இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்ஃபான் பதான் சமூக ஊடகங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர். சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் தொடர்பாகவும் தன்னுடைய குரலைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் தன்னுடைய மனைவி சஃபாவின் படம் வெளியிட்டது தொடர்பான விமர்சனங்களுக்கும் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார். இர்ஃபான் பதான் மற்றும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த சஃபா பைக் ஆகியோருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இம்ரான்கான் பதான் என்ற மகன் உள்ளனர்.
இர்ஃபான் பதானின் மகன் இம்ரான் கானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டது. இந்தப் படத்தில் இம்ரான்கானின் மனைவியின் முகம் ப்ளர் செய்து காணப்பட்டது. இதனால், சமூக வலைதளத்தினர் தனது மனைவியின் முகத்தை வெளிப்படுத்த இர்ஃபான் பதான் அனுமதிக்கவில்லை என்றும் இர்ஃபான் பதான் பிற்போக்கு சிந்தனையுடன் செயல்படுகிறார் என்றும் விமர்சனங்களை வைத்தனர். சமூக வலைதளங்களிலும் புகைப்படம் வைரலானது.
விமர்சனங்களை அடுத்து அவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதே புகைப்படத்தை வெளியிட்டு, “எனது குயின் இந்தப் புகைப்படத்தை எனது மகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால், நிறைய பேர் தொடர்ந்து விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். நான் இந்த புகைப்படத்தை இங்கேயும் பதிவிடுகிறேன். என்னுடைய மனைவியின் விருப்பப்படி இந்த புகைப்படம் ப்ளர் செய்யப்பட்டுள்ளது. நான் அவளுடைய துணையே தவிர எஜமானன் இல்லை” என்று தெரிவித்துள்ளார். இர்ஃபான் பதானின் இந்த ட்வீட்டும் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
புகைப்பட சர்ச்சைகளில் இர்ஃபான் பதான் சிக்குவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பும் பலமுறை தன்னுடைய மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். 2017-ம் ஆண்டு சஃபா தனது கைகளில் நெயில் பாலிஷ் அணிந்து முகத்தை மறைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்த செயலை பலரும் `அன் இஸ்லாமிக்’ என்றுக்கூறி கடுமையாக விமர்சனம் செய்தனர். 2018-ம் ஆண்டு நடிகர்கள் பிரின்ஸ் நருலா மற்றும் யுவிகா திருமண விழாவுக்கு இருவரும் சென்றனர். அப்போது வெளியான புகைப்படத்தில் சஃபா ஹிஜாப் அணிந்திருந்தார். இதுவும் பரவலாக விமர்சனங்களுக்கு ஆளானது. அதே ஆண்டில் சஃபா தனது கைகளில் மெகந்தி மற்றும் நெயில் பாலிஷ் இரண்டும் அணிந்ததற்காக ட்ரோல் செய்யப்பட்டார்.
2019-ம் ஆண்டு பனிமூடிய மலைப்பிரதேசம் ஒன்றில் நின்றபடி அந்த ஜோடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்த புகைப்படத்தில் சஃபா தனது முகத்தை மூடி இருந்த காரணத்துக்காக விமர்சிக்கப்பட்டார். 2020-ம் ஆண்டு நான்காவது திருமண ஆண்டைக் கொண்டாடினர். அப்போதும் இருவரும் இணைந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டனர். இந்த புகைப்படத்திலும் சஃபாவின் முகம் மறைக்கப்பட்டு இருந்தது. அவர் வேண்டுமென்றே தனது மனைவியின் முகத்தை மறைத்துள்ளார் என்று சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்தன. இர்ஃபான் பதான் இந்த சம்பவத்திலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள படத்தை முன் வைத்தும் விமர்சிக்கப்பட்டு வருகிறார். திருமணம் முடிந்ததில் இருந்து தற்போது வரை தொடர்ந்து அவர் மனைவியுடன் புகைப்படம் வெளியிடும்போதெல்லாம் விமர்சனங்களால் குறிவைக்கப்பட்டு வருகிறார்.
Also Read : சமூக வலைதளங்களுக்கு இந்தியா வகுத்துள்ள புதிய விதிமுறைகள் என்னென்ன?