சாப்ட்வேர் என்ஜினீயர் டு நடிகர்… ‘நாடோடிகள்’ நமோ நாராயணின் கதை!

ஒரு நடிகரோட முகத்தைப் பார்த்தா முகத்துல பல பாவனைகள் தெரியும். ஆனா  ‘நாடோடிகள்’ நமோ நாராயணின் முகத்தைப் பார்க்கும்போது அப்பாவித்தனமா, குறும்பா, பாசமா, வில்லத்தனமானு கண்டே பிடிக்க முடியாது. நாடோடிகள் மூலமா ப்ளக்ஸ் பேனர் வச்சு பேமஸ் ஆனவர், ‘தம்பி இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடணும்’னு அப்பா படத்துல தன்னோட எதார்த்தமான நடிப்ப ஆழமா பதிச்சவர்னு ஏகப்பட்ட கேரெக்டர்ஸ் பண்ணியிருக்கார். இவர நடிகரா ஆகுறதுக்கு முன்னாலயே உலகம் சுத்தின சாப்ட்வேர் இஞ்சினியர். என்ன ஷாக்கா இருக்கா?… இவரை பத்தி தெரியாத விஷயங்களைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.

Namo Narayanan
Namo Narayanan

சாப்ட்வேர் என்ஜினீயர் பயணம்

இவரோட சொந்தஊர் மதுரை. அப்பா அம்மா ரெண்டுபேருமே போஸ்ட் மாஸ்டர்ஸ். வீட்டுக்கு மூத்த பிள்ளை. சின்ன வயசுல இருந்தே படிப்புல ஆர்வம். படிப்பை முடிச்சிட்டு சாப்ட்வேர் என்ஜினீயரா தன்னோட வாழ்க்கையை ஆரம்பிச்சார், நமோ நாராயணன். உள்ளூர் தொடங்கி பஹ்ரைன், மலேசியா, சிங்கப்பூர் என உலக நாடுகள்ல பறந்து பறந்து வேலை பார்க்கிறார். அதுக்குப் பின்னால சென்னை வந்து வேலை பார்த்தார். இந்த நேரத்துலதான் ஒரு அமெரிக்க சாப்ட்வேர் கம்பெனியில வேலைக்கு செலக்ட் ஆகி 10 வருஷம் விசா எல்லாம் கிடைச்ச நேரம் அது. இனி அமெரிக்கா கிளம்ப வேண்டியதான் என்று முடிவு செய்தார், நமோ நாராயணன். அப்போ நண்பர் மூலமா தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மூலமா ஒரு போன்கால் வருது. அதில் பேசிய நமோ நாராயணன் அடுத்து அமெரிக்கா போகும் முடிவை மாற்றிக் கொண்டார்.

எக்ஸிக்யூடிவ் புரொடியூசர் டு நாடோடிகள் நடிகர்!

Nadodigal
Nadodigal

நாடோடிகள் படம் ஆரம்பிக்கப்பட்ட நேரம். அதோட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மும்பைல பிசினஸ் பார்த்துட்டு இருந்தார். இங்க படத் தயாரிப்பை கவனிச்சுக்க ஒரு ஆள் தேவைப்பட்டது. அதனால் மைக்கேல் ராயப்பனும், சமுத்திரக்கனியும் கேட்டுக்கிட்டதுக்காக நாடோடிகள் படத்துக்காக எக்ஸிக்யூடிவ் புரொடியூசரா வேலை பார்க்க ஆரம்பித்தார் நமோ நாராயணன். சமுத்திரக்கனியும், நமோ நாராயணனும் 25 வருட நண்பர்கள். நாளை படப்பிடிப்புக்கு இன்னைக்கு ராத்திரியே எல்லாத்தையும் தயார் பண்ணிட்டு காலை 7 மணிக்கு டைரக்டர் முதல் ஷாட் வச்சிட்டாரானு கேட்டுத்தான் தூங்கப் போவாராம். மறுபடியும் மதியம் சரியாக 1 மணிக்கு ஸ்பாட்டுக்கு வந்துடுவார். காரில் வந்து இறங்கும்போது கதவை திறந்துவிட ஒரு ஆள், குடைபிடிக்க ஒரு ஆள், சூட்கேஸ் எடுத்துட்டு வர ஒரு ஆள்னு மைனர் மாதிரி வந்து இறங்கிவிடுவார், நமோ. ஒரு நாள் சசிக்குமார் சகதியில் புரளும் ஷாட்டில்  நடிக்க, சமுத்திரக்கனி இயக்க, கதிர் ஒளிப்பதிவு செய்ய என்று சகதி மயமாகி இருந்திருக்கிறார்கள். அப்போது ஸ்பாட்டுக்கு வந்திறங்கிய நமோ நாராயணனைப் பார்த்து, ‘மாப்ள இவன் என்னடா, வெள்ளையும் சொள்ளையுமா வர்றான், இவன எப்படியாவது அழுக்காக்கிடணும்’னு திட்டம் தீட்டி, நாடோடிகள் படத்துக்குள்ள கொண்டு வந்தது சசி-சமுத்திரகனி டீம். எவ்வளவோ மறுத்த நமோ நாராயணனை கடைசி வரை விடவே இல்லை, சமுத்திரக்கனி.

நாடோடிகள் என்ட்ரி!

Namo Narayanan
Namo Narayanan

நாடோடிகள் படத்துக்குள் வரும்போது சின்ன கேரெக்டராக இருந்த சின்னமணி ரோல் பெரிதானது. நாடோடிகள் படம் பண்ணும்போது இந்த கேரெக்டர் இவ்ளோ பெருசா வரும்னு நினைச்சுக் கூடப் பார்த்திருக்கவில்லை, நமோ. நாடோடிகள் படத்தில் இவர் நடந்து வரும் தோரணை, வெள்ளைக்காரர்கள் நடந்து வர்றது மாதிரி இருக்கும். முதல் நாள் கேமரா முன்னாடி கொஞ்சம் பயந்த அவரை சமுத்திரகனிதான் சொல்லிக் கொடுத்து தேற்றியிருக்கிறார். அப்புறம் அந்த படத்துல அவர் பண்ணினதெல்லாம் அதகளத்தின் உச்சம்.  சசிக்குமாரகிட்ட ‘சரவணா சரவணானு சொன்னா வந்துருவானா’னு பேசிட்டு பயத்தை முகத்துல காட்டாம நடிச்சதைப் பார்த்தா அதை முதல் ஷாட்னே சொல்ல முடியாது.  ‘செளக்கியமா… உனக்கு நான் செய்யாம வேற யாருயா செய்யப் போறா, ஆர்டர்தான எடுத்துக்க.. நல்லா பண்ணு’னு சொல்ற இடத்துல தியேட்டர்ல ஒரே க்ளாப்ஸ்தான். அதுக்குப் பின்னால ஈசன், நிமிர்ந்து நில், குட்டிப்புலி, கொம்பன், கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட 45 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

Namo Narayanan
Namo Narayanan

மலையாளம் மற்றும் தெலுங்கில் என்ட்ரி!   

மலையாளத்தில் ‘தாப்பனா’, ‘பையா பையா’னு ரெண்டு படங்கள் நடிச்சிருக்கார், நம்ம நமோ.  தாப்பனாவுல நடிச்சப்போ எப்பவுமே சரக்கடிக்கிற கேரெக்டர். ஸ்கூட்டர் டிக்கியிலயே மினி பார் செட்டப் வச்சு மம்முட்டியவே சரக்கடிக்க கூப்பிட்டு அதகளம் பண்ணியிருப்பார். ஒரு ஷாட்ல பதட்டத்துல 5 டேக் வாங்கியிருக்கார். மம்முட்டி, நமோவோட தோள்ல கையப் போட்டு, ஷாட்டோட டிரிக்கை சொல்லிக் கொடுத்தார். அதை சரியா செஞ்சு முடிச்சார், நமோ நாராயணன். அதேமாதிரி தெலுங்கிலயும் ‘ஜண்ட பை கப்பிராஜூ’ங்குற படத்துல நடிச்சிருக்கார், நமோ நாராயணன்.

நமோ நாராயணன் நடிப்புல உங்களுக்கு பிடிச்ச படம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க மக்களே.

Also Read – விமல் சொல்லிக்கொடுத்த 9 களவாணித்தனங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top