“சுருக்குப் பையில் பணமிருந்தால் தலைநிமிர்ந்து நடப்பேன்’ என ஒரு பெண் சொல்லியிருக்கிறார். இதைவிட இந்தத் திட்டத்துக்கும் எனக்கும் வேறென்ன பெருமை வேண்டும்?’’ – காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத் தொடக்க விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தைகள் இவை. அதுதான் உண்மையும் கூட. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைப் பற்றி மற்ற மாநில அமைச்சர்களும், ஏன் மத்திய அமைச்சர்களுமே கூட விசாரிப்பதாகவும் முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் பார்த்தால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியான திட்டம் என்றே சொல்லலாம். ஏன் அப்படிச் சொல்லப்படுகிறது… அதற்கான 3 காரணங்களைத் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
பெண்களுக்கான முக்கியத்துவம்
மனிதகுலம் ஆரம்பகாலம் தொட்டே தாய்வழி சமூகமாகவே மிளிர்ந்துவந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டு, பழைமைவாதக் கருத்துகளாலும் மதத்தின் பெயராலும் அவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்டார்கள். பெண்ணடிமைத் தளையை அறுத்து எரிய எத்தனையோ சமூக சீர்த்திருத்தவாதிகள் போராட்டங்களை முன்னெடுத்தனர். சமூகநீதி காப்பதில் முன்னோடி மாநிலமான தமிழ்நாடும் திராவிடக் கட்சிகளும் பெண் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் அக்கறையோடு இருந்தனர். இதற்காக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சொத்துரிமை, உள்ளாட்சிகளில் 33% இட ஒதுக்கீடு, பெண்கள் சுய உதவிக்குழுக்கள், கைம்பெண், திருமண நிதி உதவி, கைம்பெண் ஓய்வூதியத் திட்டம், 5-ம் வகுப்பு வரை பெண்களே ஆசிரியைகள், கர்ப்பிணிகள் மகப்பேறு நிதியுதவி, உயர்கல்வி பயிலும் பெண்களுக்கென புதுமைப் பெண் திட்டம், உழைக்கும் மகளிர்க்குப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் என தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை பெண் சமுதாய முன்னேற்றத்துக்கென வகுத்துக் கொடுத்திருக்கிறது.
அந்த வரிசையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்பது இந்திய அளவில் மட்டுமல்ல; இன்னும் சொல்லப்போனால் உலக அளவிலேயே முன்னோடித் திட்டம் என்று சொல்லலாம். ஆயிரம் ரூபாய் என்பது சொற்பமான தொகைதானே என்று விமர்சனம் செய்பவர்கள் இருக்கலாம். ஆனால், சிறுவாட்டுக் காசு என்று இன்றளவும் கிராமங்களில் இருக்கும் தாய்மார்கள் தங்கள் சிறுசேமிப்பைத் தொடர்ந்து வருகிறார்கள். குடும்பத்தின் கடினமான சூழ்நிலைகளிலும் முக்கியமான தருணங்களிலும் அந்த சிறு தொகை அளிக்கும் நம்பிக்கைக்கு ஈடுஇணையேதுமில்லை. அதற்கு எந்தவகையிலும் குறைவில்லாதது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் அரசு இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் அளிக்கும் இந்த ஆயிரம் ரூபாய். இதனாலேயே இந்தத் திட்டம் பற்றி, `இது உதவித் தொகை அல்ல; உங்களின் உரிமைத் தொகை’ என்று பெருமையாகச் சொல்கிறது தமிழ்நாடு அரசு. உண்மைதானே?!
நீண்டகால கோரிக்கை
இல்லத்தரசிகளுக்கு அவர்களின் உழைப்புக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று நேற்று எழுந்ததல்ல. அவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கிற நோக்கில் பல்வேறு குரல்களும் எழுந்திருக்கின்றன. இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரித்து அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை முதன்முதலில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்ற மூன்றாவது தேசிய பெண்கள் விடுதலை மாநாட்டில் எழுப்பப்பட்டது. இதற்காகவே 1972-ல் செல்மா ஜேம்ஸ் என்பவரால் International Wages for Housework Campaign (IWFHC) என்கிற அமைப்பும் தொடங்கப்பட்டது. அதன்பிறகு இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு காலகட்டங்களில் இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால், எதுவும் நடைமுறை சாத்தியம் பெறவில்லை. இந்தியாவில், கடந்த 2012-ல் காங்கிரஸ் ஆட்சியின்போது அப்போதைய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணா திராத், இல்லத்தரசிகளின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவர்களின் கணவர்களிடமிருந்து கட்டாய ஊதியம் பெற்று அளிக்கும் திட்டத்தைப் பரிசீலிப்பதாக அறிவித்தார். ஆனால், இதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. பெயர்கள்தான் வெவ்வேறாக இருந்தனவே, தவிர அவற்றின் அடிப்படை நோக்கம் எல்லாமே ஒன்றை மையப்படுத்தியே இருந்தன. அதுதான் பெண்களின் பொருளாதார சுதந்திரம். இப்படி பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் எழுப்பி வரும் உரிமைக்குரலின் முக்கியமான ஒரு பகுதியை தமிழ்நாடு அரசு முதன்முறையாக செயல்படுத்திக் காட்டியிருக்கிறது என்பதுதான் நாம் இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.
பாலின சமத்துவம்
இந்திய அளவில் பெண்களுக்கென நலத்திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு வந்தாலும், உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையை எடுத்துக் கொண்டால் அதில் பட்டியலிடப்பட்டிருக்கும் 146 நாடுகளில் நமது இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது 127-வது இடம்தான். இப்படி கவலைகொள்ளும் நிலையை நாம் பெற்றிருக்க முக்கியக் காரணம் பெண்களின் பொருளாதார நிலையும் கல்வி நிலையும்தான் என்கிறார்கள். இதில், கல்வியை எடுத்துக் கொண்டால் பெண் குழந்தைகளின் பள்ளிக் கல்வி தொடங்கி அவர்கள் உயர்கல்வி வரையில் இடைநிற்றல் இல்லாமல் தொடர வழிவகை செய்யும் திட்டங்களில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. உயர் கல்வியைத் தொடர்ந்து பயில உதவும் வகையில், உயர்கல்வியை நிறைவு செய்யும் வரையில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தமிழ்நாடு அரசு செவ்வேனே நிறைவேற்றி வருகிறது. பொருளாதாரம், கல்வியில் பெண்கள் தலைநிமிராமல் அவர்களின் குடும்பமும் சரி சமூகமும் சரி தலைநிமிராது என்பதே உண்மை. பெண் கல்விக்கென பல்வேறு முன்னோடியான திட்டங்களை செயல்படுத்தி வரும் நமது தமிழ்நாடு அரசு, தற்போது பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்கிற முத்தான திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. இது பெண்களுக்கு பொருளாதாரரீதியில் சுதந்திரம் அளிப்பதோடு, அவர்களின் குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு செலவுகள் தொடங்கி சிறுசேமிப்பாகவும் உதவும்.
Also Read – `கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…’ வதந்தியும் உண்மையும்! #TNEmpowersWomen