`காபி கிங்’ என்றழைக்கப்பட்ட சித்தார்த்தா மறைவுக்குப் பின்னர் சுமார் ரூ.7,200 கோடி கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த கஃபே காபி டே மற்றும் அதன் துணை நிறுவனங்களை இரண்டு ஆண்டுகளில் மீட்டிருக்கிறார் மாளவிகா ஹெக்டே. அவரின் முக்கியமான மூன்று மந்திரங்கள் என்னென்ன… வாங்க தெரிஞ்சுக்கலாம்.
கஃபே காபி டே
சாதாரணமாக கடைகளில் 5 ரூபாய்க்கு காபி விற்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், அதை 25 ரூபாய்க்குத் தனது கடைகளில் வந்து குடிக்க வைத்தவர் வி.ஜி.சித்தார்த்தா. இணையம் வளர்ச்சியடையத் தொடங்கியிருந்த 1990-களின் இறுதியில், அதாவது 1996-ல் பெங்களூருவில் தனது முதல் கடையைத் தொடங்கிய சித்தார்த்தா, காஃபி குடித்தால் இண்டர்நெட் ஃப்ரீ என்று அறிவித்து கவனம் ஈர்த்தார். திருமண நாளோ, பிறந்த நாளோ, உங்கள் முதல் மாத சம்பள ட்ரீட்டோ காஃபே காபி டேவுக்குப் போனால், அங்கு நீங்கள் செலவிடும் சில மணி நேரங்கள் உங்கள் வாழ்வின் விலை மதிப்பற்ற தருணங்களாக மாறும். அதற்குக் காரணம், கஃபே காபி டேவின் பிஸினஸ் வாடிக்கையாளர்களின் உணர்வுகளைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டிருந்ததுதான்.
இந்தியாவில் காஃபி கலசாரம் தலைதூக்கத் தொடங்கிய காலத்தில் அதை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்ட வி.ஜி.சித்தார்த்தா, கஃபே காபி டே சாம்ராஜ்யத்தை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தினார். வெற்றிகரமாகச் சென்றுகொண்டிருந்த கஃபே காபி டேவின் பயணத்தில் பெரும் இடியாக இறங்கியது சித்தார்த்தாவின் சோக மரணம். கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 29-ல் காரில் சாக்லேஷ்பூர் சென்றுகொண்டிருந்த சித்தார்த்தா, மங்களூரில் ஒரு பாலத்தில் காரை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். பாலத்தில் அடுத்த முனையில் தனக்காகக் காத்திருக்கும்படி டிரைவரிடம் சொல்லிவிட்டுச் சென்ற அவரை அதன்பிறகு யாரும் உயிருடன் பார்க்கவே இல்லை. நாட்டின் மிகப்பெரிய காபி ரெஸ்டாரெண்டுகளின் உரிமையாளரான சித்தார்த்தாவை 36 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு நேத்ராவதி ஆற்றில் சடலமாகக் கண்டெடுத்தது கர்நாடகா காவல்துறை. அவர், இறுதியாக எழுதிய கடிதம் என்ற பெயரில் வெளியான கடிதத்தில் கடன் நெருக்கடி, முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான மிரட்டல்கள் மற்றும் வருமான வரித்துறை கொடுத்த குடைச்சல்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவரது மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வருமான வரித்துறை சட்டங்களில் சில மாற்றங்களையும் மத்திய அரசு கொண்டு வந்தது.
தலைக்கு மேல் கடன்
சித்தார்த்தா உயிரிழந்தபோது கஃபே காபி டே நிறுவனத்தின் கடன் தொகை சுமார் ரூ.7,200 கோடியாக இருந்தது. அந்தக் கடனில் இருந்து மீள்வது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத காரியம் என்று அப்போது பேசப்பட்டது. அந்த நிறுவனத்துக்குக் கொடுத்த கடன்களைத் திரும்பக் கேட்டு கடன்காரர்கள் தொல்லை கொடுக்கத் தொடங்கினர். அந்த சமயத்தில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார் சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா ஹெக்டே. கர்நாடக முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை அலங்கரித்த எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள்தான் மாளவிகா ஹெக்டே.
கஃபே காபி டே நிறுவனத்தின் கடன்களைக் குறைத்து, நிலையான எதிர்காலத்தை ஏற்படுத்துவதே, தனது நோக்கம் என்று ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் அவர். என்ஜினீயரிங் பேக்ரவுண்ட் கொண்ட அவர், காபி டே நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக 2008-ம் ஆண்டு முதலே நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார். நேரடி உறுப்பினராக இல்லாமல் நான் எக்ஸ்கியூட்டிவ் உறுப்பினராக அவர் தொடர்ந்திருக்கிறார். அந்த நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளில் பின்னணியில் இருந்து பங்காற்றிய அவர், சித்தார்த்தா மறைவுக்குப் பின்னர் 2020 டிசம்பர் 30-ல் தலைமை செயலதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
மாளவிகா ஹெக்டே – 3 மந்திரங்கள்!
கடனைக் குறைத்து முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதே மாளவிகாவின் முதல் நோக்கமாக இருந்தது. காபி டேவின் கதை நிச்சயம் வெற்றிக்கதையாகவே இருக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்த அவர், சித்தார்த்தாவின் தொலைநோக்குப் பார்வைக்கு உயிர் கொடுக்கவும் தீவிரமாக உழைக்கத் தொடங்கினார்.
- எது அவசியம்?
- மேனேஜ்மெண்ட் ஸ்டைல்
- மாற்றி யோசி
எது அவசியம்?
கடன்களைக் குறைக்கும் நோக்கில் அவர் முதலில் சிறு கடன்களைத் தேர்வு செய்து அவற்றைத் திரும்பியளிக்க முடிவு செய்தார். இதற்காக, பெரிதாக வருமானம் தராத சொத்துகளை முதலில் அடையாளம் கண்டு, அவற்றை விற்று கடன்களை அடைக்கத் தொடங்கினார். பெரிய அளவில் கடன்களைப் பெற்றுவிட்டு வேறு விதமான முடிவெடுத்த தொழிலதிபர்கள் மத்தியில், பெரிய கடன்களை நிச்சயம் திரும்பச் செலுத்துவேன் என்ற உறுதியை வங்கிகள், முதலீட்டாளர்களுக்குக் கொடுத்தார். நிறுவனத்தின் சொத்துகளோடு, பாரம்பரிய குடும்ப சொத்துகளையும் விற்று சிறு கடன்களை அடைத்த கையோடு, பெரிய கடன்களைத் திரும்ப செலுத்த நம்பிக்கையளிக்கும் வகையில் பேசி வங்கிகளிடம் கால அவகாசத்தைப் பெற்றார். இந்த இடைவெளியில், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்று புதிய முதலீடுகளை ஈர்க்கும் பணியையும் சிறப்பாகவே செய்தார். கொரோனா காலத்தில் அரசு அறிவித்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காபி டே அவுட்லெட்களில் செய்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றதோடு, பாதுகாப்பான உணர்வையும் ஏற்படுத்தினார். ஊரடங்கு பாதுகாப்பு விதிமுறைகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்து ஹாஸ்பிடாலிட்டி துறையில் இருக்கும் மற்ற நிறுவனங்கள் கையைப் பிசைந்துகொண்டிருந்த நேரத்தில் தனது அவுட்லெட்களை முன்மாதிரிகளாக மாற்றிக் காட்டினார்.
மேனேஜ்மெண்ட் ஸ்டைல்!
கஃபே காபி டே மற்றும் அதன் 7 துணை நிறுவனங்களில் இருந்து Mysore Amalgamated Coffee Estates Limited (MACEL) என்ற சித்தார்த்தாவின் சொந்த நிறுவனத்துக்கு ரூ.3,535 கோடி அளவுக்கு கணக்கில் வராத நிதி திருப்பி விடப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. அந்த நிதியை மீட்பது மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிட கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மஞ்சுநாத்தை நியமித்தது மாளவிகா எடுத்த முக்கியமான முடிவு. அந்த காஃபி நிறுவனத்திடமிருந்து குறிப்பிட்ட தொகையை எப்படி வசூலிப்பது என்பது குறித்த நீதிபதியின் அறிக்கைக்காக காஃபி டே காத்திருக்கிறது.
காபி டே எண்டர்பிரைசஸ் லிமிட்டெட் (CDEL) நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் கஃபே காபி டே-யின் பிஸினஸ் மூலம் கிடைக்கும் வருமானம் 47% மட்டுமே. லாஜிஸ்டிக்ஸ் துறையிலும் மிகப்பெரிய அளவில் கால்பதித்திருக்கிறது அந்த நிறுவனம். இந்த வகை நடவடிக்கைகள் மூலம் 45% வருமானம் கிடைக்கிறது. இதனால், திவாலைத் தவிர்க்கும் நடவடிக்கையாக சென்னையைச் சேர்ந்த சிகால் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் தங்களுக்குச் சொந்தமான பங்குகளை காபி டே விற்பனை செய்தது. இந்த வகையான நடவடிக்கைகள் மூலம் கடன் தொகை ஓரளவுக்குக் குறைந்தது.
Also Read:
மாற்றி யோசி
கொரோனா சூழல் சுற்றுலாத் துறையை நொறுக்கிப் போட்டது போலவே, ஹாஸ்பிடாலிட்டி துறையையும் ஒரு கை பார்த்துவிட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்படியான சூழலைக் கடந்தும் காபி டே நிறுவனம் வளர்ச்சியடைந்திருக்கிறது. இதற்குக் காரணம் மாளவிகாவின் மாற்றி யோசி திட்டம். காபி டேவில் கிடைக்கும் காபி ஃப்ளேவர்களும் அதன் சுவையும் ரொம்பவே ஃபேமஸ். அதை அப்படியே மடைமாற்றி காபித் தூளை சொந்தமாகவே மார்க்கெட் செய்யத் தொடங்கினார். கொரோனா காலத்தில் இதன்மூலம் காபி டே ஊழியர்கள் வேலை இழக்காமல் பார்த்துக் கொண்டார். அத்தோடு காபி மேக்கிங் உபகரணங்கள் தயாரிப்பிலும் கணிசமான லாபம் பார்த்தது அந்த நிறுவனம்.
இப்படியாக காபி டே நிறுவனத்தின் கடன் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.7,200 கோடியில் இருந்து ரூ.1,731 கோடியாகக் குறைந்திருக்கிறது. பெருந்தொற்று காலத்தில் மட்டுமே காபி டே நிறுவனத்தின் கடன் 75% அளவுக்குக் குறைக்கப்பட்டிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் மாளவிகா ஹெக்டேவுக்கு நம்பிக்கையான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் காபி டே நிறுவனத்துக்குச் சொந்தமாக 165 நகரங்களில் 572 கஃபேக்கள், 333 சிசிடி எக்ஸ்பிரஸ் கியோஸ்கள் எனப்படும் சிறு கிளைகளும் இருக்கின்றன. இதுதவிர, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களில் 33,326 வெண்டிங் மெஷின்களையும் பராமரித்து வருகிறது அந்த நிறுவனம். சுமார் 24,000 ஊழியர்களுடன் ஆலமரமாகக் கிளை விரித்து பரந்திருந்த ஒரு நிறுவனம் கடனில் மூழ்கிக் கொண்டிருந்தபோது, கேப்டனாகப் பொறுப்பேற்று கரை சேர்த்திருக்கிறார் மாளவிகா. குறிப்பாக, ஊழியர்களைக் குறைக்காமல் இந்த சக்ஸஸ் ஸ்டோரியை அவர் நிஜமாக்கியிருக்கிறார்.
“என் கணவரின் கனவு காபி டே. அதன் கதை நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டியதாகவே இருக்க வேண்டும். நான், எனது வாழ்வின் 32 ஆண்டுகளை சித்தார்த்தாவுடன் கழித்திருக்கிறேன். ஊழியர்களே அவரது குடும்பமாக இருந்தார்கள் என்பதை நான் அறிவேன். அவரின் கனவை நனவாக்கத் தொடர்ந்து பாடுபடுவேன். எங்களின் கடினமான காலங்கள் முடிந்துவிட்டன’’
மாளவிகா
Also Read – கிரிப்டோ கரன்சி, பிட்காயின்… கான்செப்ட் என்ன – ஓர் எளிய அறிமுகம்!