ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தலைவி’ படம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா மட்டும் தற்போது உயிரோடிருந்தால் அவரது ரியாக்சன் என்னவாக இருக்கும் என யோசித்திடாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. இந்நிலையில், கலைஞர் – எம்.ஜி.ஆரின் நட்பையும் மோதலையும் அடிப்படையாகக்கொண்டு கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதே மணிரத்னம் எழுதி இயக்கிய படம் ‘இருவர்’. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு கலைஞர் மணிரத்னத்திடம் என்ன சொன்னார் தெரியுமா..? தெரிந்துகொள்வோம்.
‘ரோஜா’ ‘பம்பாய்’ ஆகிய படங்களின் வெற்றியைவிட, அந்தப் படங்களில் இயக்குநர் மணிரத்னம் தொட்டிருந்த அரசியல் 90-களில் மிகப் பிரபலம். அந்த சூழ்நிலையில் ‘பம்பாய்’ படத்திற்குப் பிறகு மணி ரத்னம் கையிலெடுத்த படம்தான் ‘இருவர்’. இந்தப் படத்தின் தொடக்கத்திலேயே இது கலைஞர் – எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படம் என தகவல்கள் வெளியேக் கசிந்துவிட, படத்திற்கு எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் ஒருங்கே எகிறத் தொடங்கியது.
ஒருவழியாக மணிரத்னம் ‘இருவர்’ படத்தை எடுத்து முடித்து சென்சார் வாங்கப்போனபோது பிரச்சனைகள் பூதாகரமாகத் தொடங்கியது. நிகழ்கால அரசியல்தலைவர்களை நினைவூட்டுவதுபோல காட்சிகள் இருப்பதால் படத்தை வெளியிட அனுமதிக்கமுடியாது என மறுத்தது சென்ஸார் போர்டு. அதன்பிறகு மணிரத்னம் ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல, எட்டு பேர் கொண்ட குழு ‘இருவர்’ படத்தைப் பார்த்தது. படத்தைப்பார்த்த ரிவைசிங் கமிட்டி, சில காட்சிகளில் குறிப்பிட்ட சில வசனங்களை மட்டும் நீக்கிவிட்டால் படத்தை ரிலீஸ் செய்துகொள்ளலாம் என U/A சர்டிஃபிகேட்டுடன் அனுமதி தந்தது. இப்போதும் ‘இருவர்’படத்தில் ஆங்காங்கே சில காட்சிகளில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டு நடிகர்கள் வெறுமனே வாய் அசைப்பதாக இருப்பதைப் பார்க்கமுடியும்.
அந்த காலகட்டத்தில்தான் அப்போதைய முதல்வர் கலைஞர் ‘இருவர்’ படத்தைப் பார்ப்பதற்காக ஸ்பெஷல் ஷோ ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார் மணி ரத்னம். கலைஞர் படம் பார்க்க வந்ததிலேர்ந்தே, படத்தை பார்த்துவிட்டு அவர் என்ன சொல்வாரோ என டென்ஷனில் இருந்திருக்கிறார் மணிரத்னம். படமும் ஓடி முடிந்திருக்கிறது. மணி ரத்னம் கலைஞர் அருகில் போக, ‘படம் எடுக்க உனக்கு வேற நல்ல கதையே கிடைக்கலையா’ என சொல்லிவிட்டு எழுந்துபோயிருக்கிறார் கலைஞர். இந்த ஒருவரி மூலம் கலைஞர், தன்னைப்போல ஒரு கேரக்டரை சித்தரித்து படமாக எடுத்ததையும் அதுவும் வெகுஜன மக்களுக்கு பிடிக்கும்படி இல்லை என்பதையும் நறுக்கென சொல்லியிருந்திருக்கிறார்.
அன்று கலைஞர் நினைத்திருந்தால் ‘இருவர்’ படத்தை முடிந்த அளவுக்கு வெளியிடமுடியாதவாறோ அல்லது கதையில் திருத்தம் செய்யவோ செய்திருக்கமுடியும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் எதுவும் யோசிக்காமல் சினிமாவை சினிமாவாகவும் அப்படியே அதில் உள்ளார்ந்து தன்னை விமர்சித்திருக்கிறார்கள் என்றால் அந்த விமர்சனத்தை விமர்சனமாகவும் எடுத்துக்கொண்டார். அதுதான் கலைஞர்.
Also Read : அடுத்தடுத்து 3 படங்கள்… சினிமாவில் பிஸியாகும் எம்.எல்.ஏ உதயநிதி!