வாட்ஸ் அப்ல ஒருத்தரோட நம்பரை சேவ் பண்ணாமலேயே அவருக்கு மெசேஜ் அனுப்ப ஒரு வழி இருக்கு… எப்படி அனுப்புறதுன்னுதான் நாம இப்போ தெரிஞ்சுக்கப் போறோம்.
வாட்ஸ் அப்
மெட்டா நிறுவனத்தின் மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப், இன்றைய நிலையில் உலகில் கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நண்பர்கள், குடும்பத்தினருடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது தொடங்கி, வீடியோ கால், வாய்ஸ் கால் ஆகியவற்றோரு பணபரிமாற்ற சேவையையும் வாட்ஸ் அப் மூலம் மேற்கொள்ள முடியும்.
அதேநேரம், ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமென்றால், அவரது போன் நம்பரை நமது போனில் சேவ் பண்ணிய பிறகே அனுப்ப முடியும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால், ஒரு சில நேரங்களில் வேலை நிமித்தமாக புதிதாக ஒருவருக்கு மெசேஜோ அல்லது நம்முடைய லொக்கேஷனையோ அனுப்ப வேண்டிய நிலை ஏற்படலாம். இ-கமர்ஸ் நிறுவனங்கள், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களின் சேவைகளை அதிகம் பயன்படுத்தும் நாம், அதற்காக புதிய நபர்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டிய சூழலும் ஏற்படும்.
வேலை நிமித்தமாக ஒரே ஒருமுறை மட்டுமே மெசேஜ் அனுப்புவதற்காக அவருடைய போன் நம்பரை நம்முடைய போனில் சேவ் செய்து பிறகு, வாட்ஸ் அப் சாட்டை ரெஃப்ரெஸ் செய்து, தகவலை அனுப்ப வேண்டும். மெசேஜ் அனுப்பிய பிறகு அவரது நம்பரை டெலீட் செய்ய மறந்துவிட்டால், நம்முடைய ’Saved Contact’ என்பதால், ஸ்டேட்டஸ் முதலியவற்றை அவர்களால் பார்க்க முடியும். இதைத் தவிர்க்க வேறொரு ஐடியா இருக்கிறது.
எப்படி அனுப்புவது?
வாட்ஸ் அப்பில் ஒருவரது நம்பரை சேவ் செய்யாமலேயே அவருக்கு மெசேஜ் அனுப்ப ஒரு வழி இருக்கிறது. நேரடியாக அனுப்ப முடியாது என்றாலும், ஒரு சில எக்ஸ்ட்ரா ஸ்டெப்கள் மூலம் அனுப்புவது சாத்தியம்தான். இதற்காகவே வாட்ஸ் அப் ஒரு ஷார்ட் கட் லிங்கைக் கொடுத்திருக்கிறது.
- உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் எந்தவொரு பிரவுசரையும் திறந்து ‘https://wa.me/phonenumber’ என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.
- இதில், ‘phonenumber’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் நீங்கள் மெசேஜ் அனுப்ப வேண்டிய எண்ணை அந்த நாட்டின் குறியீடோடு சேர்த்துக் குறிப்பிடுங்கள். உதாரணமாக, இந்தியாவில் 10 இலக்க மொபைல் நம்பருக்கு முன் 91 என்கிற குறியீடை சேர்த்துக் கொள்ள வேண்டும். ’9012345678’ என்ற எண்ணுக்கு, ‘https://wa.me/919012345678’ என்ற முகவரிக்குச் சென்று அனுப்பலாம்.
- லிங்கைக் கிளிக் செய்து என்டரைத் தட்டுங்கள்.
- இப்போது பச்சை நிறத்தில் ஒரு பாக்ஸ் திறக்கும். அதில், ‘Continue to Chat’ என்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்தால், நேரடியாக உங்கள் வாட்ஸ் அப் சாட்டுக்குச் செல்வீர்கள்.
- நீங்கள் மெசேஜ் அனுப்ப வேண்டிய புதிய நம்பரின் சாட் விண்டோ திறக்கும். அதில், நீங்கள் மெசேஜை அனுப்பிக் கொள்ள முடியும்.
Also Read – தூக்கம் துக்கமாகிறதா… இந்த 5 ஐடியாக்கள் உங்களுக்கு உதவலாம்!