கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஈஸ்வரன் சட்டப்பேரவையில் பேசிய விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன பேசினார்… ஏன் சர்ச்சையானது… பின்னணி என்ன?
தி.மு.க தலைமையில் புதிய அரசு கடந்த மே 7-ம் தேதி பதவியேற்றது. அதன்பின்னர், சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரை மீதான விவாதம் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில், கடந்த 23-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய ஈஸ்வரன் எம்.எல்.ஏ, “கடந்த முறை ஆளுநர் உரையைப் படித்துப் பார்த்தேன். அதில், நன்றி வணக்கம். ஜெய்ஹிந்த் என முடித்திருக்கிறார்கள். இந்த முறை ஜெய்ஹிந்த் வார்த்தை இடம்பெறவில்லை. அதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்’’ என்று பேசியிருந்தார். அவர் பேசி இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த வீடியோவை பா.ஜ.கவைச் சேர்ந்த அண்ணாமலை ட்விட்டரில் பதிவிடவே, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. பா.ஜ.க மட்டுமல்லாது, தி.மு.க கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் ஈஸ்வரன் எம்.எல்.ஏ பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தது.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ-வும் அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன், `சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகிகளின் தியாகத்துக்கு சட்டப்பேரவை என்ன பதில் சொல்லப்போகிறது. ஈஸ்வரன் எம்.எல்.ஏ பேசிய விதம் கண்டிக்கத்தக்கது’’ என்று கண்டனம் தெரிவித்தார். பா.ஜ.கவைச் சேர்ந்த பலரும் ஈஸ்வரனுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்தனர். அதேநேரம், தி.மு.க கூட்டணியில் இருக்கும்
காங்கிரஸும் இந்த விவகாரத்துக்குக் கண்டனம் தெரிவித்தது.
ஜெய்ஹிந்த்… #ProudToSayJaiHind’ என்ற கேப்ஷனுடன் பொதுக்கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஜெய்ஹிந்த் என முழக்கமிடும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தது.
இந்தசூழலில் சர்ச்சைக்கு கொங்கு ஈஸ்வரன் விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில், “வாழ்க பாரதம் என்று சொல்வதில் எந்த பிரச்சினையும் கிடையாது. எனது கட்சியின் பெயரிலேயே, தேசிய என்று இணைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது தேசியத்துக்கு எதிராக எப்படி நான் பேசுவேன்.தமிழகம் இருமொழிக் கொள்கையை பின்பற்றி வரும் மாநிலம். கடந்த ஆட்சி காலத்தில் ஜெய்ஹிந்த் என்ற இந்தி வார்த்தை ஆளுநர் உரையில் பயன்படுத்தப்பட்டது. இப்போது அந்த இந்தி வார்த்தை பயன்படுத்தப்படாமல் நீக்கப்பட்டுவிட்டது. இருமொழிக் கொள்கை உறுதியாகக் காப்பாற்றப்பட்டு விட்டது என்ற அர்த்தத்தில் நான் பேசி இருந்தேன்.
மொழி சம்மந்தமாக இரு அரசின் ஆளுநர் உரையைதான் ஒப்பிட்டு பேசினேன் என்பதை உரையை முழுமையாகக் கேட்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். சட்டமன்றத்திலே ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை ஓங்கி ஒலிக்கிற 17 பேர் உள்ளே இருந்தனர். பா.ஜ.க உறுப்பினர்கள் 4 பேர் உள்ளே இருந்தனர். அவர்களுக்கெல்லாம் நான் பேசியது தவறாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் முழு உரையையும் கேட்டனர். ஆனால், நான் பேசியத்தில் சில பகுதிகளை மட்டும் வெட்டி பரப்பி வருகின்றனர். நான் பேசி இரண்டு நாள்களில் இதுகுறித்து யாரும் பேசவில்லை’’ என்று தெரிவித்திருக்கிறார்.