ஈரானியத் திரைப்பட இயக்குநர் பாபக் கோரம்டின் (Babak Khorramdin) அவரது பெற்றோர்களால் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸில் வைத்து குப்பைத் தொட்டியில் போடப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடலானது எக்படன் என்ற பகுதியில் குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பாபக் கோரம்டின் திருமணம் செய்துகொள்ளாமல் பெற்றோருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் இதனால் கோபமடைந்த பெற்றோர் அவரை `ஆணவக் கொலை’ செய்ததாகவும் அரபு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
பாபக் கோரம்டின் தந்தை தனது மகனை குடித்துவிட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். முதலில் அவருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததாகவும் பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அவரது உடலை மறைக்க துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து குப்பையில் வீசியுள்ளார். இந்த கொடூரமான குற்றம் தொடர்பாக அவரது பெற்றோர்கள் இருவரும் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை தொடர்பான ஆதாரங்கள் அவர்களது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
47 வயதான திரைப்பட இயக்குநர் பாபக் கோரம்டின் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் சினிமா துறையில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார். பின்னர், மேல்படிப்புக்காக லண்டன் சென்றார். தற்போது, ஈரான் திரும்பி மாணவர்களுக்கு கற்பித்து வந்துள்ளார். பல்வேறு குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இவரது படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்று பல விருதுகளையும் பெற்றுள்ளன. Crevice மற்றும் Oath to Yashar உள்ளிட்ட இவரது பல குறும்படங்கள் மிகவும் பிரபலமானவை.
பாபக் கோரம்டினை கொலை செய்தது தொடர்பாக அவரது தந்தை கூறும்போது, “என் மகன் தனிமையில் இருந்தான். அவன் எங்களை மிகவும் துன்புறுத்தினான். அவனால், எங்கள் உயிருக்கு ஆபத்து இருந்தது. ஒருநாளும் நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை. அவன் தனது விருப்பத்துக்கு ஏற்ப நடந்தான். அதனால், நானும் எனது மனைவியும் அவனைக் கொலை செய்ய முடிவு செய்தோம். என் மகனை கொலை செய்ததால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று தெரிவித்தார்.
Also Read : ப்ளாக் ஃபங்கஸைத் தொடர்ந்து பரவும் வொயிட் ஃபங்கஸ்! – மிகவும் ஆபத்தானதா?