தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளா கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் மோசடி நடைபெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. எந்தெந்த மாவட்டங்களில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் மோசடி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது?
நகைக்கடன் தள்ளுபடி!
ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தி.மு.க தேர்தல் நேரத்திலேயே வாக்குறுதி கொடுத்திருந்தது. தி.மு.க தலைமையிலான ஆட்சி அமைந்த நிலையில், சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான விவசாயிகளின் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். 2021 மார்ச் 31-ம் தேதிக்கு முன்னதாக நகைக்கடன் பெற்றிருப்பவர்கள் இதற்குத் தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றிருப்பவர்கள் குறித்த அறிக்கை கோரப்பட்டது. நகைக்கடன் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கூட்டுறவு கடன் சங்கங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் கடன் வாங்கியிருந்தால், ஒருவர் மட்டுமே கடன் தள்ளுபடிக்குத் தகுதியானவர் என்றும் மற்றவர்களிடம் கடனை வசூலிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
நகைக்கடன் மோசடி!
அதேபோல், இந்த விசாரணையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தங்க நகைக்கடன் பெயரில் மோசடியாகக் கடன் பெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது. சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரே நபர் 2.8 கிலோ தங்க நகைகளை அடகுவைத்து ரூ.85 லட்சம் கடன்பெற்றிருக்கிறார். சேலத்தை அடுத்த காடையம்பட்டியில் ஒரே நபர் 2.42 கிலோ நகைகளை அடமானம் வைத்து 384 நகைக்கடன்களைப் பெற்று மோசடி செய்திருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே ஆதார் எண்ணை வைத்து பலர் லட்சக்கணக்கில் கடன்பெற்றிருப்பதும் தெரியவந்திருக்கிறது. அதே மாவட்டத்தைச் சேர்ந்த கீழ்குளத்தில் ஒரே நபர் 625 நகைக்கடன்கள் மூலம் ரூ.1.25 கோடி வரை கடன் பெற்றிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. மேலும், அதே கூட்டுறவு சங்கத்தில் இரண்டு பேருக்கு மட்டும் ரூ.2.77 கோடி அளவுக்குக் கடன் கொடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.
மதுரை மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்போரி ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்தி 300 நகைக்கடன்களைப் பெற்று மோசடி நடந்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் 5 கூட்டுறவு சங்கங்களில் ஒரே ஆதார் எண்ணில் மட்டும் ரூ.2.46 கோடி கடன் வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. திருப்பத்தூரில் ஒரே ஆதார் எண்ணைப் பயன்படுத்தி 3.5 கிலோ தங்க நகைகள் அடமானம் வைக்கப்பட்டு ரூ.74 லட்சம் கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நகையே கொடுக்காமல் மோசடி
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் மட்டுமே ரூ.1.98 கோடி அளவுக்கு நகைக்கடன் மோசடி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த கூட்டுறவு வங்கியில் அடமானம் பெறப்பட்ட 500 நகை பொட்டலங்களில் 261 பாக்கெட்டுகளில் நகையே இல்லாமல் இருப்பதையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நகைக்கடன் தள்ளுபடிக்காக திருவண்ணாமலையில் 2 குடும்பத்தினருக்கு மட்டும் 5 சவரன் வீதம் 1,255 நகைக்கடன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அதிரவைத்த நாமக்கல் மோசடி!
நாமக்கல் திருச்செங்கோட்டை அடுத்த மல்லசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 14 வாடிக்கையாளர்களுக்கு 15 லட்ச ரூபாய் வரை போலி நகைகள் மூலம் கடன் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்தக் கூட்டுறவு சங்கத்தில் எழுத்தர்களாகப் பணியாற்றிய சலோன்மணி, சிவலிங்கம், சுந்தர்ராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் வெளிவந்ததை அடுத்து மல்லசமுத்திரம் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் அ.தி.மு.க செயலாளருமான சுந்தர்ராஜன், தனது பதவியைத் திடீரென ராஜினாமா செய்திருக்கிறார்.