‘நாம பேசக்கூடாது நம்ம படம்தான் பேசணும்’னு எஸ்.ஜே.சூர்யா இறைவி படத்தில் சொல்லியிருப்பார். இதைத்தான் ஃபாலோ செய்தார் எஸ்.ஜே.எஸ். 1988-ல் நெத்தியடி, 1993-ல் கிழக்கு சீமையிலே, 1995-ல் ஆசை என இந்த படங்களில் எல்லாம் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருந்தார். அதன் பிறகு 4 வருடங்கள் கழித்து வாலி படத்தை இயக்கினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். அஜித்தின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்ததோடு பல விருதுகளையும் பெற்றுத் தந்தது. அப்படியே ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து இப்போது வந்தால் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. நடிப்பில் பல்வேறு வேரியேஷன், இயக்கத்தில் பல்வேறு வேரியேஷன் என தான் இயக்கிய படங்களிலும் சரி, தான் இயக்கி நடித்த படங்களிலும் சரி, மற்ற இயக்குநர்கள் படத்தில் வெளிப்படுத்தும் நடிப்பும் சரி… இப்படி வெரையிட்டிக்கே வெரைட்டி… இவர் யார் என்பதை அலசி ஆராய்வதுதான் இந்தக் கட்டுரை.
இயக்குநரின் ஹீரோ
மற்ற இயக்குநர்களின் படங்களில் இவர் முதலில் நடித்த படம் திருமகன். அதைத் தொடர்ந்து வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி, இறைவி, மான்ஸ்டர் கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை. மற்ற இயக்குநர்களின் படத்தில் இவரை கதாநாயகனாக பார்த்தால் இவரது கிராஃப் கொஞ்சம் அப்ஸ் அண்ட் டவுன்ஸ் இருக்கும். முதல் படம் திருமகன் படமே படுதோல்வி. அதைத் தொடர்ந்து வெளியான வியாபாரி கலவையான விமர்சனங்களை பெற்றது, நியூட்டனின் மூன்றாம் விதி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகுதான் இறைவியிலும் மான்ஸ்டர் படத்திலும் வெளுத்து வாங்கியிருந்தார். இறைவி படத்தில் மூவரின் வாழ்க்கையை எடுத்துச் சொன்ன படமாக இருந்தாலும் இவரது பர்ஃபாமன்ஸ் இவரது நடிப்பை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றது. அதைத் தொடர்ந்து 2019-ல் வெளியான மான்ஸ்டர் படத்தின் மூலம் ஃபேமிலி ஆடியன்ஸையும் இவர் பெற்றிருந்தார்.
சொந்தப் படத்தின் ஹீரோ :
மற்ற இயக்குநர்களின் படங்களில் இவர் நடிப்பதற்கும் இவரே இயக்கி இவர் நடித்த இரு படங்களுக்கும் பயங்கரமான வித்தியாசத்தை நம்மால் உணர முடியும். நியூ, அன்பே ஆருயிரே என தான் இயக்கி நடித்த இரண்டு படங்களிலுமே பட்டையைக் கிளப்பி செம ஜாலியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். நியூ படம் முழுக்க அடல்ட் கன்டென்ட். டாம் ஹேங்ஸ் நடிப்பில் வெளியான பிக் படத்தின் தழுவல்தான் நியூ. நம்ம ஊர் மசாலாவை சேர்த்து ஃபேன்டசி, அடல்ட் கன்டென்ட், காமெடி என கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தி கலவையான விமர்சனங்களையும் பெற்றது. படத்தில் உள்ள அடல்ட் கன்டென்ட்டிற்காக இரு வருடங்கள் போலீஸ் கேஸ் என்று கூட அலைந்திருக்கிறார். அதற்கு அடுத்தது அன்பே ஆருயிரே. நியூ படத்தை போல் இந்த படத்திற்கு சர்ச்சைகள் வெடித்தது. BF என்பதற்கு அந்த காலடத்தில் வேறு ஒரு விரிவாக்கம் உள்ளது. ஆனால் அப்போது அதை பெஸ்ட் ஃப்ரெண்ட் என்று மாற்றினார். லிவ்வின் ரிலேஷன்ஷிப், ஆல்டர் ஈகோ என இந்த படம் டீனேஜ் பிரச்னைகளை பற்றி பேசியது. கடைசியாக இசை. நியூ இயர் பாடல் என்றாலே சகலகலா வல்லவன் படத்தின் இளைமை இதோ பாடல்தான் டிரேட் மார்க் என்றாகிவிட்டது. அதைப்போலவே இந்த படத்திலும் உள்ள புத்தாண்டின் முதல் நாள் இது பாடலும் கொண்டாடப்பட வேண்டும். இசைக்கு இசை அமைத்தவரும் இவர்தான். ஈகோ பிடித்த ஒரு இசையமைப்பாளருக்கும் அவரிடம் அசிஸ்டன்ட் ஆகி சாதித்த இன்னொரு இசையமைப்பாளருக்கும் இடையே நடக்கும் சண்டைதான் இசை. மொத்தத்தில் தான் இயக்கி தானே நடிக்கும் படங்களில் இவர் முழு சுதந்திரத்தோடு எந்த வித ஹெசிடேஷனும் இல்லாமல் செம ஜாலியான கலாய் நடிப்பை வெளிப்படுத்துவார். நீங்க வரணும், பழைய ஆக்டர் கம் டைரக்டரா நீங்க வரணும்.
வில்லன்
எஸ்.ஜே.சூர்யா எனும் வில்லனிஸ வில்லனை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஃபேஷியல் எக்ஸ்ப்ரஷனில் ஆரம்பித்து காமெடி டயலாக் டெலிவரி வரை இன்ச் பை இன்ச் அந்த கதாபாத்திரத்தை உள் வாங்கி உள்ளே போய் பிரித்து மேய்ந்திருப்பார். ஒரு படத்தின் வில்லன் மீதான் பார்வையை நமக்கு வாலி படத்திலேயே கடத்திவிட்டார். அதனுடைய extended version ஆஃப் எஸ்.ஜே.சூர்யாவைத்தான் நாம் அடுத்தடுத்து இவர் வில்லனாக நடிக்கும் படங்களில் பார்த்தோம். அந்த மாதிரி ஓரளவு வில்லனிஸ நடிப்பை இவர் வெளிப்படுத்திய முதல் படம் இறைவி.
ஆனால், அந்த கதாபாத்திரத்தை முழுக்க நாம் வில்லன் என்ற பிம்பத்தில் அணுகிவிட முடியாது. அவருக்குள் இருக்கும் விரக்தி அதனால் அவர் வெளிப்படுத்தும் கோபம் என்றுதான் பார்க்க முடியும். இவரை ஒரு படுபயங்கரமான வில்லன் என்று நாம் பார்த்த படம் ஸ்பைடர். பேட்மேன் மற்றும் ஜோக்கர் படத்தின் தழுவல் என்ற விமர்சனங்கள் இருந்தாலும் அந்த படத்தை மொத்தமாக தாங்கிப் பிடித்திருந்தது இவரது நடிப்பு. படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்துதான் படத்திலே இவர் வருவார். இவருக்கென்று இசைக்கப்படும் இழவு இசை, கதிகலங்க வைக்கும் செயல்கள், உடல்மொழி, டயலாக் டெலிவரி என இவரது மொத்த வில்லனிஸத்தையும் வெளிப்படுத்தியது இவரின் நடிப்பு. நியூ படத்தின் தெலுங்கு ரீமேக்கான நானி படத்திற்கு பிறகு மகேஷ் பாபுவோடு இவர் நடித்த படம் இது. அடுத்தது மாநாடு. நீ சும்மா நடந்து மட்டும் வா மத்தது எல்லாம் நான் பார்த்துக்குறேன் என யுவன் சொல்லாமல் சொன்னது போல் இவருக்கு பிஜிஎம் போட்டிருப்பார். நகைச்சுவை வசனங்களோடு இவரது நடிப்பும் படத்திற்கு வேற லெவல் மேஜிக்கை சேர்த்தது.
இயக்குநர்
பல வருட கஷ்டத்திற்கு பிறகு இவர் இயக்கிய படம் வாலி. அதுவரை ஆசை நாயகன், சாக்லெட் பாய், லவ்வய் பாயாக மட்டுமே பார்க்கப்பட்ட அஜித்தை முற்றிலும் வேறு மாதிரியான ஒரு அஜித்தாக நமக்கு காட்டியவர் எஸ்.ஜே.சூர்யா. அதுவும் அண்ணன் அஜித்தாக நடித்தவருக்கு ஒரு வசனம் கூட இல்லாமல் வெறும் பாக்கு மெல்வதை மட்டுமே வைத்து வில்லனிஸத்தை வெளிப்படுத்தியிருப்பார். இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் அஜித் இவர்களுக்கு இணையாக பாராட்டப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான ஆள் தேவா. பல வெரைட்டிகளை வெளிப்படுத்தி திடுக் திடுக் என இசையமைத்திருப்பார். அடுத்தது குஷி. அஜித்துக்கு ஒரு ப்ளாக்பஸ்டர் பார்சல் என்பதைப்போல் விஜய்க்கும் ஒரு ப்ளாக்பஸ்டர் பார்சல் என்று அமைந்த படம் குஷி. இந்த படங்களும் அஜித், விஜய், எஸ்.ஜே.சூர்யா என மூவருக்குமே மிக மிக முக்கியமான படங்கள்.
Also Read – `கொக்கி குமார் முதல் ராம்சே வரை…’ – `Thug life’ மொமன்ட்ஸ் ஆஃப் செல்வராகவன்!