எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும், நாம் தோற்றுவிடுவோம் என்கிற பயம் உங்களைத் துரத்துகிறதா… இந்த தோல்வி பயத்தில் இருந்து வெளிவருவது எப்படி?
தோல்வி பயம்
உலகில் எந்தவொரு மனிதரும் தோல்வியைச் சந்திக்காமல் இருக்க முடியாது. சில நேரங்களில் அந்தத் தோல்விதான் வெற்றிக்கான அடிப்படையாகவே இருக்கும் என்கிறார்கள். வேலையாக இருந்தாலும் சரி; பெர்சனல் லைஃபாக இருந்தாலும் சரி தோல்வியையே சந்திக்காமல் இருப்பவர்கள் வெகுசிலரே என்பதுதான் நிதர்சனம்.
ஆனால், ஒரு சிலருக்கு சக்ஸஸ் அவ்வளவு ஈஸியா கிடைக்கிறதில்லை. அதனால, நம்பிக்கையையுமே மொத்தமா இழந்துடுறாங்க. அதேபோல், இதுமாதிரியான ஆட்கள் எந்தவொரு புதிய முயற்சியையும் தொடங்க ரொம்பவே பயப்படுவாங்க. இந்த விஷயத்துலயும் தோத்துடுவோமோன்கிற பயம் எல்லா நேரங்களிலும் அவங்களை ஆட்டிப் படைச்சுட்டு இருக்கும். ஆங்கிலத்தில் ‘Atychiphobia’ என்றழைக்கப்படும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவராக நம்ம உலகநாயகன் கமல்ஹாசன் ‘தெனாலி’ படத்தில் கலக்கியிருப்பார்.
‘எல்லாம் பயமயம்’ என்ற அவரது டயலாக் ரொம்பவே பேமஸ். அப்படி பயமயத்தால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து வெளியே வருவது எப்படி?
- தோற்றுவிடுவோம் என ஏன் நீங்கள் பயப்படுகிறீர்கள் என்பதற்கான அடிப்படையாக காரணத்தைச் சரியாகக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். அந்த காரணத்தை நீங்கள் அறிந்துகொண்டால், அதிலிருந்து வெளிவரவும் உங்களுக்கு உதவலாம். உதாரணமாக, கசப்பான கடந்த கால உணர்வுகள், தொடர் தோல்விகள் இப்படியான காரணங்கள் உங்களின் புதிய முயற்சிகளுக்குத் தடையாக இருக்கலாம்.
- தோல்வி என்றால் என்ன என்பதை உங்களுக்கு நீங்களே வரையறுத்துக் கொள்ள முயலுங்கள். உதாரணமாக, ஒரு விஷயத்தில் தோல்வியடைந்து விட்டாலே, வாழ்க்கை அத்துடன் முடிந்துபோகும், அதுதான் கடைசி போன்ற எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளியே வாருங்கள். அத்தோடு, அந்தத் தோல்வியை உங்களோடு வேறுவிதமாக தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள். அதிலிருந்து கிடைத்த ஒரு பாடம், இனி இதுபோல் செய்யக் கூடாது என்பதை உங்களுக்கு உணர்த்தியிருக்கலாம். அந்த அனுபவம் உணர்த்திய புதிய விஷயம் என இப்படியாகத் தொடர்புபடுத்திக் கொண்டு அதிலிருந்து வெளியே வரலாம்.
- சில நேரங்களில் நாம் தோற்றுவிடக் கூடாது என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு தங்களின் மொத்த உழைப்பையும் நேரத்தையும் பலர் செலவிடுவதுண்டு. ஆனால், நாம் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்பதையே அவர்கள் மறந்துவிடுவார்கள். உண்மையிலேயே உங்களுக்கு எது வேண்டும் என்பது குறித்து சிந்தியுங்கள், தோல்வி பயம் என்பது அந்த இடத்தை அடைவதில் இருந்து உங்களைத் தடுக்கிறது என்பதையும் மனதில் நிறுத்துங்கள்.
- உங்கள் வாழ்வில் நீங்கள் சந்திக்கும் தோல்விகள் மற்றும் அது ஏற்படும் தாக்கங்கள் குறித்த உங்களின் அணுகுமுறையை மாற்ற நீங்கள் சிந்திக்கும் அதே சயமத்தில், உங்களைப் பற்றியும் சிந்தியுங்கள். நம்மால் முடியும்; நம்மால் நிச்சயம் முடியும் என்கிற தன்னம்பிக்கை விதையை உங்களுக்குள் விதைத்துக் கொண்டால், தோல்வி என்கிற அச்சத்தில் இருந்து வெளியே வர முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.
- தோல்வியைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பது வேறு; தோல்வியடைவது என்பது வேறு. ஒரு விஷயத்தின் முடிவை உங்களால் மாற்ற முடியும் என்கிற சூழலில் திட்டமிட்டே அந்த விஷயத்தில் தோல்வியடையுங்கள். ஸ்கூல் டெஸ்ட், நண்பர்களுடனான விளையாட்டு போன்றவற்றில் நீங்கள் திட்டமிட்டு தோல்வியடையும்போது, அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற பக்குவமும் உங்களுக்கு வந்துசேரும். தோல்வியிலிருந்து மீள்வதற்கு சிறந்த வழி, அதை நாம் அனுபவிப்பதே.
- ஒரு பெரிய விஷயத்தை மொத்தமாக சிந்தித்து அதை நோக்கி ஒரு பயத்தோடு ஓடும்போதே நாம் தோல்வியை சந்திக்கிறோம். அதேநேரம், அந்த விஷயத்தை சின்ன சின்னதாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு அடியாக திட்டமிட்டு எடுத்து வைக்கும்போது வெற்றியை எளிதாக எட்டிப்பிடிக்க முடியும்.
- நாம் செய்துகொண்டிருக்கும் வேலையில் முழுமையான ஈடுபாட்டோடு ஈடுபடுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதே அளவுக்கு முக்கியமானது ‘உன்னால் முடியாது’ போன்ற எதிர்மறை எண்ணங்களை துடைத்தெறிந்துவிட்டு, அதிலிருந்து வெளியே வருவது.
Also Read – ரத்த அழுத்தத்தைச் சீராக்கும் 5 தினசரி பழக்கங்கள்!
Love your content! Always packed with useful insights.