பாட்டி வடை சுட, காக்கா அந்த வடையை சுடன்னு நம்ம ஊர்ல கதைகளோடவே கலந்த நொறுக்குத் தீணிகள் வடை, போண்டா, பஜ்ஜினு நிறைய கடைகள் இருந்தது. டீக்கடைகளில் தவறாம இந்த நொறுக்குத்தீணீகள் இருக்கும். 2000-ம் ஆண்டுகளின் காலகட்டத்தில் பானி பூரி கடைகள் வந்தது, கடந்த 5 ஆண்டுகளில் சமீபமா ஷவர்மா அந்த இடத்தைப் புடிச்சிருக்கு. ஷவர்மாவோட சுவையைப் போலவே அதைச் சுற்றிய சர்ச்சைகளும் பிரபலமாவே இருக்கு. ஷவர்மாவோட வரலாறு, அதை சாப்பிடலாமா, அதில இருக்க ஆபத்துகளைப் பாப்போம்.
ஷவர்மா வரலாறு
நம்ம ஊருக்குத்தான் ஷவர்மா புதுசு… 150 ஆண்டுகளுக்கு முன்பு இப்போதைய துருக்கியில் முதல் முதலா ஷவர்மா அறிமுகமாகுது. அங்கே, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழியிறைச்சினு எல்லாவிதமுமே பிரபலம். எலும்புகள் நீக்கப்பட்ட, நீளமான சதைப் பகுதிகளை எடுத்து கூம்பு வடிவமா அடுக்கி, மிதமான சூட்டில் இறைச்சி ஒழுங்கான சுழல் வேகத்தில் சுற்றி வேக வைத்து, பிறகு சன்னமா நொறுக்கி, மசாலாவுடன் கலந்து ரொட்டிகளுக்கு இடையில் சேர்த்து தான் பரிமாறப்பட்டிருக்கு. அந்த மொழியில் ஷவர்மா என்ற வார்த்தைக்குப் பொருள் ‘சுழல்வது’னு சொல்லலாம்.
துருக்கியை அடுத்து கிரீஸில் இதே செயல்முறையில் ‘கைரோஸ்’ அப்படின்னு பிரபலாமாகுது, கிரேக்கத்தில் கைரோஸ்ன்ற வார்த்தைக்கான பொருளும் சுழற்சிதான்.
மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலாமான இந்த ஷவர்மா லெபனானைச் சேர்ந்த அகதிகள் மூலமாக மெக்சிகோவுக்குப் போகுது, அங்கேயும் taco al pastor ன்ற பெயர்ல பிரபலமாகுது.
இப்படியே உலகின் பல நாடுகளுக்கு சுத்தி சுத்தியே ஷவர்மா போய் சேர்ந்தது மட்டுமில்லாம “உலகின் புகழ்பெற்ற அதிகம் விரும்பி உண்ணப்படும் Street Food” என்ற பெருமையையும் அடைஞ்சிருச்சு.
எல்லா நாடுகளிலும் இறைச்சியை சுழலவைக்குறதுதான் முக்கியமானதா இருக்கு. நீங்க நம்ம ஊர்ல எத்தனை கடையில் இறைச்சி இப்படி சுழல்றதைப் பாத்திருக்கீங்க…? நம்ம ஊர்ல, “ஏய் தள்ளு… தள்ளு… தள்ளுனு” கையால அப்பப்போ சுத்தி விடுறதைத்தான் நான் பார்த்திருக்கேன்.
ஷவர்மா ஆரோக்கியமானதா?
ஷவர்மாவோட வரலாறுலாம் இருக்கட்டும். அது ஆரோக்கியமானதா, சாப்பிடலாமா கூடாதான்னு ஒரு கேள்வி இருக்கு? அதுவும் சமீப சர்ச்சைக்கு அப்புறம் கொஞ்சம் பீதியோடவே பாக்க வேண்டி இருக்கு.
உடல் எடை குறைப்பு முயற்சில இருக்கவங்களுக்கு, கார்போஹைட்ரேட் தவிர்த்து புரோட்டீன் அதிகமா கிடைக்கக்கூடிய உணவு இது. கூடுதல் கொழுப்பைத் தவிர்த்து சுவையை விரும்பக்கூடியவங்களுக்கும் டிக் அடிக்கலாம். கால்சியம், மக்னீசியம், சோடியம், விட்டமின் A மற்றும் C ஆகிய அத்தனை சத்துப்பொருட்களும், நார்ச்சத்தும் மிகுந்த உணவா இருக்குறதால, ஷவர்மா ஆரோக்கியமான உணவுதான்னு துறை சார் நிபுணர்கள் பலருமே கூட ஒரு எச்சரிக்கையோட பரிந்துரைக்குறாங்க.
Also Read : உலகத்தோட முதல் ஐஸ் க்ரீம் ரெசிப்பி தெரியுமா?
ஓர் எச்சரிக்கை
அது என்ன எச்சரிக்கைனு கேக்குறீங்களா?
இதனோட பயன்படுத்தப்படும் குபூஸில் இருக்கும் மைதாவை முதல் எச்சரிக்கையா சொல்றாங்க. இரண்டாவது உடன் பயன்படுத்தப்படும் “மையோனஸ்” தான். அதிகளவிலான மற்றும் தரமற்ற மையோனஸ் பயன்படுத்துறது தீங்கான கொழுப்பை உடலில் சேர்த்து இருதய நோய்களை வரவைக்கும்னு கொஞ்சம் எச்சரிக்கை தேவைனு அலர்ட் குடுக்குறாங்க.
என்னதான் ஆரோக்கியமான உணவாவே இருந்தாலும், கடைகளில் சமீபமா நடந்த ஆய்வுகள் இன்னொரு பெரிய எச்சரிக்கையை நமக்கு உணர்த்துது. அது காலாவதியான, கெட்டுப்போன இறைச்சிகளைப் பயன்படுத்துறது. எவ்வளவு ஆரோக்கியமான உணவாவே இருந்தாலும் இந்த ஃபேக்டர் இருந்தா அது நஞ்சுதான்.
என்னடா இது ஒரு ஸ்னாக்குக்கு வந்த அக்கப்போரான்னு இருந்தாலும் ஹெல்த் முக்கியம் பாஸ்… Shawarma பிரியர்களுக்கு ஒரு டிப்ஸ் சொல்லவா?
ஷவர்மாவில் குபூஸூக்குப் பதிலாக, சாலட்களையும் கேரட், பீட்ரூட் போன்ற காய்கறி சாலட்களைப் பயண்படுத்துவதும், மையோனஸ் பயன்பாட்டில் கொஞ்சம் அடக்கி வாசிச்சும், தரமான சுத்தமான கடைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்க. ஆனா, அளவா சாப்பிடுங்க… அமிர்தமாவே இருந்தாலும் அளவுக்கு மீறினா நஞ்சு தான்.