வாழ்க்கையில் தோல்வி என்பது மிகவும் இயல்பானது. நாம் இலக்குகளை அடைய முயற்சி செய்யும்போது அது கிடைக்காமல் போகலாம். கிடைக்காமல் போகும் விஷயங்கள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். ஆனால், அதனால் ஏற்படும் வருத்தம் என்பது அனைவருக்கும் ஒரே அளவில்தான் இருக்கும். இன்றைக்கு பெரும்பாலும் மக்கள் தோல்வியை தவிர்ப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். இதன் விளைவு, நம்மை இன்னும் வேதனையான சூழ்நிலைக்கு கூட்டிச் செல்லுமே தவிர வேறு எதுவும் செய்யாது. தோல்வியில் இருந்து எளிதாக கடந்து வர சில பயனுள்ள வழிகளை இந்தக் கட்டுரையின் வழியாகத் தெரிந்து கொள்ளலாம்.

* ஒருமுறை தோல்வி அடைந்தால் மீண்டும் முயற்சி செய்யாமல் எப்போதும் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயம் பொதுவாக நம்முள் ஏற்படுவது உண்டு. இத்தகைய எதிர்மறை எண்ணங்களில் இருந்து முழுவதுமாக வெளியேற வேண்டும். இந்த எண்ணத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால் தோல்வி குறித்த அச்சத்தால் நீங்கள் முடங்கி விடுவீர்கள். இதனால், உங்களது முழு திறனும் வெளிப்படாது. நீங்கள் தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று விரும்பினால் உங்களது எதிர்மறையான எண்ணங்களை நேர்மறையான எண்ணங்களாக மாற்ற வேண்டும்.
* உங்களுடைய இலக்குகளை நீங்கள் அடையத் தவறும்போது கவலை, அவமானம் மற்றும் கோபம் போன்ற உணர்வுகள் உங்களுக்குள் உருவாவது இயல்பான விஷயம்தான். இந்த உணர்வுகளை கட்டுப்படுத்த நீங்கள் கடுமையாக முயற்சி செய்யலாம். ஆனால், அதற்கு பதிலாக உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். இந்த உணர்வுகளை உங்களது அடுத்த செயல்களுக்கான ஊக்கமாக பயன்படுத்துங்கள்.
* ஆரோக்கியமான பழக்க, வழக்கங்களைத் தொடங்குங்கள். நடைப்பயணங்களை மேற்கொள்ளுங்கள். சுவாச பயிற்சிகளை செய்யுங்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரங்களை செலவழியுங்கள். எதிர்மறையான எண்ணங்களில் இருந்து வெளியேறுவதற்கான அனைத்து செயல்களையும் செய்யுங்கள். நீங்கள் விரும்பக்கூடிய விஷயங்களை உங்களது பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள்.
* ஆரோக்கியமான பழக்கவழக்கங்களில் ஈடுபடுவது எப்படியோ அதேபோல தவறான பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பதும் முக்கியம். தோல்வியினால் ஏற்படும் வலியை மறைக்க போதைப் பழக்கங்களில் சிலர் ஈடுபடுவார்கள். கடைசியில் இதற்கு அடிமையாகி மிகவும் மோசமான சூழ்நிலையில் மாட்டிக்கொள்வார்கள். இதனால், வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் வழியில் தடை ஏற்படும். எனவே, செல்ஃப் கான்ஃபிடன்ஸை வளர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நீங்கள் மேற்கொள்ளலாம்.
* உங்களது தோல்விகளுக்கு பின்னால் உள்ள விஷயங்களை புறக்கணிப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். உண்மையில் என்ன நடந்தது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களது செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பேற்காமல் இருப்பது தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வதைத் தடுக்கும். உங்களது தோல்விகளுக்காக சாக்குகளை தேடாதீர்கள். விஷயங்கள் ஏன் இப்படி நடந்தது என்பதை கண்டறிய முயற்சி செய்யுங்கள். அதேபோல அதிகப்படியான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது உங்களை அமைதியற்றவர்களாக மாற்றும். தேவையில்லாத பதற்றங்களை ஏற்படுத்தும். இரண்டையும் சரியாக பேலன்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
* தோல்விக்குப் பிறகு சிலர் தங்களை சோர்வாக உணர்கிறார்கள். ஆனால், தோல்வியை பல விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எந்த விஷயத்தில் பலம் வாய்ந்தவர்கள்.. என்ன தவறுகள் செய்துள்ளீர்கள்.. எந்த விஷயங்களில் உங்களுக்கு பயிற்சி தேவை.. போன்றவற்றை அறிந்துகொள்ள வேண்டும். சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் உங்களைப் பற்றி நீங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக தெரிந்துகொள்ள வேண்டும். உங்களை நீங்கள் அறிந்துகொள்வதன் வழியாக தோல்விகளை முடிந்தவரை தள்ளிப்போட முடியும்.
* உங்களைப் போல தோல்வியை அனுபவித்து பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தவர்களின் கதைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் தோல்வியை கையாண்ட விதம்.. தோல்விக்குப் பிறகு தங்களுடைய இலக்குகளை அவர்கள் கைவிட்டார்களா.. என்ன மாதிரியான செயல்களின் மூலம் தோல்வியை சமாளித்தார்கள் போன்றவற்றை தெரிந்துகொள்ளுங்கள். இவை உங்களுக்கு உண்மையிலேயே மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும்.
நீங்களும் கண்டிப்பா தோல்வியை ஃபேஸ் பண்ணியிருப்பீங்க. அப்படியான சூழ்நிலையில் தோல்வியில் இருந்து மீண்டு வர எந்த மாதிரியான விஷயங்களை கடைபிடிச்சீங்க அப்டினு கமெண்ட்ல சொல்லுங்க மக்களே!
Also Read : Pegasus: ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர், 2 அமைச்சர்கள்… விஸ்வரூபம் எடுக்கும் பேகஸஸ்… பின்னணி!