கே.ஜி.எஃப் படம்னு சொன்னவுடனே நமக்கு நினைவுக்கு வர்றது மாஸான டயலாக்குகள் மட்டுமில்ல..கம்பீரமான நிழல்கள் ரவியோட குரலும்தான். இரண்டாவது பாகத்துல அவரோட குரல் இடம்பெறாதது ஃபேன்ஸ் பலருக்கும் வருத்தத்தைக் கொடுத்துச்சுனே சொல்லலாம். நாயகன் படத்துல கமலோட நடிக்குறதுக்கு இவர் பண்ண சேட்டை என்ன தெரியுமா… அமிதாப் பச்சனுக்கு டப்பிங் பேசுற வாய்ப்பு இவருக்கு எப்படி கிடைச்சது தெரியுமா… அதேமாதிரி, எதைக் கேட்டாலும் தெரியாது என்கிற வார்த்தையேயே சொல்லமாட்டாராம் நிழல்கள் ரவி.. அதனால ஏற்பட்ட ஒரு சிக்கல்னு சினிமா பயணத்துல சில சுவாரஸ்ய சம்பவங்கள் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.
நடிகர்
நாயகன் சமயம் கமல் பீக்ல இருந்த டைம். அவர் கூட நடிக்க வாய்ப்பு வந்தா எந்தவொரு நடிகரும் அதை மிஸ் பண்ண மாட்டாங்க. அப்படி இவருக்கு வாய்ப்பு வந்தபோது, அதைத் தக்க வைச்சுக்க இவர் என்ன பண்ணாருனு தெரியுமா..
நாயகன் படத்தில் கமலுடன் நடிப்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இவரை அழைத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவரை கமலுடன் அருகில் நிற்க வைத்துப் பார்த்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து உயரம் காரணமாக யோசிக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டிருக்கிறார். இதையடுத்து, மண்ணுக்குள் தனது காலைப் புதைத்துக் கொண்டு நின்றிருக்கிறார். அதன்பிறகுதான், நாயகனில் கமலின் மகனாக இவர் நடித்திருக்கிறார். நாயகன் படத்துக்கு முன்னாடி இவர் எப்படி சினிமாவுக்குள்ள வந்தார்னு தெரிஞ்சுக்கலாமா…
நடிகர் நிழல்கள் ரவி கோவையைச் சேர்ந்தவர். சத்யராஜின் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் இவரது வீடு இருந்ததாம். பி.எஸ்.ஜி கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் படிப்பை முடித்த இவர், கல்லூரி காலங்களில் அமிதாப் பச்சன், ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோரின் படங்களைப் பார்த்து வளர்ந்தாராம். பின்னர், அவர்களைப் போலவே மிமிக்ரியும் செய்து அசத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என சென்னை வந்தவர், 1980-ல் பாரதிராஜாவின் நிழல்கள் படம் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார். அதன்பின்னர், மலையாளத் திரையுலகுக்குப் போன ரவி, 1980-களில் கக்க உள்பட 20-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
பொதுவாகப் படத்துக்காக இவரை அணுகும்போது, இது தெரியுமா என்று கேட்டால், தெரியாதுனு சொல்லவே மாட்டாராம். அப்படி தெரியும் எனத் தலையாட்டி, பின்னர் கோக்குமாக்காக முடிந்த சம்பவம் ஒன்றும் இருக்கிறது. மலையாளத்தில் ரோகினி, ரகுவரனுடன் இவர் நடித்த கக்க படத்தின்போது நீச்சல் தெரியுமா என்று ரவியிடம் கேட்டிருக்கிறார்கள். அதுதானே நல்லா தெரியும்னு இவரும் தலையாட்டிருக்கார். அந்த இயக்குநர் முன்னர் எடுத்த படத்தில், நாயகனாக நடித்திருந்த ஜெயன், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருக்கிறார். இதைச் சொல்லியே இவரிடம் கேட்டிருக்கிறார். அதைக் கேட்டதும் நிழல்கள் ரவி ஜெர்க் ஆகிவிட்டாராம்.
படத்தின் ஒரு காட்சியில் கடலில் தத்தளிக்கும் ஹீரோயின் ரோகினியை போட்டில் இருந்து குதித்து இவர் காப்பாற்ற வேண்டும். அலைகள் அதிகம் இருப்பதுபோல் காட்ட புரபல்லர் எல்லாம் வைத்து, கடல் அருகில் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நீச்சல் தெரிந்திருந்த ரோகினி கடலில் குதித்து ஷாட்டுக்கு ரெடி சொல்ல, டைரக்டர் இவரை குதிக்கச் சொல்லியிருக்கிறார். 40 அடிக்கும் மேல் ஆழம் கொண்ட கடலில் குதிக்க இவர் தயங்கியிருக்கிறார். என்னாச்சுனு கேட்க ஒருமாதிரி இருக்கு சார் இவர் சொல்லவே, பின்னர் அந்த சீனையே கரையோரத்தில் 7 அடி ஆழத்தில் எடுத்தார்களாம். முந்தைய படத்தில் ஏற்பட்ட சம்பவத்தை யோசித்தே முன்னெச்சரிக்கையாக படக்குழு ஷூட்டிங் லொகேஷனையே மாற்றியிருக்கிறார்கள்.
டப்பிங் கலைஞர்
குரல் வளம் எல்லாத்துக்கும் அமைஞ்சிடாதுனு சொல்வாங்க. பாடகர்களுக்கு ஒரு வகையான குரல்வளம் வேணும்னா, டப்பிங் கலைஞர்களுக்கோ வேறுவிதமான குரல் வளம் தேவைப்படும். அப்படி இவர் இந்தி நடிகர் அமிதாப்பின் ஆதர்ஸ தமிழ்க் குரலாக இவரின் குரல் மாறியது ஆக்ஸிடண்டாக நிகழ்ந்த நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். இந்தி டிவி ஷோவான கோன் பனேகா குரோர்பதி தமிழுக்கு வந்தபோது, அமிதாப்பின் குரலுக்காக சுமார் 400-க்கும் மேற்பட்டவர்களின் குரல்களை டெஸ்ட் பண்ணாங்களாம். ஆனா, எதுவுமே செட் ஆகாத நிலையில் இவரை அழைத்திருக்கிறார். வணக்கம். குட்மார்னிங்..’னு இவர் சில நிமிடங்கள் இன்ட்ரோ கொடுத்ததுமே, வாய்ஸ் சிறப்பா மேட்ச் ஆகியிருக்கு. பேசிட்டு வீட்டுக்கு வந்த இவருக்கு இரவு 11 மணி போல அமிதாப்பிடம் இருந்து போன் வந்திருக்கிறது.
ரவி உங்க குரல் கரெக்டா மேட்ச் ஆகுது. நீங்கதான் இதைப் பண்றீங்க’னு அமிதாப்பே இவரிடம் கேட்டுக் கொண்டாராம். அப்படித்தான், கிட்டத்தட்ட 84 எபிசோடுகள் அமிதாப்பின் குரலாக இவரின் குரல் ஒலித்திருக்கிறது. அதன்பிறகு, அமிதாப்பின் படம் தமிழுக்கு வருகிறது என்றாலே, அவரின் தமிழ் டப் ஆர்டிஸ்ட் நிழல்கள் ரவிதான் என்பது எழுதப்படாத சட்டமானது. தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான், சைரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட படங்கள் போக, காப்பான் போமன் இரானி, பிகில் ஜாக்கி ஷெராஃப், பொம்மலாட்டம் நானே படேகர் என இந்தியின் மூத்த நடிகர்களுக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.
Also Read – கதைகளின் மேக்கப்மேன்… பி.வாசு-வின் கதை!
அதேபோல், டப்பிங் ஆர்டிஸ்டாக இவர் மா காட்டிய இன்னொரு நிகழ்வு கே.ஜி.எஃப் படம். கதையை விவரிக்கும் நேரேட்டராக வரும் ஆனந்த் நாக்கின் குரலாக கம்பீரமாக இவர் பேசிய டயலாக்குகள் படத்தை வேற லெவலுக்குக் கொண்டு சேர்த்தது என்றுதான் சொல்ல வேண்டும். `ரத்தத்துல எழுதுன சரித்திரம் இது. இதை மையால தொடர முடியாது. மறுபடியும் தொடர்ந்தா ரத்தம்தான் கேக்கும்’னு இவரோட டயலாக் படத்தின் மாஸ் மீட்டரை ஏகத்துக்கும் எகிற வைத்தது. இரண்டாவது பாகத்துல ஆனந்த் நாக் கேரக்டர் இல்லாத நிலையில், பிரகாஷ் ராஜ் உள்ளே வந்திருக்கிறார். அப்படியான சூழ்நிலையில்தான் நிழல்கள் ரவியின் குரல் படத்தில் இடம்பெறவில்லை. அவர் குரல் ஃபேமஸா இருந்த சூழ்நிலைல ஸ்ஃபூப் பண்ற மாதிரி டிக்கிலோனா படத்தில் நேரேட்டராவும் குரல் கொடுத்திருப்பார்.
குணச்சித்திர நடிகர்
ஒவ்வொரு கேரக்டரிலும் தன்னோட இன்புட் மூலமா மெருகேத்துறதுல ரவி கில்லாடி. அதுக்கு உதாரணமா பல படங்களைச் சொல்லலாம். மாப்பிள்ளை படத்தில் ரஜினியோடு இவர் நடிக்கையில், நீட்’ அப்படினு ஒரு ஐகானிக் டயலாக்கைச் சொல்லுவார். அதுக்கு மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கவே, அண்ணாமலை படத்திலும் ரஜினி இவருக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் ரஜினி. இதுல டிஃபரண்டா எதாவது பண்ணுங்க ரவி என ரஜினி சொல்லவே, அந்தப் படத்தில் இருக்கும் வித்தியாச சிரிப்பைப் பிடித்திருக்கிறார். பீத்தோவனின் டாக்குமெண்டரியில் இருந்து அந்த சிரிப்பைப் பிடித்த அவர், அதைத் தனது ஸ்டைலுக்கு மாற்றி, அடுத்த நாள் ஷூட்டிங்கில்
க்ளூக்’ என டயலாக் பேசி சிரிக்கவே, அது அனைவருக்கும் பிடித்துப் போனது. அப்படித்தான் அந்த சிரிப்பும் அண்ணாமலை படத்துக்குள் வந்திருக்கிறது. இதுதவிர, சின்னத்திரையிலயும் டிரெண்டிங் ஆக்டராவும் கலக்கியவர். 1991-ம் ஆண்டு ஒளிபரப்பான கே.பாலச்சந்தரின் ரயில் சினேகம் டெலி ஃபிலிம் தொடங்கி, அலைகள், தென்றல், ரன், சித்தி – 2, திருமகள் போன்ற தமிழின் ஹிட் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
நிழல்கள் ரவி பண்ண சம்பவங்கள்யே எது உங்களுக்குப் பிடிச்சதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!