பிரதமர் ஜவஹர்லால் நேரு, தமிழக முதல்வர் காமராஜருக்காகத் தனது கொள்கையைத் தளர்த்திக் கொண்ட சம்பவம் 1961-ல் நடந்திருக்கிறது… வாங்க அதோட பின்னணி என்னனு தெரிஞ்சுக்கலாம்.
ஜவஹர்லால் நேரு

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டவர் ஜவஹர்லால் நேரு. பிரதமராகக் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் 286 நாட்கள் பொறுப்பு வகித்தவர். இந்திய வரலாற்றிலேயே அதிக ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்தவர் என்கிற சாதனையும் இன்று வரையில் அவரிடமே இருக்கிறது. வெளியுறவுக் கொள்கைகளைத் திறம்படக் கையாண்டதன் மூலம் இந்தியாவுக்குப் பல நாடுகளோடு நல்ல நட்புறவை ஏற்படுத்திக் கொடுத்தவர் நேரு என்று அரசியல் விமர்சகர்களிடம் பரவலாகக் கருத்து உண்டு. சுதந்திரப் போராட்ட வீரரான இவர், காந்தியின் ஆதரவோடு பிரதமரானவர். காந்தி, நேருவே தனது அரசியல் வாரிசு என்று அறிவித்தார். 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ல் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழக்கும் வரையில் பிரதமராகவே தொடர்ந்தார். அவரது பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. `நவீன இந்தியாவின் சிற்பி’ என்று புகழப்பட்டவர்.
காமராஜருடனான நட்பு
தேசிய அரசியலில் பிரபலமான தலைவராக இருந்தபோதும், 1952 தொடங்கி 1963 வரை தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தவர் காமராஜர். அப்போது, ராஜாஜி தமிழக காங்கிரஸில் பிரபலமாக இருந்தாலும், காமராஜரின் களப்பணி மீது தனி மரியாதையே வைத்திருந்தார் நேரு. காமராஜரின் மக்கள் பணி மீதும் அவரது தலைமைத்துவம் மீது நம்பிக்கையும் அபிமானமும் நேருவுக்கு உண்டு. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்.

உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்பதை நேரு, தனது வாழ்நாள் முழுவதும் கொள்கையாகவே கடைபிடித்து வந்தார். ஆனால், தனது கொள்கையை காமராஜருக்காக சற்று ஒதுக்கி வைத்த நிகழ்வு 1961-ல் நடந்தது. அந்த ஆண்டில் அக்டோபர் 9-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள ராஜாஜி மணிமண்டபம் அருகே அமைக்கப்பட்டிருந்த காமராஜர் சிலையை பிரதமர் நேருவே வந்து திறந்து வைத்தார். தனது கொள்கையை சமரசம் செய்து கொண்டது ஏன் என அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் நேரு பேசினார்.
அவர் பேசுகையில், “மதிப்பிற்குரிய என்னுடைய சகாவான காமராஜரின் சிலையை நான் வந்து திறந்து வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் சி.சுப்ரமணியம் வந்து என்னை அழைத்தார். உயிரோடு இருப்பவர்களின் சிலையைத் திறந்து வைப்பதில்லை என்று எல்லா இடங்களிலும் பேசி வருபவன் நான். காமராஜரின் சிலையைத் திறந்து வைக்கும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள நாம் விரும்பியபோதும், அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதில் எனக்கு சங்கடம் ஏற்பட்டது.

இந்த விஷயத்தில் பெரிய மனப் போராட்டமே எனக்குள் நடந்தது. இறுதியாக, காமராஜரின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வது என்று முடிவு செய்து, விழாவுக்கு வந்து விட்டேன். நாட்டில் உள்ள பல்வேறு தலைவர்களுக்கும், காமராஜருக்கும் வித்தியாசம் இருக்கிறது. அவரது தலைமை தனிச்சிறப்பு பெற்றதாகும். காமராஜர், மக்களிடையே இருந்து, மக்களின் தலைவராகத் தோன்றி, மக்களுக்காகப் பணிபுரிந்து வருகிறார். முன்பெல்லாம் ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் தலைவர்களாகத் திகழ முடிந்தது. ஆங்கிலம் படித்தவர்களைத்தான், இப்படி சாதி’ என்று குறிப்பிடுகிறேன். அவர்கள் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். அதைத்தான் பெருமையாக நினைப்பார்கள். அவர்கள் பேசுவது புரியாவிட்டாலும், மக்கள் கேட்டுக்கொள்வார்கள். காமராஜர், ஆங்கிலத்தை நல்ல முறையில் புரிந்து கொள்வதோடு, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் ஆற்றலையும் பெற்றிருக்கிறார். அவர் என்னுடன் ஆங்கிலத்தில்தான் பேசுவார். ஆனாலும் அவர்
ஆங்கிலம் படித்தவர்கள்’ என்ற சாதியைச் சேர்ந்தவர் அல்ல. காமராஜரின் தலைமை நாட்டுக்குப் புதுமையானது. அவர், ஆற்றல் மிக்க ஒரு தலைவராக விளங்குகிறார்.
மற்றவர்களுக்கு முன்மாதிரியான தலைவராகவும் திகழ்கிறார். சாதாரணத் தொண்டராகப் பொது வாழ்க்கையைத் தொடங்கி, தமது உழைப்பால் உயர்ந்த அவருக்கு உருவச்சிலை எழுப்பியது மிகவும் பொருத்தமானதே. எனவே, இந்த விழாவில் கலந்து கொண்டது பற்றி மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நீண்ட காலம் வாழ்ந்து, நாட்டுக்குத் தொண்டு புரிய விரும்புகிறேன்’’ என்று பேசி காமராஜருக்குப் புகழாரம் சூட்டினார்.