிய விருதாகக் கருதப்படும் பாரத ரத்னா, பத்ம விபூஷண், பிரான்ஸ் அரசின் National Order of the Legion of Honour விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்தி, பெங்காலி, மராத்தி, தமிழ் என இந்தியாவின் 36 மொழிகள், சில வெளிநாட்டு மொழிகள் உள்பட பல்வேறு மொழிகளில் 30,000-த்துக்கும் மேலான பாடல்களைப் பாடியிருக்கிறார்.
சிவாஜி `அண்ணா’
தமிழில் இவர் பாடிய முதல் பாடல் நடிகர் திலகம் சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு நடித்த ஆனந்த் படத்தில் இடம்பெற்றிருந்த `ஆராரோ ஆராரோ’. இளையராஜா இசையில் இந்தப் பாடலை அவர் பாட வேண்டும் என்று முதலில் விருப்பம் தெரிவித்தது பிரபுவின் மூத்த சகோதரரான ராம்குமார்தானாம். சிவாஜியைத் தனது உடன்பிறவா சகோதரராகவே பாவித்து வந்த அவர், அன்னை இல்லத்துக்கு முதன்முதலில் வந்த சம்பவம் சுவாரஸ்யமானது.
சிவாஜி நடிகராக ஜொலித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள அன்னை இல்லம் 1967-ல் வித்தியாசமான விருத்தினரை வரவேற்றது. எத்தனையோ லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களைப் போலவே, அவரும் ரசிகைதான். ஆனால், ஏற்கனவே தனது குரலால் `Queen Of Melody’ என்று அறியப்பட்டிருந்த லதா மங்கேஷ்கர்தான் அவர். லதாவை அன்னை இல்ல உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். லதா, தனது 13 வயதில் தந்தை தீனநாத் மங்கேஷ்கரை இழந்தார். நாடக நடிகரும் மராத்தி, கொங்கணி மொழிகளில் இசையமைப்பாளராகவும் இருந்தவர் அவர். நடிகர் திலகம் சிவாஜி, தனது தந்தையைப் போலவே இருப்பதைத் தான் உணர்ந்ததாக அன்னை இல்லத்தில் நெகிழ்ந்திருக்கிறார் லதா.
`பாவ மன்னிப்பு’ படத்தில் சிவாஜியின் நடிப்பைப் பார்த்து, ஒருகணம் தனது தந்தையையே நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதனால், சகோதரனாக மனதளவில் ஏற்றுக்கொண்ட சிவாஜியை நேரில் சந்திப்பதற்காக அன்னை இல்லத்துக்கு அவர் வந்திருக்கிறார். அதன்பிறகு, சிவாஜியின் குடும்பத்தினரோடு, ஒரு குடும்ப உறுப்பினராகவே இருந்திருக்கிறார். ஆனந்த் படத்தில் பாடுவதற்காக லதாவிடம் தயங்கித் தயங்கிக் கேட்கவே, எனது சகோதரின் மகனுக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா என்று கூறி தனது சொந்த செலவிலேயே தனி விமானத்தில் மும்பையில் இருந்து சென்னை வந்து பாடிக்கொடுத்திருக்கிறார். அதேபோல், சென்னை வந்தால் ஹோட்டல்களில் தங்குவதை லதா விரும்புவதில்லை என்பதை அறிந்த சிவாஜி கணேசன், அன்னை இல்லத்திலேயே அவருக்காகத் தனி காட்டேஜை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
அவ்வப்போது, சிவாஜியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அண்ணா’ என்ற அடைமொழியோடு தங்களுக்கு அனுபுவார் என்று கண்ணீருடன் நினைவு கூர்ந்திருக்கிறார் பிரபு. கொரோனா, நிமோனியா பாதிப்புகளால் கடந்த ஜனவரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் இருந்தபோது கூட சிவாஜி குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார். ஆனந்த் படத்தைத் தவிர, எஸ்.பி.பி-யுடன் இணைந்து பாடியவளையோசை கலகலவென…’ பாடல் இவரைத் தமிழ்நாட்டின் கடைக்கோடி வரை கொண்டு சேர்த்தது. மேலும், என் ஜீவன் பாடுது படத்தில் இடம்பெற்றிருந்த `எங்கிருந்தோ அழைக்கும்’ பாடல் என தமிழில் 3 பாடல்களையும் இளையராஜா இசையிலேயே பாடியிருக்கிறார்.
Also Read – தமிழ்நாட்டையே ஆட்டுவித்த ஏ.ஆர்.ரஹ்மான் – பிரபுதேவா காம்போவின் ஸ்பெஷல் பாடல்கள்!
Muchas gracias. ?Como puedo iniciar sesion?