உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகர்களில் ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சானும் ஒருவர். தனது அதிரடி சண்டைக் காட்சிகள் மூலம் உலக ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த ஜாக்கிசானுக்கு குழந்தைகள் பட்டாளமும் ரசிகர்களாக இருக்கின்றன. ஏன்.. தமிழ்நாட்டிலும் கூட இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எட்டு வயது முதலே நடிக்கத் தொடங்கிய ஜாக்கிச் சான் நடிகராக மட்டும் இல்லாமல் இயக்குநராகவும் சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது சீனத் திரைப்படச் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களைக் கூறி சர்ச்சையில் சிக்குவார். இந்த நிலையில், தற்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதற்கு ஆர்வம் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சீன அரசியல் வட்டாரங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தீவிர அரசியலில் ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் ஈடுபடுவாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் முக்கிய உரை ஒன்றை நிகழ்த்தினார். இதுதொடர்பாக அந்நாட்டு பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜாக்கி சானும் தனது கருத்தினை இதுதொடர்பாக நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு வெளிப்படுத்தினார். அப்போது அவர் பேசுகையில், “சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மேன்மையை என்னால் காண முடிகிறது. 100 வருடங்களுக்குள் நடக்கும் என்று சொன்ன உறுதிகளை சில தசாப்தங்களிலேயே சீனக் கட்சி நிறைவேற்றியுள்ளது. சீனா வேகமாக முன்னேறி வருகிறது. சீனக் குடிமகனாக இருப்பதில் பெருமைப் படுகிறேன். நம்முடைய நாட்டின் கொடிக்கு உலகம் முழுவதும் மரியாதையுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைய ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 67 வயதான ஜாக்கி சான் எப்போது அந்தக் கட்சியில் இணையப்போகிறேன் உள்ளிட்ட தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை. அவர் இணைய விரும்புகிறேன் என்று கூறியதே சீன அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து ஹாங்காங் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பாதுகாப்பு சட்டம் தொடர்பான விவகாரத்தில் நடிகர் ஜாக்கி சான் சீனாவுக்கு ஆதரவான கருத்தை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர்மீது கடுமையான விமர்சனங்களை அரசியல் விமர்சகர்கள் உட்பட பலரும் முன் வைத்தனர். இதே விஷயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜாக்கி சான், “ஹாங்காங் மற்றும் சீனா ஆகியவை நான் பிறந்த நாடுகள். சீனா என்னுடைய நாடு. நான் எனது நாட்டை நேசிக்கிறேன். எனது வீட்டை நேசிக்கிறேன். ஹாங்காங் விரைவில் அமைதிக்கு திரும்பும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்” என்று தெரிவித்தார். இந்த சட்டத்துக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட முன்னணி நாடுகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தன. இந்த சட்டத்தின் கீழ் ஏராளமான போராட்டக்காரர்கள் மற்றும் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Also Read : `இதெல்லாம் கேக்கும்போது தலையே சுத்துது… விட்ருங்க!’ -`கொங்கு நாடு’ கேள்விக்கு வடிவேலு பதில்