ஆன்லைன் கால்டாக்ஸிகளான ஓலா, உபர் நிறுவனங்களுக்குப் போட்டியாக மக்கள் பயன்பெரும் வகையில் கேரள அரசால் ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடு தான் கேரளா சவாரி. கேரளா சவாரி என்பது என்ன? அதில் பயணிகளின் பாதுகாப்பு எந்த அளவிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது? என்பதைப் பற்றி தான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
இன்றைக்கு நகரத்தில் வசிக்கும் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ஆப்களில் ஓலா, உபர் போன்ற கால் டாக்ஸி ஆப்களும் உள்ளன. வேலையில்லா இளைஞர்களுக்கு குறைந்தபட்ச பகுதிநேர வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததிலும் இந்த நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த நிலையில், இந்நிறுவனங்களுக்கு போட்டியாக, இந்தியாவிலேயே முதன் முறையாக கேரள அரசு ஆட்டோ, டாக்ஸி சேவைகளை நடைமுறைபடுத்தியுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்த இந்த சேவையில் திருவனந்தபுர மாநகராட்சியில் 321 ஆட்டோக்கள், 228 கார்கள் உட்பட 541 வாகனங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டமானது, முதலில் திருவனந்தபுரத்தில் தொடங்கி அடுத்த ஒரு மாதத்தில் கொல்லம், கொச்சி, திருச்சூர், கோழிக்காடு மற்றும் கண்ணூர் என விரிவுபடுத்தப்படவுள்ளது.
தாராளமயமாக்கல் கொள்கைகள் நமது தொழில் துறையையும், தொழிலாளர்களையும் பாதித்து வரும் சூழலில் டாக்ஸி தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலை தடுப்பதற்காக தொழிலாளர் துறையால் நடைமுறைபடுத்தப்பட்ட திட்டமே இந்த கேரளா சவாரி என கேரள தொழிலாளர்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
கேரளா சவாரி திட்டத்தின் மூலம் ஓட்டுநர்களுக்கு பெட்ரோல் – டீசல் விலை, வாகன காப்பீடு, வாகனத்தின் டயர் மற்றும் பேட்டரி போன்றவற்றில் தள்ளுபடி வழங்குவது குறித்தும் பரிசீலனைகள் செய்வதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மற்ற ஆன்லைன் செயலிகள் சவாரி கட்டணத்தை இறக்கி ஏற்றுவது போல எந்தவித கட்டண உயர்வும் கேரளா சவாரியில் இருக்காது. பிற ஆன்லைன் டாக்ஸிகளுக்கு 20 முதல் 30 சதவிகிதம் வரை கட்டணம் வசூலித்து வரும் நிலையில், கேரள சவாரியில் கேரள அரசு வெறும் 8 சதவிகிதம் மட்டுமே கமிஷன் பெறுகிறது. அவ்வாறு வசூலிக்கும் கட்டணத்தொகையை இத்திட்டத்தைச் செயல்படுத்தவும், பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு ஊக்குவிப்பு சலுகைகளை வழங்கவும் பயன்படுத்தப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரள அரசு, ஓட்டுநர் மற்றும் பயணிகளின் பாதுக்காப்பை உறுதி செய்யும் வகையில் கேரளசவாரி திட்டத்தில் இணையும் டாக்ஸிகளில் மானிய விலையில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த முடிவுசெய்துள்ளது. இதற்காக மோட்டார் தொழிலாளர் நல வாரிய மாவட்ட அலுவலகத்தில் அதிநவீன கால் சென்டர் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது.
கேரள அரசு, கேரளா சவாரியை மேற்கொள்ளும் பெண்கள், குழந்தைகள் மர்றும் மூத்த குடிமக்களுக்கு தரமான சேவையை தர வேண்டும் என்பதனை நோக்கமாக கொண்டு இத்திட்டத்தில் சேரும் ஓட்டுநர்களுக்கு ‘போலீஸ் அனுமதி சான்றிதழ்’ கட்டாயமாக்கப்பட்டதோடு முறையான பயிற்சியையும் வழங்கவுள்ளது.
பயணிகளின் அச்சத்தை போக்கும் வகையில் ஆன்லைன் செயலியில் பேனிக் பட்டனை அமைத்துள்ளது. பேனிக் பட்டன் என்பது, பயணிகள் பயணம் மேற்கொள்ளும் போது ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் இதனை அழுத்தி தகவல் தெரிவிக்கலாம். அதாவது பயணிகள் இதனை அழுத்தும் போது ஓட்டுநருக்கும், ஓட்டுநர் இதனை அழுத்தும் போது பயணிகளுக்கும் தகவல் செல்லாதபடி இந்த பேனிக் பட்டனானது வடிவமைக்கப்பட்டுள்ளது. பொத்தானை அழுத்தியவுடன் தகவல் ஆனது காவல் துறை, தீயணைப்பு துறை, என ஏதாவது ஒரு துறைக்கு அதாவது எந்த துறையில் இருந்து உதவி தேவையோ அந்த துறைக்கு சென்றடையும். உடனடியாக உதவி தேவைப்படும் காலகட்டத்தில் எந்தவொரு ஆப்ஷனையும் தேர்வு செய்யாமலேயே தகவலை காவல் துறைக்கு இணைக்க முடியும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: நமஸ்தே ட்ரம்ப்: 2 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த பதில்… செலவு இவ்வளவா?!