‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியாகி பல மாதங்கள் கழித்தும் அதுதொடர்பான விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. அப்படத்தில் சூர்யா பேசிய ஒவ்வொரு வசனமும் சாதாரண பழங்குடி மக்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளுக்கு நீதி கேட்கும் விதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. உண்மையை உரக்கப் பேசியதாலோ, என்னவோ இன்றைக்கு ஆஸ்கரின் இறுதிப்பட்டியலில் இந்தப் படம் இடம்பிடிக்கும் என சமூக வலைதளங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. இதனை நிரூபிக்கும் வகையில், பிரபல விமர்சகரும், ராட்டன் டொமேட்டோஸ் ஆசிரியர்களில் ஒருவருமான ஜாக்குலின் கோலே தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ‘ஜெய் பீம்’ ஆஸ்கர் விருதை தட்டிச் செல்கிறதோ, இல்லையோ… தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படமாக என்றும் இப்படம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சரி, நமது கதைக்கு வருவோம்!
Jai Bhim Reference
ராஜாக்கண்ணு வழக்கில் முக்கிய தொடக்கமாக அமைந்தது, `ஆட்கொணர்வு மனு’தான். அதாவது ஹேபியஸ் கார்பஸ். இதைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், எம்.எஸ்.பாஸ்க
ர்,
’யாரையாவது சட்டவிரோதமா கடத்திட்டுப்போய் அடைச்சு வைச்சிருந்தாதான் இந்த பெட்டிஷன ஃபைல் பண்ண முடியும். இந்த கேஸ்ல இவா மூணு பேரும் தப்பிச்சு ஓடிபோய்ருக்கா. ரெண்டே நிமிஷத்துல டிஸ்மிஸ் பண்ணிடுவாரு பாரு’ என முதல் ஹியரிங்கில் வசனம் பேசுவார். ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். ராஜாக்கண்ணு வழக்கு தொடர்பான இரண்டாவது ஹியரிங்கின்போது நீதிபதிகள், ’ப்ராப்பர் எவிடென்ஸ் இல்லாமல் யூகமாக சந்தேகப்பட்டால் கேஸை டிஸ்மிஸ் பண்றதை தவிர வேற வழி இல்லை’னு சொல்லுவாங்க.
ஹேபியஸ் கார்பஸ்ல சாட்சிகளை குறுக்கு விசாரணை பண்ண முடியாதுனும் அரசு தரப்பு வக்கில் குறிப்பிடுவாரு. அதுக்கு சூர்யா தன்னுடைய வாதத்தை முன் வைக்கும்போது,எமெர்ஜன்சி டைம்ல ராஜன் என்கிற ஸ்டூடண்டை கஸ்டடி எடுத்தது கேரள போலீஸ். அதுக்கப்புறம் அவர் தப்பிச்சு ஓடிட்டாருனு சொன்னாங்க. ஹேபியஸ் கார்பஸ் பெட்டிஷன் எடுத்த கேரளா ஹைகோர்ட், போலீஸ் சாட்சிகளை குறுக்கு விசாரணை பண்றதுக்கு சிறப்பு அனுமதி கொடுத்தாங்க. அதுல இருந்து நிறைய உண்மைகள் வெளிவந்துச்சு. இந்த கோர்ட் ராஜன் கேஸை முன் மாதிரியா எடுத்துக்கிட்டு அரசு தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய சிறப்பு அனுமதி கொடுக்கணும்னு கேட்டுக்கிறேன்’ அப்டினு சொல்லுவாரு.
ஜெய்பீம் படத்துல குறிப்பிடப்பட்ட `ராஜன் யாரு? அந்த கேஸ்ல என்ன நடந்தது?’ என்பதைப் பற்றிதான் இந்தக் கட்டுரைல தெரிஞ்சுக்கப்போறோம்.
Rajan
கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்த மாணவர்தான், ராஜன். மேடை நாடக நடிகர், பாடகர் என பல்வேறு திறமைகளை உடைய சிறந்த மாணவராக ராஜன் திகழ்ந்துள்ளார். கம்யூனிச சித்தாந்தங்களை உடையவர், நக்ஸல்பாரி இயக்க ஆதரவாளராக இருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1976-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதி மாணவர் ராஜனை கேரளா காவல்துறை அதிகாரிகள் ஹாஸ்டலில் இருந்து அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு, ராஜனுக்கு என்ன ஆனது என்பது மர்மமாகவே இருந்தது. எமர்ஜென்சி காலத்தில் காவல் நிலையத்தின் மீது ராஜன் என்பவர் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனால், ராஜன் என்ற பெயரில் இருக்கும் இந்த மாணவரை ஆள்மாறி தவறுதலாக அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது. காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்ற மாணவர் ராஜன், அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு, மிகவும் கொடூரமான உருட்டல் முறை உட்பட பல வழிகளில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அவரது உடலைக் காவல்துறை அதிகாரிகள் என்ன செய்தனர் என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.
Habeas corpus
எமர்ஜென்சி காலம் முடிவுக்கு வந்ததும் வெளிவந்த உண்மைகளில் ராஜன் வழக்கு உண்மையும் ஒன்று எனலாம். ஆரம்பம் முதலே தனது மகன் பற்றிய தகவல்களை தெரிவிக்க அதிகாரிகளிடம் ராஜனின் தந்தை ஈச்சர வாரியார் முயற்சி செய்துள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் முதல் எம்.பிக்கள் வரை பல்வேறு தரப்பிடம் மனுக்களை கொடுத்துள்ளார். எனினும், எந்த தகவலும் கிடைக்காததால் இந்தியாவில் நெருக்கடி நிலை முடிந்ததும் ராஜனின் தந்தையான ஈச்சர வாரியர் கேரள உயர்நீதிமன்றத்தில் மார்ச் 25-ம் தேதி 1977-ம் ஆண்டு ஹேபியஸ் கார்பஸ் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன் பொட்டி மற்றும் நீதிபதி காலித், மாணவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் ஒருவேளை அவர் விடுவிக்கப்பட்டிருந்தால் அதனை நிரூபிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை என்றும் கூறினர். ராஜன் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டவர்கள் பற்றி ஆரம்பத்தில் கல்லூரியின் பேராசிரியர்களுக்கு எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை. பின்னர், ராஜனைத் தவிர்த்து மற்றவர்களின் விபரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விசாரிப்பதற்கென கொடூரமாக அமைக்கப்பட்ட சித்ரவதை முகாமுக்கு ராஜன் அழைத்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
Rumour
ராஜன் சக நக்ஸல்பாரி இயக்கத்தினருடன் சேர்ந்து காவல்நிலைய தாக்குதலை திட்டமிட்டதாகவும் அவரது கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அப்போதைய உள்துறை அமைச்சர் கருணாகரனை கிண்டல் செய்யும் வகையில் மேடையில் ராஜன் பாடல் பாடியதாகவும் ராஜன் குறித்த தகவல்கள் வெளியானது. இவையெல்லாம், காவல்துறை அதிகாரிகளின் சார்பில் ராஜன்மீது சுமத்தப்பட்ட பழியாகவே இன்றுவரை பெரும்பான்மையான மக்களால் பார்க்கப்படுகிறது. ராஜனுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தினர். மாநிலம் முழுவதும் பரவலாக கவனம் பெற்ற இந்த வழக்கில் மக்கள் மற்றும் மாணவர்கள் `ராஜன் எங்கே?’ போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Karunakaran Resignation
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் அச்சுதமேனனிடம் ராஜனின் தந்தை ராஜனை விடுவிக்க பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இதுதொடர்பான விஷயங்களை அப்போது உள்துறை அமைச்சராக இருந்த கருணாகரன் பார்த்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். ராஜனின் தந்தையிடம் கருணாகரன், “அவர் முக்கிய வழக்கில் சிக்கியுள்ளார். அவரை விடுதலை செய்ய என்னால் முயன்ற நடவடிக்கைகளை எடுக்கிறேன்” என்று கூறியதாக ராஜனின் தந்தை தெரிவித்தார். ஆனால், அதற்கு பிறகு நடந்த தேர்தல் பிரசாரங்களில் ராஜனுக்கு எதிராக கருணாகரன் பேசியதாகவும் குறிப்பிட்டார். இதனை, கருணாகரன் முழுவதுமாக மறுத்தார். பின்னாள்களில், முன்னுக்குப்பின் முரணாகவும் கருணாகரன் தனது கருத்தை தெரிவித்தார். இதே ராஜன் விஷயத்தால் அவர் முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் முடிவடைவதற்குள் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு எதிராக அப்போதைய சமூக பிரபலங்களும் மக்களும் தங்களது கருத்தைத் தெரிவித்தனர்.
Highcourt Judgement
ராஜன் வழக்கு விசாரணையில் ராஜன் இறந்தது உறுதியானதும் தீர்ப்பு வழங்கப்பட்டது. கருத்துகளை மாற்றிக்கூறிய கருணாகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த காவல்துறை துணைத்தலைவர் ஜெயராம் படிக்கல், காவல்துறை கண்காணிப்பாளர் லட்சுமணன் மற்றும் காவல் ஆய்வாளர் புலிகோடன் நாராயணன் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. காவல்துறையினர் ராஜன் இறந்துவிட்டதாக ஒப்புக்கொண்டாலும் அதற்கான எச்சங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், அதிகாரிகளின் மேல்முறையீடுகளால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பல்வேறு சர்ச்சைகள் சூழந்த ராஜன் வழக்கில் இன்றும் பல மர்மங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
Piravi
கேரளாவை மட்டுமல்ல நாட்டையே உலுக்கிய ராஜனின் கொலை வழக்கு சம்பவம் ’பிறவி’ என்ற தலைப்பில் 1989-ம் ஆண்டு படமாக எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஷாஜி. என். கருணின் மாஸ்டர் பீஸ் படமாகவும் இது உள்ளது. அதுமட்டுமல்ல, ராஜனின் தந்தை தனது போராட்டத்தை ‘ஒரு அச்சன்டே ஓர்மக்குறிப்புகள்’ என்ற தலைப்பில் புத்தகமாகவும் எழுதியுள்ளார்.