திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமானுக்கு வீரதீர செயலுக்கான வீர் சக்ரா விருது வழங்கப்பட்டிருக்கிறது.
அபிநந்தன் வர்த்தமான்
பாகிஸ்தானின் கைபர் – பதுங்க்வா மாகாணத்தில் இருந்த ஜெய்ஷ் – இ – முகமது தீவிரவாத அமைப்பின் மறைவிடங்கள் மீது இந்திய விமானப்படையைச் சேர்ந்த மிராஜ் – 2000 போர் விமானங்கள் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 26-ல் தாக்குதல் நடத்தின. இதில், அந்த அமைப்பைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்தியா தரப்பில் எதுவும் வெளியிடப்படவில்லை. அதேநேரம், இந்தத் தாக்குதல் சம்பவமே நடைபெறவில்லை என பாகிஸ்தான் மறுத்தது.

ஆனால், தாக்குதல் நடந்த அடுத்த நாளில் (பிப்ரவரி 27, 2019) பாகிஸ்தானின் எஃப் – 16 போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் பறந்து தாக்குதல் நடத்த முற்பட்டன. ஸ்ரீநகரை மையமாகக் கொண்ட இந்திய விமானப் படையின் 51 ஸ்குவாட்ரான் படைப்பிரிவு பாகிஸ்தான் விமானப் படை தாக்குதல் முயற்சிக்குப் பதிலடி கொடுத்தது. குறிப்பாக அந்தப் படைப்பிரிவைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், தனது மிக்-21 ரக விமானம் மூலம் பாகிஸ்தானின் அதிநவீன எஃப் – 16 போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தினார். மேலும், அவரது மிக் – 21 விமானம் தாக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவர் தரையிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சிறைபிடிப்பும் விடுதலையும்

அங்கு தரையிறங்கிய அபிநந்தன் வர்த்தமானை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது. பாகிஸ்தான் ராணுவம் 16 மணி நேரத்துக்கும் மேலாக அவரை சித்திரவதை செய்ததாகக் கூறப்பட்ட நிலையில், சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அவரை விடுதலை செய்தது. அமைதி நடவடிக்கையாக அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். வாகா எல்லையில் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார். பின்னர், இந்திய விமானப்படை பணிக்குத் திரும்பிய அவருக்கு இம்மாதத் தொடக்கத்தில் குரூப் கேப்டனாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. ராணுவத்தில் கர்னல் பதவிக்கு நிகரானது விமானப்படையின் குரூப் கேப்டன் பதவி.
வீர் சக்ரா
`குரூப் கேப்டன்’ அபிநந்தன் வர்த்தமானுக்கு டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் வீர தீர செயலுக்கானவீர் சக்ரா’ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார். பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும் வீர தீர விருதுகளில் பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா விருதுகளுக்கு அடுத்து மூன்றாவது உயரிய விருதாக வீர் சக்ரா கருதப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிம்ஹகுட்டி வர்த்தமான் – ஷோபா தம்பதியின் மகன் அபிநந்தன் வர்த்தமான். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், விமானப் படையில் மூத்த அதிகாரியான தந்தையின் பணி காரணமாகப் பள்ளிப் படிப்பை டெல்லியில் நிறைவு செய்தார். அவரது தந்தை சிம்ஹகுட்டி இந்திய விமானப் படையில் சீஃப் மார்ஷலாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1999 கார்கில் போரின்போது முக்கியமான பங்காற்றியவர். அவரது தாய் ஷோபா மருத்துவராவார்.
உடுமலைப்பேட்டை அருகே அமராவதிநகரில் அமைந்திருக்கும் ராணுவப் பள்ளியிலும் பயின்றார். பள்ளிப் படிப்புக்குப் பின்னர் அபிநந்தன், மகாராஷ்டிரா மாநிலம் Khadakwasla தேசிய பாதுகாப்பு அகடாமியில் பயிற்சி பெற்றார். திருமணமாகி இரண்டு குழந்தைகளின் தந்தையான அபிநந்தன், தனது விமானப் பயிற்சி இயக்குநர் படிப்பை தாம்பரத்தில் தங்கியிருந்து முடித்தார்.
Also Read – Farm Laws: ஜூன் 5, 2020 – நவம்பர் 19, 2021… வேளாண் சட்டம் கடந்து வந்த பாதை!