கோடைக் காலத்தோட சேர்த்து திருமண காலமும் ஸ்டார்ட் ஆயிடுச்சு. இனி வரிசையா திருமணத்துக்குப் போய் மொய் வைக்கணுமேனு பலர் வருத்தப்பட்டாலும் சிலர் திருமணம் ஆகப்போகுதேனு சந்தோஷத்துல மிதந்துட்டு இருப்பாங்க. அப்படி சந்தோஷத்துல மிதக்குறவங்களுக்கான கட்டுரைதான் இது!
திருமணம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. லேட்டஸ்ட் டயலாக்ல சொல்லணும்னா குடும்பங்கள் கொண்டாடும் நிகழ்ச்சி. அதை முடிந்த அளவு நினைவுள்ளதாக மாற்ற யுனிக்கான பல விஷயங்களை நாம முயற்சி பண்ணலாம். அதில் ஒன்றுதான் வெட்டிங் டெஸ்டினேஷன்களைத் தேர்வு செய்வது. நிச்சயமாக இது எல்லாருக்குமான விஷயம் கிடையாது. ஆனால், கொஞ்சம் வசதி வாய்ப்புள்ளவர்கள் இந்த வெட்டிங் டெஸ்டினேஷன்களைத் தேர்வு செய்வதன் மூலம் தங்களது திருமண நாளை சிறப்பானதாக மாற்ற முடியும். இந்த வெட்டிங் டெஸ்டினேஷன்கள் அழகுக்காக புகழ்பெற்றவை. மேலும், உங்களது திருமண புகைப்படங்களையும் இன்னும் அழகானதாக மாற்றும். இனி இந்தியாவில் உள்ள சில சம்மர் வெட்டிங் டெஸ்டினேஷன்களை இங்கே பார்க்கலாம்.
கோவா
திருமண நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பேச்சிலர் பார்ட்டியாக இருந்தாலும் சரி எந்த விஷயத்துக்கும் நீங்கள் கோவாவை தைரியமாக எப்போது வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். சூரியன் உதயம், சூரிய அஸ்தமனம், கடற்கரைகள் என கோவாவில் பல அழகான விஷயங்கள் நிறைந்துள்ளன. இந்த கடற்கரைகளில் அமைந்துள்ள பிரைவேட் ஹோட்டல்களில் நீங்கள் திருமண நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம். இதற்காகவே எக்கச்சக்கமான ஹோட்டல்கள் கோவா கடற்கரைகள் முழுவதும் நிறைந்துள்ளன. உங்களது கிரியேட்டிவிட்டியைப் பயன்படுத்தி திருமண ஸ்பாட்டை அலங்கரித்து அந்த நாளை மறக்க முடியாத ஒன்றாக மாற்றலாம்.

ரிஷிகேஷ்
ஆன்மீக யாத்திரை செல்பவர்களுக்கான இடமாக மட்டும் ரிஷிகேஷ் இல்லை. மிகவும் அழகான இயற்கை எழில் மிகுந்த இடமாகவும் ரிஷிகேஷ் உள்ளது. கங்கை நதிக்கரையில் நீங்கள் திருமணம் செய்ய விரும்பினால், ரிஷிகேஷைவிட சிறந்த இடம் வேறொன்றும் இல்லை எனலாம். கங்கையில் இருந்து பாயும் கிளை நதிகள், அதன் பசுமையான கரைகள் என அனைத்துமே திருமணத்திற்கு ஏதுவாக இருக்கும்.

பெல்லிங்
சிக்கிமில் உள்ள மிகவும் அழகான சிறிய நகரம்தான் இந்த பெல்லிங். அமைதியான, நெரிசல் இல்லாத சூழலில் நீங்கள் உங்களது உறவினர்கள் சூழ திருமணம் செய்ய விரும்பினால் இந்த இடத்தைக் கண்ணை மூடி தேர்வு செய்யலாம். மலைகளும் அதிகம் இந்தப் பகுதிகளில் நிரம்பியுள்ளன. பெரும்பாலும் பலரும் அறியாத இந்தப் பகுதியில் நீங்கள் திருமணம் செய்ய தகுதியான, உங்களுக்குப் பிடித்த இடத்தைத் தேர்வு செய்து முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம்.

ஹேவ்லாக் தீவு
வெள்ளை மணல், நீலக்கடல் மற்றும் தூய்மையான வானம்… மனதின் பாரத்தைக் குறைக்க இதைவிட வேறென்ன வேண்டும்? அப்படியான இடம்தான் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் அமைந்துள்ள ஹேவ்லாக் தீவு. மிகவும் ரம்மியமாக இருக்கும் இந்த சூழலில் உங்களது திருமணத்தை நீங்கள் திட்டமிட்டுக்கொள்ளலாம். நீர் விளையாட்டுக்கள், காக்டெயில் பார்ட்டி என உங்களது திருமணத்தை கலகலப்பாக மாற்றுவதற்கான வாய்ப்புகளும் இங்கே அதிகம். கடற்கரையில் திருமணம் செய்ய விரும்பினால் அதற்கு பெஸ்ட் இடம் இதுதான்.

ஷிம்லா
ஹிமாச்சல் பிரதேசத்தில் இமயமலையின் அடிவாரத்தில் உங்களது திருமணம்… அப்படியே கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. குளிர் மிகுந்த அந்த சூழலில் நீங்கள் தேர்வு செய்த ஹோட்டலில் கலர்ஃபுல்லாக அலங்காரம் செய்து உங்களது திருமணத்தை செய்துகொள்ளலாம். அந்த இடமும் சூழலும் உங்களது திருமண நாளை என்றும் மறக்க முடியாத ஒன்றாக மாற்றும்.

இந்தியாவில் இந்த இடங்களைத் தவிர லட்சத்தீவு, உதய்ப்பூர் மற்றும் பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் உங்களது திருமணத்திற்கான சம்மர் டெஸ்டினேஷன்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.