INDvsNZ: நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. ரன் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி இதுவே.
INDvsNZ டெஸ்டின் 5 முக்கிய தருணங்கள்
அசத்தல் மயங்க்; தூள் அக்ஸர்
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் டாப் ஆர்டரில் புஜாரா, கோலி ஆகியோர் டக் அவுட்டாக, தொடக்க வீரர் மயங்க் அகர்வால் அசத்தலாக ஆடி 311 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார். அதேபோல், இளம் வீரர் சுப்மன் கில் ரன்கள் எடுக்க, ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் 52 ரன்கள் குவித்தார். இந்த மூவரின் சிறப்பான பங்களிப்பால் இந்திய அணி 325 ரன்கள் எடுத்தது.
அஜாஸ் படேலின் வரலாற்று சாதனை
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் வரலாற்று சாதனை படைத்தார். இங்கிலாந்தின் ஜிம் லேக்கர், இந்தியாவின் அனில் கும்ப்ளே ஆகியோருக்குப் பிறகு ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். 47.5 ஓவர்களில் அவர் 10 விக்கெட்டுகள் வீழ்த்தினர். நியூசிலாந்தின் மற்ற பவுலர்கள் 62 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
இந்தியாவின் மிரட்டல் பவுலிங்
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 28.1 ஓவர்களில் 62 ரன்களில் சுருண்டது. இந்திய மண்ணில் குறைந்த ஸ்கோரான இது, சர்வதேச அளவில் 48-வது குறைந்தபட்ச ஸ்கோராகும். அஷ்வின் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சிராஜ் 3 விக்கெட்டுகளும் அக்ஸர் படேல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
செகண்ட் இன்னிங்ஸ் பேட்டிங்
263 ரன்கள் என்ற மிகப்பெரிய முன்னிலை பெற்ற போதும், முழுமையாக மூன்றரை நாட்கள் மீதமிருந்ததால், இந்திய அணி நியூசிலாந்துக்கு ஃபாலோ ஆன் கொடுக்காமல் தொடர்ந்து விளையாடியது. முதல் இன்னிங்ஸில் ஜொலித்த மயங்க் அகர்வால் இந்த முறை 62 ரன்களும், அக்ஸர் படேல் 26 பந்துகளில் 41 ரன்களும் எடுத்தனர். சுப்மன் கில், புஜாரா ஆகியோர் தலா 47 ரன்களும், விராட் கோலி 36 ரன்களும் எடுத்தனர். இதனால், 276-7 என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. இதன்மூலம், நியூசிலாந்து அணிக்கு 540 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
சுழல் ஜாலம்
இமாலய இலக்கோடு களமிறங்கிய நியூசிலாந்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சில் தடுமாறியது. மூன்றாவது நாள் முடிவில் 140 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், நான்காம் நாள் முதல் செஷனில் ஒரு மணி நேரத்துக்குள் மீதமுள்ள விக்கெட்டுகளையும் இழந்தது. முந்தைய நாள் ஸ்கோருடன் 27 ரன்களை மட்டுமே சேர்ந்த நியூசிலாந்து 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா தரப்பில் அஷ்வின், ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் ஒரு ரன் அவுட் தவிர 36 விக்கெட்டுகளில் 30 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களே வீழ்த்தினர்.