தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் 2021 –ஆம் ஆண்டு ஒரு கலவையான ஆண்டு. ஒரு பக்கம் படு பிற்போக்கான படங்கள் பல வந்து எரிச்சலூட்டினாலும் இன்னொரு பக்கம் கொஞ்சமே வந்தாலும் நறுக்கென சில நல்ல படங்கள் வந்து சினிமா ரசிகர்களுக்கு மகிழ்வைத் தந்தது. அவ்வாறு 2021-ஆம் ஆண்டில் வந்த சிறந்த பத்து படங்களைப் பற்றி இங்கே (குறிப்பு : இது ஒரு தரவரிசைப் பட்டியல் அல்ல)
மண்டேலா
கதை என்ற ஒரு வஸ்துவிற்காக எல்லோரும் எதையோ எங்கேயோத் தேடி ஓடிக்கொண்டிருக்க, ஒரு ஊரில் நடக்கும் பஞ்சாயத்து தேர்தலையும் அதில் ஒரு ஓட்டு ஏற்படுத்தும் தாக்கத்தையும் அவ்வளவு அழகாக பதிவு செய்திருப்பார் அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின். லஞ்ச் நேரம் கடந்த ஒரு பிற்பகலில் ஒரு சின்ன மெஸ்ஸில் இளஞ்சூட்டில் கிடைக்கும் சுவையான தக்காளி சாதத்திற்கு இணையானது இந்தப் படம்.
மாநாடு
டைம் லூப் எனும் தமிழுக்கு மிக அந்நியமான கான்செப்டை தமிழ் ரசிகர்கள் ரசிக்கும் விதமாக திரைக்கதையாக்கி ஒரு விறுவிறு படமாக கொடுத்திருந்தார் இயக்குநர் வெங்கட்பிரபு. நாடு முழுக்க மத அரசியல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் இந்தப் படம் பேசியிருக்கும் அரசியல் மிக உயர்வானது.
ஜெய்பீம்
2021-ஆம் ஆண்டில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்திய படம் ‘ஜெய்பீம்’. காரணம் படம் பேசியிருக்கும் அரசியல். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரி ஆதிக்கசாதியினர் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்த சிஸ்டமும்தான் என பொட்டில் அடித்து சொல்லியிருப்பார் இயக்குநர் த.செ.ஞானவேல்.
மாஸ்டர்
விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோ, இதுபோன்ற படங்களில் மற்ற நடிகர்களுக்கும் தனக்கு சரி சமமாக நடிக்க வாய்ப்பளித்திருப்பதே நிச்சயம் பாராட்டுதலுக்குரியதுதான். குறைகள் சில இருந்தாலும் மாஸ் இமேஜ் உள்ள முன்னணி ஹீரோக்களும் மனது வைத்தால் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது இந்தப் படம்.
சார்பட்டா பரம்பரை
தான் யாரென்று பா.இரஞ்சித் மீண்டும் நிரூபித்த படம் இது. 80-களின் வட சென்னை பாக்ஸிங் கலைஞர்களின் வாழ்வியலையும் அப்போதைய அரசியல் சூழலையும் ஒரு டைம் மிசினில் ஏற்றி கூட்டிச் சென்று காட்டியிருப்பார் இயக்குநர் பா.ரஞ்சித்
டாக்டர்
டார்க் ஹியூமர் எனும் தமிழில் மிக அரிதான அல்லது அதிக தோல்விகளை சந்தித்த ஒரு ஜானரில் முன்னணியில் இருக்கும் சிவகார்த்திகேயன் எனும் ஹீரோ தன்னுடைய இயல்புகளை விட்டுக்கொடுத்து நடித்த படம் ‘டாக்டர்’. சில சில குறைகள் இருந்தாலும் இந்த மாற்றம் நிச்சயம் பாராட்டுதலுக்குரியது.
Also Read:
ரைட்டர்
ஒன்று காவல்துறையினரை புனிதர்களாகக் காட்டுவது இல்லையென்றால் அவர்களை பகடிக்குரியவர்களாக காட்டுவது என தொடர்ந்து தமிழ் சினிமா இயங்கிக்கொண்டிருக்க, காவல்துறையின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியப் படம் ‘ரைட்டர்’. அந்த துறைக்குள் இருக்கும் அதிகாரக் கரங்கள் எப்படி மேலிருந்து கீழ் வரைக்கும் பாய்கிறது என்பதை எதார்த்தமாக பதிவு செய்திருந்தார் அறிமுக இயக்குநர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப்.
கசட தபற
தமிழைப் பொறுத்தவரை ஆந்தாலஜி படம் என்றால் ஒவ்வொரு கதையையும் தனித்தனி படமாக உருவாக்கி அவை அனைத்துக்கும் ஒரு பொதுப்பெயர் சூட்டி வெளியிட்டுவருவதுதான் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால் முதல்முறையாக ஒவ்வொன்றும் தனித்தனி கதைதான் ஆனால் ஒன்றுக்கொன்று மிக ஆழமான தொடர்பு இருக்கிறது என்ற உத்தியைக் கொண்டு வித்தியாசமான அதேசமயம் கடினமான ஒரு முயற்சியைத் தந்திருப்பார் இயக்குநர் சிம்புதேவன்.
ராக்கி
ஒரு சாதாரண பழிவாங்கல் கதையையும் ஒரு இயக்குநர் தன் ஆளுமையால் அதை அடுத்தத் தளத்திற்கு நகர்த்த முடியும் என அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் நிரூபித்த படம் ‘ராக்கி’.
கூழாங்கல்
சினிமா உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான இந்தியாவின் பரிந்துரையாக போட்டியிடுகிறது ‘கூழாங்கல்’. ஏற்கெனவே பல விருதுகளை வாங்கிக்குவித்திருக்கும் இந்தப் படம் நிச்சயம் 2021-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமிதம்தான்.
இவை அல்லாமல் ‘கர்ணன்’, ‘தேன்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘வினோதய சித்தம்’, ‘வாழ்’, ‘கடைசீல பிரியாணி’, ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’, ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ போன்ற சில நல்ல முயற்சிகளும் 2021-ஆம் ஆண்டு அலங்கரித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படங்களில் உங்கள் மனம் கவர்ந்த பத்து படங்களை கமெண்ட் பாக்ஸில் பட்டியலிடுங்களேன்.
Also Read – கோலிவுட் 2021: `ஜே.டி – சாரு, கபிலன்- மாரியம்மாள்’ – 7 க்யூட் ஆன் – ஸ்கிரீன் ஜோடிகள்!