டோக்கியோ ஒலிம்பிக்கின் காலிறுதிப் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது. இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதிபெறுவது இதுவே முதல்முறை.
இந்திய மகளிர் ஹாக்கி அணி உலகின் இரண்டாம் நிலை அணியான ஆஸ்திரேலிய அணியை Oi Hockey Stadium — North Pitch-ல் எதிர்க்கொண்டது. முதல் 15 நிமிடங்களில் கோல் அடிக்க முயற்சித்த இரண்டு அணியின் முயற்சியும் பலிக்கவில்லை. இரண்டாவது குவார்ட்டரில் கிடைத்த பெனால்டி ஷூட் வாய்ப்பை கோலாக மாற்றினார் இந்தியாவின் ஸ்டார் ஃபிளிக்கர் குர்ஜித் கௌர். இந்திய அணிக்குக் கிடைத்த இந்த முன்னிலை வாய்ப்பைக் கடைசி வரை தக்க வைத்துக் கொள்ள டிஃபன்ஸ் ஆட்டத்தைக் கையிலெடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தது கோல்கீப்பர் சவீதா தலைமையிலான இந்திய அணியின் டிஃபன்ஸ். காலிறுதி வரையிலான போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்குக் கிடைத்த 7 பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் ஒரு கோலைக் கூட அடிக்காமல் பார்த்துக் கொண்டது இந்தியாவின் டிஃபன்ஸ் படை.
Pool A-வில் நான்காவது இடம் பிடித்து காலிறுதிக்குத் தகுதிபெற்ற இந்திய மகளிர் அணி, காலிறுதியில் Pool – B-யில் முதலிடத்தைப் பிடித்திருந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதிபெற்றிருக்கிறது. முதல் அரையிறுதியில் ஜெர்மனியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய அர்ஜெண்டினா அணியை இந்திய அணி எதிர்க்கொள்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி.
59% நேரம் இந்திய அணியிடமே பந்து இருந்தது. போட்டியின் 22-வது நிமிடத்தில் குர்ஜித் கௌர் அடித்த கோல் இந்தியாவை வெற்றிபெறச் செய்தது. முதல்முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்குத் தகுதிபெற்றிருக்கும் இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Also Read – முதல்முறையாக இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்ஸியில் தோனி… கொண்டாடும் ரசிகர்கள்!