`நாள்கள் எவ்வளவு வேகமா போகுது பாத்தீங்களா?!’ – இந்த டயலாக்கை நினைக்காத ஆள்களே இருக்க முடியாது. ஏன்னா.. ஒவ்வொரு நாளும் அவ்வளவு வேகமா நம்மள கடந்து போகுது. 2020-ம் ஆண்டு எப்போ முடிஞ்சுதுனு நினைக்கிறதுக்குள்ள 2021-ம் ஆண்டுல பாதி மாதங்கள் முடிஞ்சிடுச்சு. 2021-ம் ஆண்டு புது வருஷம் கொண்டாடிட்டு படுத்து தூங்கி எழும்பி உட்கார்ந்தா ஜூலை மாதம் வந்து நிக்கிற மாதிரி இருக்குது. வழக்கம்போல நாம 2021-ம் ஆண்டு செய்ய வேண்டிய விஷயங்கள்னு பெரிய லிஸ்ட் போட்ருப்போம். அதெல்லாம் சரியா செய்திருப்பமானு தெரியாது. ஆனால், உங்க ஒவ்வொரு நாளையும் பாஸிட்டிவா அமைச்சுக்குறது மூலமா நீங்க செய்ய வேண்டிய விஷயங்களை முறையாக செய்ய முடியும். நான் சொல்லப்போறது ஒண்ணும் புதுசு இல்ல.. இருந்தாலும் நான் சொல்றேன். நீங்க கேளுங்க. ஆமாங்க, ஒவ்வொரு நாளையும் எப்படி பாஸிட்டிவா ஆரம்பிக்கிறதுன்றது பத்திதான் இந்தக் கட்டுரைல நாம தெரிஞ்சுக்கப்போறோம்!
* நீங்கள் தூங்குவதற்கு முன்பு அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளுக்கான குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாள் இரவும் இதற்கென குறைந்தது 15 நிமிடங்களை செலவிடுங்கள். இதனால், அடுத்தநாள் பதற்றத்துடன் வேலைகளை செய்ய வேண்டிய நிலை ஏற்படாது. எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும்னு சொல்றது இதுக்குதான். அன்றைய நாள் நடந்த நிகழ்வுகளையும் ஒரு டைரியில் எழுதுங்கள். இதன்மூலம் உங்களது மனதில் இருக்கும் பதற்றமான நிலை கொஞ்சம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். சோ, எழுதுறத மறக்காதீங்க!
* எண்ணங்கள்தான் உணர்வுகளைத் தீர்மானிக்கின்றன. மகிழ்ச்சியான எண்ணங்கள் மகிழ்ச்சியான உணர்வுகளையே உருவாக்குகின்றன. நீங்கள் தினமும் எழுந்தவுடன் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் விஷயங்களை எண்ணிப் பாருங்கள். இதனால், அந்த நாள் முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கும். நன்றியுணர்வோடு எப்போதும் இருங்கள். எதிர்மறையான சிந்தனைகளில் சிக்கிக்கொள்வது எளிதானது. இதனால், உங்களிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் மறைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு நாளும் சுமார் 60,000 எண்ணங்கள் நம்முள் உருவாவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த எண்ணங்களோடு குறைந்த அளவு ஈடுபாட்டை நீங்க காட்டுவது முக்கியமானது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இக்னோர் நெகட்டிவிட்டிங்க. அவ்வளவுதான்!
* மனதளவில் மட்டுமில்லாது உடலளவிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். காலையில் எழுந்தவுடன் யோகா செய்வது, மசாஜ் செய்வது, நல்ல குளியலை எடுத்துக்கொள்வது போன்றவற்றை செய்யலாம். இதனால், உடலளவிலும் உங்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படும். யோகா என்றவுடன் மிகப்பெரிய அளவில் நீங்கள் செய்ய வேண்டும் என்றுகூட அவசியமில்லை. எளிதாக இருந்த இடத்தில் இருந்தே மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மன அழுத்தங்கள் அதிகரிக்கும்போது மூச்சுப் பயிற்சிகளை நீங்கள் செய்தால் மன அழுத்தத்தில் இருந்து கொஞ்சம் நீங்கள் ரிலாக்ஸ் ஆகலாம்.
* காலையில் எழுந்தவுடன் சமூக வலைதளங்கள் மற்றும் இ மெயில்களை முதலில் பார்க்கும் நபரா நீங்கள்? – இப்படி செய்வதை உடனடியாக நிறுத்துங்கள். இவ்வாறு செய்வதால் நீங்கள் அந்த நாளில் நிதானமாகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில், சமூக வலைதளங்களில் முதலில் நீங்கள் பார்க்கும் விஷயங்கள் உங்களுக்குள் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, காலை எழுந்தவுடன் சமூக வலைதளங்களை பார்வையிடுவதில் இருந்து கொஞ்சம் விலகி இருக்கலாம். அதேபோல, எழுந்தவுடன் உங்களது மொபைலை எடுத்துப் பார்க்காமல் கொஞ்சம் நேரம் தள்ளி உங்களது மொபைலை எடுத்து பார்க்கலாம். ஏனெனில், டெக்னாலஜி மனதளவிலும் ஆற்றல் அளவிலும் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும் என்கிறார்கள்.
* சமூக வலைதளங்களில் உங்களது நேரத்தை செலவழிப்பதற்கு பதிலாக சமையலறையில் நல்ல அழகான சுவையான பிரேக்ஃபாஸ்ட் ஒன்றைத் தயாரிக்க உங்களது நேரத்தை ஒதுக்குங்கள். புரதம் மிகுந்த சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
* நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் உங்களது காலை வேளையை கொஞ்சம் செலவிடுங்கள். இதனால், மகிழ்ச்சியாக ஸ்ட்ரெஸ் இல்லாமல் உங்களது நாள் தொடங்கும். ஏனெனில், செல்லப் பிராணிகளுடன் விளையாடும்போது உங்களது கவலைகளை மறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
* உங்களுக்கு ஊக்கமளிக்கும் விஷயங்களை / புத்தகங்களை படிப்பதை காலை வேளைகளில் வழக்கமாக கொண்டிருக்கலாம். இதனால், நீங்கள் அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். அந்த நாளில் வரும் எதிர்மறையான விஷயங்களை சமாளிப்பதற்கான ஆற்றம் கிடைக்கும். அதேபோல, சிறந்த பாட்காஸ்டுகளையும் நீங்கள் கேக்கலாம்.
மேற்கூறப்பட்ட விஷயங்களைத் தவிர வேற என்ன விஷயங்களை நீங்க உங்க நாளை பாஸிட்டிவாக மாற்ற பின்பற்றுறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க மக்களே!
Also Read : மென்டார் ரோல், ஃபேஷன் டிப்ஸ்… கேர்ள் பெஸ்டி இருந்தா எவ்வளவு நன்மைகள்?!