`பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்’ என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பதை பாம்பை நேரில் கண்டவர்கள் உணர்வார்கள். அவ்வளவு ஆபத்தானவை பாம்புகள் என்று மக்களால் நம்பப்படுகிறது. மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக பாம்புகள் கருதப்பட்டாலும் அவற்றைப் பற்றிய தகவல்கள் பல மர்மமாகவே இருந்து வருகின்றன. பெரும்பாலும் பாம்புகளை மக்கள் தவறாகவே புரிந்து கொண்டுள்ளனர் என்பது பாம்புகள் தொடர்பான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது. பாம்புகள் சுற்றுசூழல் அமைப்புக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பை அளித்து வருகின்றன. பாம்பைப் பற்றிய ஏகப்பட்ட கட்டுக்கதைகள் இன்றும் மக்கள் மத்தியில் உலாவி வருகின்றன. இன்று உலக பாம்புகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பாம்பைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்தக் கட்டுரையில் நாம் தெரிந்துகொள்வோம்.
* பாம்புகள் உலகத்தில் பெண் கிங் கோப்ரா பாம்பு மட்டுமே கூடு கட்டும் தன்மை உடையவை. முட்டையிடுவதற்கு முன்பாக கிங் கோப்ரா கூடு கட்டுகிறது. இந்தப் பாம்பு கூடு கட்டுவது கொஞ்சம் சுவாரஸ்யமானது. ஏனெனில், இவை கூடுகட்டுவதற்கு கெட்டுப்போன பொருள்களை அதாவது டிகம்போஸான இலைகள், களைகள் மற்றும் பிற தாவரங்களைப் பயன்படுத்துகின்றன. தனது உடலைப் பயன்படுத்தி சேகரித்த பொருள்களை வட்டமான குவியலாக உருவாக்குகிறது. பின்னர் உடலை இறுக்கி அதனை உறுதியாக்குகிறது. கூட்டின் அளவானது சுமார் 3 முதல் 4 அடிவரை விட்டமும் 1 முதல் 3 அடி வரை உயரமும் உடையவை. இந்தப் பொருள்களால் உருவாக்கப்பட்ட கூட்டின் வெப்பமானது முட்டைகளை அடைகாக்க உதவுகிறது. கூட்டுக்குள் பாம்புகள் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை எப்படி பராமரிக்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் இன்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். முட்டைகளை பாதுகாக்கும்போது பெண் கிங் கோப்ராக்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். உலகின் மிகவும் நீளமான விஷப்பாம்பு என்றால் அது கிங் கோப்ரா தான். இவை 18 அடி முதல் அதற்கு மேற்பட்ட அளவு வரை வளரக்கூடியது. அதேபோல reticulated python என்ற வகை பாம்பும் மிகவும் நீளமானது. இது சுமார் 6 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது.
* உலகில் 3000-க்கும் அதிகமான பாம்பு வகைகள் உள்ளன. அவை பல்வேறு கண்டங்களிலும் வசிக்கின்றன. ஆனால், மிகவும் குளிர்ச்சியான பிரதேசத்தில் பாம்புகளால் வாழ முடியாது என்பதால் அண்டார்டிகாவில் பாம்புகள் கிடையாது.
* பாம்புகளால் உணவைக் கடிக்க முடியாது. பாம்புகளுக்கு ஃப்ளெக்ஸிபிளான பெரிய தாடைகள் உள்ளன. இதனால், பாம்பை விட மிகவும் பெரிய உணவுகளை எளிதாக அதனால் உண்ண முடியும். அதன் வயிற்றில் சுரக்கும் வலுவான அமிலத்தால் ஜீரணமும் ஆகும். தனது எடையைவிட பெரிய உணவுகளை உண்டு பாம்புகளின் வயிறு வெடித்த கதைகளும் உண்டு.
* பாம்புகள் மெதுவான வளர்சிதை மாற்ற விகிதத்தைக் கொண்டிருப்பதால் அவை மற்ற விலங்குகளைப் போல அடிக்கடி உணவு எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை. கிங் கோப்ரா பாம்புகள் பல மாதங்கள் வரை சாப்பிடாமல் இருக்கும்.
* பாம்புகள் மிகவும் வேகமாக செல்லக்கூடியவை. அதிலும் ப்ளாக் மம்பா என்ற பாம்பு அதிவேகமாக செல்லக்கூடியவை. இது ஒரு மணி நேரத்துக்கு 12 மைல் என்ற கணக்கில் வேகமாக செல்லக்கூடியவை.
* உலகில் மிகச்சிறிய பாம்பு வகை Brahminy blind ஆகும். இவை 2.5 அங்குலம் மட்டுமே நீளம் உடையவை. அளவில் மிகச்சிறியதாக இருப்பதால் இவை பெரும்பாலும் மண்புழுக்கள் என்று தவறாகக் கருதப்படுகின்றன.
* பிரேசிலில் பாம்புகள் தீவு ஒன்று உள்ளது. அங்கு ஒரு சதுர கி.மீ-க்கு 5 பாம்புகள் உள்ளதாம். மிகவும் ஆபத்தான அந்த தீவுக்கு மக்கள் யாருக்கும் அனுமதி இல்லை. பாம்புகளின் வீடு என்றே அந்த தீவுகள் அறியப்படுகின்றன.
* பாம்புகள் கூச்ச சுபாவம் உடையவை. இவை எதிரிகளைத் தேடிக் கடிப்பது இல்லை. தேவைப்பட்டால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன. பெரும்பாலும் பாம்புகள் தனியாகவே இருக்க விரும்புகின்றன.
* பாம்புகளுக்கு கண் இமைகள் கிடையாது. மேலும், பாம்புகள் வாசனைகளை தங்களது நாக்குகளால் அறியும் திறன் உடையவை.
Also Read : தற்காப்புக் கொலை… பெண்ணை விடுவித்த திருவள்ளூர் எஸ்.பி – ஐ.பி.சி பிரிவு 100 என்ன சொல்கிறது?