தமிழ் சினிமாவுக்கு 2021 புதிய சவால்களைக் கொடுத்த ஆண்டு என்றே சொல்லலாம். கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த சூழலில் பல படங்களில் ஓடிடி-யில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பதிவு செய்து, கோலிவுட்டுக்குப் புதிய களத்தை அமைத்துக் கொடுத்தது.
தியேட்டர்கள் கடந்து உலக அளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற புதிய படைப்புகளையும் தமிழ் சினிமா இந்த ஆண்டு கொண்டாடியது. அந்தவகையில், 2021-ல் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த 6 கேரக்டர்களைப் பார்க்கலாம்.
லிஜோமோள் ஜோஸ் (ஜெய்பீம்)
ஜெய்பீம் படத்தில் போலீஸாரின் சித்ரவதைகளுக்குச் சாட்சியாக நின்று நீதிக்காகப் போராடி மனைவி கேரக்டரில் கச்சிதமாகப் பொறுந்தியிருந்தார் லிஜோமோள் ஜோஸ். போலீஸ் வன்முறைக்கு இலக்கான கணவரைத் தேடிப் புறப்படும் கர்ப்பிணி பழங்குடியினப் பெண் செங்கேணியாகக் கவனம் ஈர்த்தார். 2019-ல் வெளியான சிவப்பு பச்சை மஞ்சள் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியிருந்தாலும், செங்கேணி கேரக்டர் மூலம் 2021-ல் முத்திரை பதித்தார் லிஜோமோள்.
ஷபீர் கல்லரைக்கல் (சார்பட்டா பரம்பரை)
பா.இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படத்தின் `டான்ஸிங்’ ரோஸ் கேரக்டர் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார் ஷபீர். இவர் ஏற்கனவே அடங்க மறு, டெடி, பேட்ட உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், சார்பட்டா பரம்பரை இவருக்குப் புதிய அடையாளத்தைக் கொடுத்தது. படத்தின் காமெடி கேரக்டராக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், பாக்ஸிங் ரிங்கில் கிளவுஸைப் போட்டுக் கொண்ட பின்னர், அந்த கேரக்டரின் அடையாளமே முற்றிலுமாக மாறிப்போகும்.
பாக்ஸிங் ரிங்கில் கபிலனும் (ஆர்யா) டான்ஸிங் ரோஸும் மோதிக்கொள்ளும் காட்சி, 2021-ன் பெஸ்ட் சீன்களில் ஒன்று மட்டுமல்ல, அந்தப் படத்தின் மாஸ் காட்சிகளுள் முக்கியமானது. 2021-ல் தமிழ் சினிமா ரசிகனின் மறக்கமுடியாத கேரக்டர்கள் வரிசையில் நிச்சயம் டான்ஸிங் ரோஸுக்கு இடமுண்டு.
ஜோர்ன் சுரா (Bjorn Surrao)
மாஸ்டர் படத்தின் ஜேடி தீம் மியூசிக்கில் `மாஸ்டர் த பிளாஸ்டர்’என்ற குரலை உங்களுக்கு நிச்சயம் பரிச்சயம் இருக்கும். அதேபோல், நெல்சனின் டார்க் காமெடியான டாக்டர் படத்தில் இடம்பெற்றிருந்த ஃபேமஸான, “He’s asking for some aambala… where will I go for aambala…” டயாலாக்கைப் பேசி நடித்ததும் மாஸ்டரின் தீமில் வாய்ஸாக ஒலித்ததும் ஒரே ஆள்தான். சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மியூஸிக் பேண்ட் மெம்பரான ஜோர்ன் சுரா, டாக்டர் படத்தில் ஐந்து நிமிடமே வந்திருந்தாலும், அவரின் இந்த டயலாக் தெறி ஹிட்டடித்தது. நெல்சன் விஜய்யுடன் கைகோர்க்கும் பீஸ்ட் படத்திலும் இவர் இடம்பெற்றிருக்கிறார்.
Also Read:
துஷாரா விஜயன் (சார்பட்டா பரம்பரை)
பா.இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரையில் கபிலனின் மனைவி மாரியம்மாளாக நடித்திருந்த அறிமுக நடிகை துஷாரா விஜயன், 2021-ல் கவனம் ஈர்த்த நடிகர்களில் முக்கியமான இடத்தைப் பெறுவார். அடாவடி செய்யும் கணவனை மிரட்டுவதாகட்டும், வேதனையில் துடிப்பதாகட்டும், அன்பைப் பொழிவதாகட்டும் கண்களில் கவிதை பேசியிருந்தார் துஷாரா. அடுத்ததாக, பா.இரஞ்சித்துடன் நட்சத்திரம் நகர்கிறது படத்துக்காக இவர் மீண்டும் இணைந்திருக்கிறார்.
லட்சுமிபிரியா (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், கர்ணன்)
லட்சுமி குறும்படம் மூலம் கவனம் பெற்றிருந்த லட்சுமிபிரியா சந்திரமௌலி 2021-ல் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், கர்ணன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தார். கர்ணனில் தனுஷின் சகோதரியாக அவருக்கு டஃப் கொடுத்து நடித்திருந்த லட்சுமிபிரியா, சர்வைவர் ரியாலிட்டி ஷோ மூலமும் இந்த ஆண்டு பேமஸானார்.
அனகா (டிக்கிலோனா)
சந்தானத்துடன் அனகா நடித்த டிக்கிலோனா படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்யவில்லை என்றாலும், அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு பாடல் வைரல் ஹிட். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்றிருந்த `பேர் வைச்சாலும்..’ பாடலை இந்தப் படத்தின் ரீ-மாஸ்டர் செய்து யுவன் பயன்படுத்தியிருப்பார். அந்தப் பாடலில் அனகாவின் டான்ஸ் ஸ்டெப் இன்ஸ்டா தொடங்கி வாட்ஸ்அப் வரையில் வைரலானது.
Also Read – `லோக்கல் சேனல் காம்பியரிங் டூ சவுத் இந்தியன் ஸ்டார்..’ – ஐஸ்வர்யா ராஜேஷின் பயணம்!