முன்னாள் கேப்டன் விராட் கோலி, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடக்கும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் மூலம் நூறாவது டெஸ்டில் விளையாடும் இந்திய வீரர் என்ற மைல்கல்லை எட்டுகிறார். அவரை King Kohli ஆக்கிய 5 மொமண்ட்ஸ் பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க..!
கேப்டன் `Debut’
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி களமிறங்கியது ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் கடந்த 2014 டிசம்பரில் நடந்த டெஸ்ட் போட்டியில்தான். காயமடைந்த எம்.எஸ்.தோனிக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்ற அவர் முதல் இன்னிங்ஸில் 115 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவுக்கு 364 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், சேஸிங் மாஸ்டரான கோலி 141 ரன்கள் குவித்தார். இருந்தும் அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் கோலி, “நான் தான் ஏற்கனவே சொன்னேனே.. எத்தனை ரன்கள் இலக்கு என்றாலும், நாங்கள் அதை சேஸ் செய்யவே முயற்சிப்போம் என்று…’ – இப்படி போல்ட் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார்.
நீங்கதான் சொன்னீங்க!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 2017 ஹோம் சீரிஸ் விராட் கோலியின் வேற வெர்ஷனைக் காட்டியது. அந்தத் தொடரின் ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் ஸ்மித், டிஆர்எஸ் குறித்து ஆலோசனை கேட்பதற்காக கேலரியில் இருந்த வீரர்களின் உதவியை நாடியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அப்போது களத்திலேயே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடுவர்களிடம் விராட் கோலி முறையிட்டார். பின்னர், Brain fading moment என்று சொல்லி ஸ்மித் அதைக் கடந்து போக முயன்றார். செய்தியாளர் சந்திப்பின்போது கோலியிடம் கேள்வி எழுப்பிய ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவர், ஸ்மித் brain fade என்று கூறிய நிலையில், அதை ஏமாற்றுதல் என்கிறீர்களா என்று கேட்டார். `நான் சொல்லவில்லை. நீங்கதான் அப்படி சொன்னீங்க’ என்று உடனடியாகப் பதிலடி கொடுத்தார் கோலி.
2019 ஆஸ்திரேலியா சீரிஸ்
`brain fade’ சம்பவத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்த முதல் சீரிஸ் வெற்றி அதுவே. அந்த நேரத்தில் இதை முக்கியமான சாதனை என்று கோலி பதிவு செய்திருந்தார். மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்டில் கோலியின் 82 ரன்கள், இந்தியா அந்த டெஸ்டையும் தொடரையும் (2-1) வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தது.கோலியின் கேப்டன்சி செய்த மேஜிக்’ என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியிருந்தார்.
மைக்ரோபோன் சர்ச்சை
தென்னாப்பிரிக்காவில் கேப்டனாகத் தனது கடைசி டெஸ்டில் விளையாடிய கோலி, மூன்றாவது நடுவரின் முடிவுக்கான எதிர்ப்பை ஸ்டம்ப் மைக்ரோபோனில் பதிவு செய்தது சர்ச்சையானது. எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்த இந்திய அணிக்கு சாதகமான முடிவை மூன்றாவது நடுவர் கொடுக்காத நிலையில், ஸ்டம்ப் மைக்கில் எதிர்ப்புக் கருத்துகளைப் பதிவு செய்தார் கோலி. இதற்கு, பல முன்னாள் வீரர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். `இது தவிர்க்க வேண்டியது’ என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கரும் கண்டித்திருந்தார்.
கேப்டன்சியின் முடிவு
கடந்த 2021 டி20 உலகக் கோப்பைக்கு முன்புவரை உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற சாதனையை இந்தியா தக்க வைத்திருந்தது. ஆனால், கடந்த உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியால் அந்த சாதனையைத் தக்க வைக்க முடியவில்லை. போட்டிக்குப் பிறகு இந்திய ரசிகர்கள் சிலர் இஸ்லாமியரான முகமது ஷமியை சீண்டும் வகையில் சோசியல் மீடியாக்களில் கருத்துத் தெரிவித்து வந்தனர். ஆனால், அந்த ட்ரோல்களுக்கு எதிராக கோலி ஷமிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். அதன்பிறகு, கோலிக்கு எதிராக ட்ரோல் செய்யத் தொடங்கினர். கொரோனா காரணமான பயோபபுள் ஸ்ட்ரெஸ், வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் டி20 கேப்டன்சியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்தார். அதேநேரம், ஒருநாள், டெஸ்ட் கேப்டன்சியில் அவர் தொடர விரும்பிய நிலையில், பிசிசிஐ அவரை அப்பதவியில் இருந்து திடீரென நீக்கியது. பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் கோலிக்கும் இடையிலான கருத்து வேறுபாடு வெளியே தெரியவந்தது.
Also Read – Virat Kohli: `கிங்’ கோலியின் தரமான 5 Thug Life மொமண்ட்ஸ்!