`உச்சி முதல் வேர் வரை’ அனைத்துப் பாகங்களிலும் மனிதனின் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய வளங்களைக் கொண்டுகற்பகத் தரு’ என்னும் சிறப்பைக் கொண்டது, பனை மரம். இந்தியாவில் உள்ள மொத்தப் பனைமரங்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் தமிழகத்திலும், அதிலும் குறிப்பாக தென்மாவட்டங்களிலும் இருந்தன. கடும் வறட்சியையும் தாங்கி வளர்ந்து நிலத்தடி நீரைப் பாதுகாக்க வல்லது இம்மரம். தமிழகத்தின் மாநில மரமும்கூட. ஆனால் இன்றோ, இதன் எண்ணிக்கையில் பெரும்பகுதியை நாம் இழந்திருக்கிறோம்.
கட்டுமானத் தேவை, செங்கல் சூளைக்கான விறகுகளின் தேவை ஆகிய காரணங்களால் பனைமரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டன. இதனால் பனைகளை நம்பி வாழ்ந்த பனைத் தொழிலாளர்களும் வேலை இழந்து தவித்தனர். இதையடுத்து பனைமரங்களின் அழிவைத் தடுத்து, அதன் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டியதன் அவசியத்தை பனை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக பல்வேறு இயக்கங்கள் சார்ந்து பனை விதைகளை நடவு செய்து வருகிறார்கள். ஆனால் நடவு செய்த பின்னர், அந்த விதைகள் வளர சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

சாதாரண மரக்கன்றை நடவு செய்வது போல் பனை விதைகளை நடவு செய்துவிட முடியாது. பனையை விதைக்கும்போது மரத்துக்கு மரம் பத்து அடி இடைவெளி இருக்குமாறு விதைத்திருக்கிறார்கள். அதனால்தான், `பனைக்குப் பத்தடி’ என்ற சொலவடை உருவாகியிருக்கிறது. பனை வறட்சியைத் தாங்கி வளரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், பனைக்கும் நிச்சயமாகப் பராமரிப்பு தேவைப்படும். பனை மரங்களை முறையாகப் பராமரிக்காவிட்டால், பலன் கொடுக்கும் காலம் தாமதமாகும். சரியாக ஜூன் முதல் நவம்பர் மாதம் வரைக்கும் பனை விதைப்பைச் செய்யலாம். நடவு செய்த ஒன்றிரண்டு மாதங்களில் குருத்து விட ஆரம்பிக்கும். மேல் பகுதியில் எவ்வளவு குருத்துகள் வருகிறதோ அதற்கான இரண்டு மடங்கில் வேர்கள் பூமிக்குள் வளரத் தொடங்கும். நடவு செய்ததில் இருந்து ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ பனை விதை உள்ள குழியை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். பனை மட்டுமல்ல, நடவு செய்த எல்லா விதைகளும் வளர நீர் நிச்சயமாகத் தேவை. ஆனால், பனையின் ஆரம்பகாலக்கட்டத்தில் பனைக்குக் கொஞ்சம் அதிகமாகவே நீர் தேவைப்படுகிறது. மழைப்பொழிவு சரியாக இருக்கும் காலகட்டத்தில் குறைவான தண்ணீரே போதுமானது.
பனை மரம்: விதை தேர்வு – எப்படி நடவு செய்வது?
குலையில் இருக்கிற சில பழங்கள் சரியாகப் பழுக்காமல் இருக்கும். அதனால், பறித்த பனம்பழங்கள் எல்லாத்தையும் ஓர் இடத்தில் குவித்து வைத்து, சணல் சாக்குப்போட்டு மூடி வைத்தால் சீராகப் பழுத்துவிடும். அதன் பின்னர், பனம்பழங்களைப் பிதுக்கிக் விதைகளைத் தனியாக எடுக்கவேண்டும். ஒவ்வொரு பனம்பழத்திலும் ஒரு விதையிலிருந்து மூன்று விதைகள் வரை இருக்கும். நீளமான விதை சீக்கிரம் முளைத்து வரும். அதே மாதிரி குட்டையான மரத்திலிருந்து கிடைக்கிற விதைதான் நல்லது. ஏனெனில், குட்டை மரத்தில்தான் அதிக பதநீர் கிடைக்கும்.

பிதுக்கி எடுத்த விதைகளைப் பத்து நாள்கள் வெயிலில் உலர வைத்து… சூம்பின விதைகள், வண்டு துளைத்த விதைகளைக் கழித்துவிட்டு தரமான விதைகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். பத்தடி இடைவெளியில் ஓர் அடி சதுரம், ஒன்றரை அடி ஆழத்தில் குழி எடுத்துக் விதையின் கண் பாகம் கீழ் நோக்கி இருக்கும்படி விதைக்கவேண்டும். கொஞ்சம் எரு போட்டு விதைத்தால் முளைப்பு நன்றாக இருக்கும். விதை நடவு செய்ததிலிருந்து நான்கு மாதம் கழித்து, கிழங்கு முளைத்து வரும். அடுத்து வேர் உருவாகும். நாலாவது மாதத்தில் நிலத்துக்குமேல் இரண்டு குருத்து ஓலை தென்படும். பனை வளர வளர பக்கவாட்டில் கருக்கு மட்டையுடன் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் ஓலைகளை அவ்வப்போது வெட்டிவிட வேண்டும். பனையைச் சுத்தி வளரும் களைகள், காட்டுக்கொடிகளை அப்புறப்படுத்தி விட வேண்டும். இப்படி முறையாகப் பராமரிக்கும்பட்சத்தில்தான் பனைநல்ல பலனைத் தரும்.
பனைக்கு பராமரிப்பு தேவையில்லை என்று பொதுவான கருத்து உலாவுகிறது. இந்த நினைப்பில்தான் பனையை நட்ட பலரும் அது வளர்ந்துவிடும் என்று திரும்பிக்கூட பார்ப்பதில்லை. இதனால், நடவு செய்த பல பனை விதைகள் முளைக்காமல் இருக்கின்றன. நடவு செய்வது முக்கியமல்ல, அதை பராமரிப்பதும் ரொம்பவே அவசியம்.
Also Read – மழைக்காலத்தில் மாடித்தோட்ட பராமரிப்பு – இதெல்லாம் செய்யாதீங்க..!