கடைசி 10 ஓவர்களில் 138 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்த மும்பை, பொல்லார்டின் அதிரடியால் கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. பொல்லார்ட் 34 பந்துகளில் 6 பவுண்டரிகள், 8 சிக்ஸருடன் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ என்றழைக்கப்படும் சென்னை Vs மும்பை போட்டியை ஹாட்ஸ்டாரில் அதிகபட்சமாக 85 லட்சம் பேர் கண்டுகளித்தனர். இது நடப்பு ஐபிஎல் சீசனில் அதிகபட்சமாகும். டாஸ் வென்று மும்பை ஃபீல்டிங் தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு டூப்ளசியுடன் கைகோர்த்த மொயின் அலி சி.எஸ்.கேவுக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 58 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்தது. மொயின் அலி 36 பந்துகளில் 58 ரன்களும் டூப்ளசி 28 பந்துகளில் 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் டூப்ளசி தொடர்ச்சியாக நான்காவது அரைசதத்தைப் பதிவு செய்தார். சுரேஷ் ரெய்னா, நீண்டநேரம் நிலைக்கவில்லை.
10.4 ஓவர்களில் 112/1 என்ற நிலையில் இருந்த சி.எஸ்.கே-வின் நிலை 12வது ஓவர் முடிவில் 116/4 என்று மாறியது. பும்ரா பந்துவீச்சில் மொயின் அலியும், பொல்லார்ட் ஓவரில் டூப்ளசி, ரெய்னா ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். 2 ஓவர்கள் பந்துவீசிய பொல்லார்ட் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து ஐந்தவாது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அம்பாதி ராயுடு – ஜடேஜா அதிரடி காட்டினர். 6 போட்டிகளில் 64 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்த அம்பாதி ராயுடு, 27 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து மிரட்டினார். ஜடேஜா 22 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. பும்ரா, இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 56 ரன்கள் விட்டுக்கொடுத்தார். டி20 போட்டிகளில் பும்ரா விட்டுக்கொடுத்த அதிக ரன்கள் இதுவே.
200 ரன்களுக்கு அதிகமான ஸ்கோரை இதுவரை சேஸ் செய்ததில்லை என்ற ஸ்டேட்டஸோடு களமிறங்கிய மும்பைக்கு ரோஹித் ஷர்மா – டி காக் ஜோடி அதிரடியான தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். அவர் 35 ரன்களுடனும் டி காக், 38 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த சூர்யகுமார் யாதவை ஜடேஜா வீழ்த்தினார். இதனால், 9.4 ஓவர்களில் மும்பை அணி 81/3 என்று தடுமாறியது. கடைசி 10 ஓவர்களில் 138 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்த மும்பை, பொல்லார்டின் அதிரடியால் கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. பொல்லார்ட் 34 பந்துகளில் 6 பவுண்டரிகள், 8 சிக்ஸருடன் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல் வரலாற்றில் இது இரண்டாவது மிகப்பெரிய சேஸிங்காகும்.
போட்டிக்குப் பிறகு பேசிய சி.எஸ்.கே கேப்டன் தோனி,“இது சிறந்த பிட்ச் என்றே நான் நினைக்கிறேன். இரண்டு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசம் என்பது திட்டமிட்டதை செயல்படுத்திய விதம்தான். பந்துவீச்சாளர்களைக் குறைசொல்ல வேண்டும் என்பதில்லை. சில கேட்சுகளைப் பிடித்திருந்தால் உதவிகரமாக இருந்திருக்கும். கேட்சுகளைத் தவறவிட்டதே முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன். நாம் திட்டமிட்டதைச் சரியாகச் செயல்படுத்துவது மிகவும் முக்கியமானது. ஒன்று அல்லது இரண்டு சிக்ஸர்களைத் தவிர்த்திருந்தாலும், அது 20வது ஓவரில் வெற்றிபெற உதவும். இது வலியை ஏற்படுத்தக் கூடியதுதான், அதேநேரம், நேர்மறையான எண்ணங்கள் எப்போதும் மேலோங்கியே இருக்கும். புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்போது, இது உங்களைப் பெரிதாகப் பாதிக்காது’’ என்றார்.
மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா பேசும்போது, “இது நம்பமுடியாத வெற்றி. இதுபோன்ற ஒரு சேஸிங்கை நான் பார்த்ததில்லை. நான் பங்குபெற்ற டி20 போட்டிகளில் இது மிகவும் சிறப்பான டி20 என்று நினைக்கிறேன். பொல்லார்டின் இன்னிங்ஸ் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது’’ என்றார்.