மைக்ரைன் ஏற்பட்டால் ஒருவர் உடனடியாக விரும்புவது நிவாரணம் மட்டுமே. கடுமையாக தலைவலிக்கும் நேரத்தில் குமட்டல், வாந்தி, ஒளி மற்றும் ஒலியால் பாதிப்பு ஆகியவையும் ஏற்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த மைக்ரைன் பாதிக்கும். மருந்துகள் எடுத்துக்கொள்வதன் வழியாக மைக்ரைனில் இருந்து சிலர் தங்களை பாதுகாத்துக்கொள்கின்றனர். எனினும், இதற்கு நிரந்தர தீர்வு என்பது கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் மைக்ரைனில் இருந்து தப்பிக்கலாம். ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம், மன அழுத்தம், அதிகமாக மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவை இந்த மைக்ரைன் ஏற்பட அடிப்படைக் காரணமாக அமையலாம். சரி, இனி மைக்ரைனில் இருந்து தப்பிப்பதற்கான சில எளிய வழிகளைப் பார்க்கலாம்.
அமைதியான இடங்களை தேர்ந்தெடுங்கள்!
அதிகமான ஒளி மற்றும் ஒலியை உணர்வதால் மைக்ரைன் அதிகமாக ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஒளியை நாம் பார்ப்பதால் நம்முடைய செல்கள் பாதிப்படைகின்றன. எனவே, முடிந்தவரை அதிகம் ஒளி வெளியாகும் பொருள்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். அதற்கு கண்ணாடி அணியலாம். செல்ஃபோன், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்தும்போது ப்ரைட்னஸை குறைத்து வைக்கலாம். அதேபோல, அதிகமாக ஒலியை உணர்வதாலும் மைக்ரைன் ஏற்படுகிறது. இதற்கு, ஒலி அதிகம் கேட்காத அமைதியான இடங்களைத் தேர்ந்தெடுத்து நீங்கள் அமரலாம். மைக்ரைன் அதிகமாகும் நேரத்தில் கண்டிப்பாக அமைதியான இடங்களில் ஓய்வு அவசியம்.
மசாஜ் செய்யலாம்
எந்தவொரு வலியையும் மசாஜ் செய்வதால் எளிமையாக குறைக்க முடியும். எனவே, மைக்ரைன் அதிகமாகும் நேரத்தில் உங்களது தலைக்கு மசாஜ் செய்யலாம்.
குளிர்ந்த அல்லது சூடான துணியை வைக்கலாம்
மைக்ரைன் அதிகமாகும்போது தலையில் அல்லது பின் கழுத்துப் பகுதியில் சரியான துணியை எடுத்து அதனை அதிகமாக குளிர்ந்த நீரிலோ அல்லது அதிக சூடான நீரிலோ நனைத்து வைக்கலாம். இதனால், அந்தப் பகுதி கொஞ்சம் நேரம் மரத்துப்போகும். வலியில் இருந்து நிவாரணத்தைக் கொடுக்கும்.
அதிகம் தண்ணீர் குடிக்கலாம்
வெயில் காலத்தில் வழக்கத்தைவிட அதிகமாக மைக்ரைன் ஏற்படும். எனவே, உடலை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதில் உங்களுக்கு சிரமம் இருந்தால் ஜூஸ் போன்றவற்றையும் பருகலாம்.
தியானம் செய்யலாம்
மைக்ரைனுக்கு தியானம் ஒரு சிறந்த சிகிச்சையாகும். இது உங்களது மனதுக்கு மட்டுமல்ல உடலுக்கும் ஆரோக்கியமாகும். தியானம் செய்வதால் உங்களது மூளைக்கு அதிக ஓய்வு கிடைக்கும். மன அழுத்தத்தில் இருந்தும் கொஞ்சம் விடுதலை கிடைக்கும். மனச்சோர்வைப் போக்கி பதற்றத்தைக் குறைத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தியானம் நிச்சயம் ஒரு சிறந்த வழியாகும்.
உடற்பயிற்சி
உடலில் ஹார்மோன் சமநிலைகள் தவறும்போது மைக்ரைன் அதிகளவில் ஏற்படுகிறது. இதனை, சரிசமமாக வைத்திருக்க உடற்பயிற்சி அதிகளவில் கைக்கொடுக்கிறது.
மைக்ரைனை உடனடியாக குறைப்பதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை என்பதால், உங்களால் முடிந்த அளவு இவற்றை முயற்சி செய்து பார்க்கலாம். நிச்சயம் நல்ல ரிசல்ட்டை எதிர்பார்க்கலாம்.
Also Read: #ExamStress – ல இருக்கீங்களா.. இந்த 5 எளிய வழிகளை ட்ரை பண்ணுங்க!