தோனி - ரவி சாஸ்திரி - கோலி

T20 World Cup: அஸ்வின் கம்பேக் நிகழ்ந்தது எப்படி… தோனியுடனான 90 நிமிட மீட்டிங்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2017-ம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்பின்னர் அஸ்வின் இந்திய டி20 அணியில் இடம் பிடித்திருக்கிறார். அதேபோல், ஷிகர் தவான், சஹால் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்படவில்லை.

டி20 உலகக் கோப்பை – இந்திய அணி

உலகக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருக்கிறது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான அந்த அணியில், ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். அதேபோல், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றிருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, உலகக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியின் மென்டாராகச் செயல்படுவார் என பிசிசிஐ பொருளாளர் ஜெய்ஷா அறிவித்திருக்கிறார்.

அஸ்வின் கம்பேக்!

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகளிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது விவாதப்பொருளாகியிருக்கிறது. இந்தசூழலில், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டிருக்கிறார். 2017-ம் ஆண்டுக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அஸ்வின் விளையாடி வருகிறார். ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அவருக்கு டி20 போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. எப்படி நடந்தது அவரின் கம்பேக்.

ரோஹித் ஷர்மா - அஸ்வின்
ரோஹித் ஷர்மா – அஸ்வின்

உலகக் கோப்பை டி20 தொடருக்கான அணித் தேர்வு குறித்து பிசிசிஐ ஆலோசனையைத் தொடங்கியபோது, கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகிய இருவருடனும் கலந்தாலோசனை செய்யப்பட்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக வலம்வரும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் கருத்தும் இதில் ரொம்பவே முக்கியம் என்பதை பிசிசிஐ நிர்வாகிகள் கவனத்துடன் செயல்படுத்தியிருக்கிறார். தோனி சக்ஸஸ்ஃபுல்லான கேப்டனாக வலம்வந்தபோது இந்திய அணியின் ஃபிளேவர் எப்படி சி.எஸ்.கே-வோடு பொருத்திப் பார்க்கப்பட்டதோ, அதேபோல் இப்போதைய இந்திய அணியின் கல்ச்சர் மும்பை இந்தியன்ஸ் அணியோடு பொருத்திப் பார்க்கப்படுகிறது. அதற்கேற்பவே, மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் 6 பேருக்கு இந்திய அணியில் இடம்கிடைத்திருக்கிறது.

விராட் கோலி, ரோஹித் ஷர்மா ம், தோனி
விராட் கோலி, ரோஹித் ஷர்மா ம், தோனி

ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து வரும் அஸ்வினுக்கு அணியில் இடம் வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. துணை கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த கருத்துக்கு வலு சேர்க்கவே, கேப்டன் விராட் கோலியும் அஸ்வினை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். கடந்த 2018-ல் ஐக்கிய அரபு அமீரத்தில் ஆசியக் கோப்பை தொடர் நடந்துகொண்டிருந்த போது ஜடேஜா ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கம்பேக் கொடுத்தார். அதுபற்றி பேசிய ரவீந்திர ஜடேஜா, `நான் விளையாடி 480 நாட்கள் ஆகிவிட்டன. இப்போது மீண்டும் அணியில் இடம் கிடைத்திருக்கிறது. இதை எப்போதும் மறக்க மாட்டேன்’ என்று கூறியிருந்தார். அப்போது, இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் ரோஹித் ஷர்மா. இப்போதும் நான்கரை ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அஸ்வினின் கம்பேக்குக்கு ரோஹித் ஷர்மா கொடுத்த ஆதரவும் ரொம்பவே முக்கியமானது.

தவான், சஹால்!

சமீபத்தில் இலங்கை சென்று ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ஷிகர் தவானுக்கு உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேபோல், சமீபகாலமாக ஃபார்ம் இல்லாமல் திணறி வரும் ஸ்பின்னர் சஹாலுக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் பெயர் காயம் காரணமாகப் பரிசீலனையில் இடம்பெறவில்லை. குல்தீப் யாதவும் பெயரும் பரிசீலிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இஷான் கிஷான், ராகுல் சஹார் ஆகியோர் முதல்முறையாக உலகக் கோப்பை டி20 தொடரில் விளையாட இருக்கிறார்கள். அதேபோல், கடந்த 2007-ம் ஆண்டு முதல் இப்போது வரையிலான அனைத்து டி20 தொடர்களிலும் பங்கேற்கும் வீரர் என்ற பெருமையை இந்திய துணை கேப்டன் ரோஹித் ஷர்மா இதன்மூலம் பெறுகிறார். இந்தவரிசையில் இருக்கும் மற்ற வீரர்கள், வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்லே, டிவைன் பிராவோ, வங்கதேசத்தில் மகமதுல்லா, முஷிஃபிகுர் ரஹ்மான்,

மென்டார் தோனி – 90 நிமிட மீட்டிங்!

2020 சுதந்திர தினத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற மகேந்திர சிங் தோனி, ஓராண்டுக்குப் பின்னர் இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்புகிறார். டி20 கிரிக்கெட்டில் தோனியின் ஜட்ஜ்மெண்ட்களுக்கு எப்போதும் ஒரு மரியாதை இருக்கும். இந்தநிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு தோனி உதவ வேண்டும் என்ற கோரிக்கையோடு பிசிசிஐ நிர்வாகிகள் அவரை அணுகியிருக்கிறார்கள். முக்கியமாக, பிசிசிஐ பொருளாளர் ஜெய் ஷா, துபாயில் தோனியைச் சந்தித்து 90 நிமிடங்கள் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பில் பிசிசிஐ தரப்பிலான கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது தோனியால் உடனடியாக ஓக்கே சொல்ல முடியவில்லை என்கிறார்கள். அதேநேரம், இந்திய அணி நிர்வாகத்திடமிருந்து வந்த கோரிக்கையையும் அவரால் நிராகரிக்க முடியவில்லையாம்.

தோனி
தோனி

இதனால், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க தனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்பதைக் கேட்டதாகச் சொல்கிறார்கள். அதன்பின்னர், நன்கு ஆலோசித்தே பிசிசிஐ-யின் கோரிக்கைக்கு இசைவு தெரிவித்திருக்கிறார். உலகக் கோப்பை டி20 தொடரின்போது இந்திய அணியுடன் தோனி இருப்பது வீரர்களுக்கு மனரீதியாக ஒரு பலத்தைக் கொடுக்கும். கடினமான சூழல்களையும் கூலாக சமாளிக்கும் தோனியின் வியூகம் இளம் வீரர்கள் பலருக்கு உத்வேகமாக இருக்கும் என்று பிசிசிஐ நம்புகிறது.

அதேபோல், 2017-18 காலங்களில் விராட் கோலி கேப்டனாக இருந்தபோது தோனியின் முடிவுகளுக்கு மதிப்பளித்தே வந்திருக்கிறார். அதனால், இவர்கள் இருவர் இடையேயான உறவும் சுமூகமாக இருக்கும். உலகக் கோப்பை டி20 தொடரோடு பயிற்சியாளர் பதவிக் காலம் முடியும் நிலையில், ரவி சாஸ்திரியும் தோனியின் முடிவுகளுக்குத் தடையாக இருக்க நினைக்க மாட்டார் என்று பிசிசிஐ நினைக்கிறது.

தோனி சம்மதம் தெரிவித்தது குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, “உலகக் கோப்பை டி20 தொடரில் தோனியின் அனுபவத்தைப் பயன்படுத்த, அவர் அணியில் இணைந்தது உதவும். இந்தத் தொடரில் அணிக்கு உதவ வேண்டும் என்ற பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தோனிக்கு நன்றி’’ என்று தெரிவித்திருக்கிறார். இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு மட்டும் இந்திய அணியின் மென்டாராக தோனி செயல்படுவார்.

Also Read – ரவிச்சந்திரன் அஸ்வின்: `எனக்கா ரெட் கார்டு… எடுத்துப் பாரு ரெக்கார்டு’ – சர்ச்சையான கோலியின் முடிவு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top