சுதீப்தோ சென் இயக்கத்தில் ஆதா ஷர்மா நடித்திருக்கும் `The Kerala Story’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி இருக்கிறது. கேரளாவில் 32,000 பெண்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக டீசரில் சொல்லப்பட்டிருக்கும் தகவல் உண்மையாக இருக்க முடியுமா… தி கேரளா ஸ்டோரி படம் முன்வைக்கும் வாதம் என்ன?
2009-ம் ஆண்டு முதல் கேரளா, மங்களூர் பகுதிகளைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஐஎஸ்ஐஎஸ், ஹக்கானி போன்ற தீவிரவாதக் குழுக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அடிமைகளாக இருக்கும் நிலை ஏற்பட்டதாகவும் சொல்கிறது தி கேரளா ஸ்டோரி படக்குழு. இந்தப் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட போது தயாரிப்பாளரும் பிரபல இயக்குநருமான விபுல் அம்ருதலால் ஷா சொன்னது, `நான்கு ஆண்டுகளாக இதுபற்றி இயக்குநர் சுதீப்தோ சென் ஆய்வு செய்திருக்கிறார். அந்த நீண்ட ஆய்வுகளின் அடிப்படையில் எந்தவித பாகுபாடும், சார்பும் இன்றி உண்மையைப் பதிவு செய்ய இருக்கிறோம். கதையை முதலில் கேட்டவுடன் எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது. கதையைக் கேட்ட நிமிடமே, படத்தைத் தயாரிக்க முடிவு செய்துவிட்டேன்’ என்று கூறியிருந்தார்.
படத்தின் டீசர் வெளியானபோது அதில் இடம்பெற்றிருந்த காட்சியும் கருத்துகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருக்கும் நடிகை ஆதா ஷர்மா பேசுவது போல் இருந்த அந்த டீசரில், தனது பெயர் ஷாலினி உன்னிக்கிருஷ்ணன் என்றும் நர்ஸாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த தான், இப்போது பாத்தி பா என்ற பெயரில் மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்கிறார். மேலும், தன்னைப் போலவே 32,000 பெண்கள் இருப்பதாகவும் அந்த டீசரில் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கிறது.
தி கேரளா ஸ்டோரி டீசர் இப்போ வந்தது. ஆனால், படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டபோதே கேரள முன்னாள் முதலமைச்சர் ஒருவரின் பேச்சோடு வெளியான வீடியோ கடந்த மார்ச்சில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீடியோவில் அப்படி என்ன இடம்பெற்றிருந்ததுனு தெரிஞ்சுக்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
டீசர் வெளியான பிறகு சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அரவிந்தாக்ஷன், கேரள முதல்வர், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ஆகியோருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகள் முக்கியமானவை. 2009ம் ஆண்டு முதல் 32,000 பெண்கள் கேரளாவில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் சராசரியாக தினசரி 9 பெண்கள் அந்தத் தீவிரவாத அமைப்பில் சேர்ந்திருக்கிறார்களா?… ஆண்டுக்கு 3,000 பெண்கள் இப்படி தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் ஒன்றில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்வது இந்திய உளவு அமைப்புகளின் தோல்வியைத் தானே காட்டுகிறது. இதுகுறித்து இயக்குநர் சுதீப்தோ சென்னை அழைத்து விசாரிக்க வேண்டும். இது இந்தியா பற்றி தவறான புரிதலை உலக நாடுகள் ஏற்படுத்திவிடும். கேரளா ஒன்றும் இன்னொரு நாடு கிடையாது. அது இந்தியாவின் ஒரு பகுதி. இப்படிச் சொல்வது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. அரசியல் லாபங்களுக்காக இந்தியாவின் ஒரு மாநிலத்தைத் தீவிரவாதத்தை ஆதரிக்கும் மாநிலமாக சித்திரிப்பது அபாயகரமானது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். புகாரை அடுத்து இதுபற்றி கேரள டிஜிபி விசாரணைக்கு முடுக்கி விட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
தி கேரளா ஸ்டோரி படம் பற்றிய அறிவிப்பு கடந்த மார்ச் மாதத்தில் வெளியானது. அப்போது கேரளாவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு பற்றியும் தனது சொந்த மாநிலமான கேரளா எப்படி Islamization-க்கு இலக்காக்கப்படுகிறது என்பது பற்றியும் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் கே.எஸ்.அச்சுதானந்தன் பேசுவது போன்ற வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருந்தது. மேலும், 32,000 பெண்கள் மாயமான நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ வெறும் 99 வழக்குகளை மட்டுமே விசாரித்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்கவில்லை என்றும் இயக்குநர் சுதீப்தோ சென் குற்றம்சாட்டியிருந்தார்.
Also Read – 50 ரூபாய் வருமானம் to 3000 கோடி Turnover… போத்தீஸின் 100 வருட வரலாறு!
தி கேரளா ஸ்டோரி டீசர் சொல்ற விஷயங்களுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கானு நாமளும் தேடிப்பார்த்தோம். கேரளா தரப்பிலோ மத்திய அரசு தரப்பிலோ இதுபற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. அதேபோல், அதற்கு ஆதாரமான பத்திரிகை செய்திகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. தி கேரளா ஸ்டோரி டீசர் பார்த்துட்டீங்களா… அதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க.. அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!