தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் அல்லது NSG கமாண்டோ படை என்பது அவர்களது உடையின் நிறத்தால் கறுப்புப் பூனைப் படை என்றும் அழைக்கப்படுகிறது. தேசிய அளவில் தீவிரவாத எதிர்ப்பில் முன்னணியில் நிற்கும் இந்தப் படை ஜீரோ எரர் பாலிஸியோடு செயல்படுபவை. அவர்கள் டிரெய்னிங் எப்படியிருக்கும் தெரியுமா?
NSG கமாண்டோ படை வரலாறு
தேசிய அளவில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரத்யேகமான ஒரு படையை உருவாக்க வேண்டும் என 1984-ல் மத்திய அமைச்சரவைக் குழு முடிவெடுக்கிறது. பிரத்யேக திறமைகளுடன் கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் முன்னிலையில் நின்று எதிர்க்கொள்ளும் சிறப்புப் படையை உருவாக்க NSG-க்கென தனி டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட பதவிகள் 1984-ம் ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கப்பட்டன. அதன்பின்னர், சிறப்பு தனிப்படையாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டன. இதற்காக தனி சட்டம் நாடாளுமன்றத்தில் 1986-ம் ஆண்டு ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, 1986-ம் ஆண்டு செப்டம்பர் 22-ல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு அமலாக்கப்பட்டது. அந்த நாளே NSG கமாண்டோ படை உருவாக்கப்பட்ட நாளாகக் கருதப்படுகிறது.
NSG கமாண்டோ படை அடிப்படை என்பது எந்தவொரு கடினமான சூழலிலும் குறுகிய நேரத்தில் முடிவெடுத்து உடனடியாக நடவடிக்கையைத் தொடங்கி களத்தின் முன் நிற்க வேண்டும் என்பதுதான். இந்தியா முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் எந்தவொரு இடத்திலும் முழு அதிகாரம் பெற்ற தனிப்பெரும் சிறப்புப் படையாக NSG கமாண்டோக்கள் களத்தில் நிற்பார்கள். இதுவே அவர்களது முழு நேரப் பணி. `Sarvatra Sarvottam Suraksha’- இதுவே அந்தப் படையின் மோட்டோ. எந்த நேரமும் விழிப்புடன் இருந்து திவீரவாதத்துக்கு எதிரான போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பது இதன் அடிப்படை நோக்கம்.
NSG கமாண்டோ படையின் பிரிவுகள்
இங்கிலாந்தின் தீவிரவாத எதிர்ப்பு சிறப்புப் படையான SAS மற்றும் ஜெர்மனியின் சிறப்புப் படையான GSG-9 ஆகியவற்றை முன்மாதிரியாகக் கொண்டு NSG கமாண்டோ படை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதில், இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ராணுவ வீரர்கள் அடங்கிய முன்களப் படையான Special Action Group (SAC), மத்திய பாதுகாப்புப் படை, மாநில அரசின் போலீஸ் படை வீரர்கள் அடங்கிய Special Rangers Group (SRG). இந்த இரண்டு பிரிவுகளும் பிரத்யேக திறன்களுடன் கூடிய கடினமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
வீரர்களின் டிரெய்னிங்
NSG கமாண்டோ ஆவதற்கான பயிற்சிகள் உலகின் கடினமான பயிற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பயிற்சியின்போது டிராப் – அவுட் எனப்படும் பாதியிலேயே வெளியேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை மட்டுமே 70- 80% என்கிறார்கள். மொத்தம் 14 மாதங்கள் இதற்கான பயிற்சியில், முதல் 3 மாதங்கள் ஹரியானாவின் மானேசரில் இருக்கும் பிரத்யேக கேம்பில் ஃபிட்னெஸுக்காகப் பயிற்சியளிக்கப்படுகிறது.
இதில், உயரமான இடங்களில் ஏறுதல், உயரத்தில் இருந்து குதித்தல், கடுமையான உடற்பயிற்சி என 26 வகையான பயிற்சிகள் இருக்கின்றன. பெரும்பாலானோர் முதல் 3 மாதங்களைத் தாக்குப்பிடிப்பதே கடினம் என்று சொல்கிறார்கள்.
இதுதவிர MMA எனப்படும் மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ், பிலிப்பைன்ஸின் Pekiti-Tirsia Kali எனும் தற்காப்புக் கலை, பிரேசிலின் Jiu-Jitsu மார்ஷியல் ஆர்ட்ஸ் போன்ற தற்காப்புக் கலைகள் பிரத்யேக டிரெய்னர்கள் மூலம் வீரர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. டார்கெட் ஷூட்டிங், தடைகளைத் தாண்டி முன்னேறுதல் உள்ளிட்டவைகள் அடுத்தகட்ட பயிற்சியில் இடம்பெற்றிருக்கின்றன. அதையடுத்து, கடினமான ஸ்ட்ரெஸ், மனச்சோர்வு போன்ற கடினமான சூழல்களை சமாளிக்கும் திறன், அதுபோன்ற சூழ்நிலையில் முடிவெடுக்கும் திறன் போன்றவையும் பரிசோதிக்கப்படும்.
தூக்கம் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையிலும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதேபோல், பயிற்சியின்போது சில வாரங்களில் ஒரு நாளைக்கு 2-3 மணி நேரம் மட்டுமே இவர்கள் தூங்க அனுமதிக்கப்பட்டு அந்த நேரத்தில் சில ஃபிட்னெஸ் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்க்கொண்டு சிறப்பாகச் செயல்படும் நோக்கில் இந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதிகப்படியான எடையை சுமந்துகொண்டு ஒரே இடத்தில் பல மணிநேரம் நிற்கவைத்தும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதையடுத்து, 9 மாதங்கள் கொண்ட அட்வான்ஸ்டு டிரெய்னிங்குக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்த பயிற்சிகளையெல்லாம் முடித்து NSG காமாண்டோ படையில் சேர்வதற்கு முன்பாக, கடுமையான சைக்காலாஜிக்கள் டெஸ்டுக்கும் இவர்கள் உட்படுத்தப்படுகிறார்கள்.
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், தண்ணீருக்குள் டிரெய்னிங், ஹவுஸ் இண்டர்வென்ஷன் எனப்படும் அதிரடியாக ஒரு இடத்தில் நுழைந்து சுற்றி வளைப்பது, ஏவுகணை எதிர்ப்பு, ட்ரோன்களை எதிர்ப்பு ஆபரேஷன்கள், வெடிகுண்டைக் கைப்பற்றுவது மற்றும் செயலிழக்கச் செய்வது உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகளும் இவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்து படையில் சேரும் வீரர்களுக்கு மாதாந்திர அடிப்படையிலோ அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறையோ சுழற்சி முறையில் டெஸ்ட் நடத்தப்படுகிறது. அவர்களின் பயிற்சி, திறன் ஆகியவை இதன்மூலம் கணக்கிடப்படுகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப் படையுடன் இணைந்து 3 வார சிறப்பு பயிற்சியை என்.எஸ்.ஜி கமாண்டோ படையினர் மேற்கொண்டனர். Balanced Iroquois என்ற பெயரில் அறியப்பட்ட இந்த ஸ்பெஷல் டிரெய்னிங்கில் அமெரிக்க வீரர்கள், நமது படை வீரர்கள் திறனைக் கண்டு வியந்திருக்கிறார்கள். அதேபோல், 2018-ல் கொல்கத்தா மெட்ரோ நிலையத்தில் நடந்த கூட்டு பயிற்சியிலும் அமெரிக்க வீரர்களை வாயடைக்கச் செய்திருக்கிறார்கள் நமது NSG கமாண்டோ படை வீரர்கள்.
2008 மும்பை தாஜ் ஹோட்டல் தீவிரவாதத் தாக்குதலின்போது NSG கமாண்டோ படை வீரர்கள் செயல்பாடு குறிப்பிடத்தக்கது. தாஜ் ஹோட்டலில் புகுந்து தீவிரவாதத் தாக்குதலை நேரடியாக எதிர்க்கொண்டு சமாளித்த NSG கமாண்டோ வீரர்கள் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினர்.
Also Read – Bharat Net திட்டம் என்றால் என்ன… சிறப்பம்சங்கள்!