கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் தங்களது பங்களிப்பினை சிறப்பாக வழங்கியிருந்தார்கள். அவர்களில் சிறந்த பத்து ஹீரோயின்களைப் பற்றி இதோ.
ரெஜினா கேஸண்ட்ரா
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் தியாகம், ‘சக்ரா’ படத்தில் வில்லத்தனம், ‘கசட தபற’ படத்தில் காதல், ‘முகிழ்’ படத்தில் தாய்மை என கடந்த ஆண்டில் ரெஜினா அளவுக்கு வெரைட்டி காட்டிய நடிகை யாரும் இல்லை. போதாக்குறைக்கு ‘தலைவி’ படத்தில் சரோஜா தேவியாக கேமியோ ரோலிலும் அசத்தியிருப்பார் ரெஜினா.
லிஜிமோல் ஜோஸ்
‘செங்கேணி’ இந்த ஒரு சொல் போதும். ‘ஜெய்பீம்’ படத்தில் லிஜிமோல் ஜோஸின் அர்ப்பணிப்பு எவ்வளவு உயரியது என சொல்வதற்கு. அந்தக் கதாப்பாத்திரத்திற்காக தன்னுடைய தோற்றத்தை மாற்றிக்கொண்டது தொடங்கி, அந்த பாத்திரம் வெளிப்படுத்த வேண்டிய பல நுணுக்கமான உணர்வுகளை சிந்தாமல் வெளிப்படுத்தியதுவரை என செங்கேணியாகவே உருமாறிப்போயிருந்தார் லிஜிமோல் ஜோஸ்.
துஷாரா விஜயன்
‘சார்பட்டா’ எனும் ஒரு மிகப்பெரிய அரசியல் படத்தில் அழகான ஒரு ஹைக்கூவாக இடம்பெற்றிருந்தது கபிலன் – மாரியம்மாள் காதல் காட்சிகள். அந்தக் காதல் காட்சிகளுக்கு தன்னுடைய பொருத்தமான நடிப்பால் உயிரூட்டியிருப்பார் துஷாரா.
கங்கனா ரனாவத்
ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க உருவத்தில் எப்படியோ தன்னுடைய அதிரடியான செயல்பாடுகளில் ஒற்றுமையுள்ள கங்கனா ரனாவத்தைவிட பொருத்தமானவர் வேறொருவர் இருக்கமுடியாது. ‘தலைவி’ படத்தில் வரும் பல அதிரடியான காட்சிகளுக்கு தனது அசால்டான நடிப்பால் மெருகேற்றியிருந்தார் கங்கனா.
ராஷ்மிகா மந்தனா
இந்த லிஸ்டின் ‘குரூப்ல டூப்பு’ என்றால் இவர்தான். மற்ற ஹீரோயின்கள் எல்லாம் மெனக்கெட்டு, மேக்கப் பல போட்டு பேர் வாங்கிக்கொண்டிருக்க, சிம்பிளாக.. சின்ன சின்ன எக்ஸ்பிரசன்களாலேயே பல இளைஞர்களின் கிரஷ்ஷாக மாறிப்போனார் ராஷ்மிகா. ‘புஷ்பா’ படத்தில் அவர் போட்ட அந்த ஸ்பெஷல் ஸ்டெப்க்கு தமிழ்நாடே கிறங்கித்தான் போனது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
தொடர்ந்து தனது பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கடந்த ஆண்டு ‘திட்டம் இரண்டு’, ‘பூமிகா’ என இரண்டு ஹீரோயின் ஓரியண்டட் படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லையென்றாலும் ஒரு முழுப் படத்தையும் தன்னுடைய தோளில் சுமக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் திரை ஆளுமை பாராட்டுதலுக்குரியது.
பிரியங்கா மோகன்
வெகு காலம் கழித்து தமிழ் சினிமாவில் பக்கத்து வீட்டு பெண் சாயலும் ட்ரீம் கேர்ள் சாயலும் ஒருங்கே கொண்ட ஒரு கியூட் ஹீரோயின் பிரியங்கா மோகன். சின்ன சின்ன கியூட் எக்ஸ்பிரஷன்கள் தொடங்கி.. ‘செல்லமா’வாக மாஸ் டான்ஸ் ஆடுவதுவரை தமிழ் சினிமாவுக்கேற்ற பக்கா ஹீரோயின் மெட்டீரியல் இவர்.
செம்மலர் அன்னம்
ஆர்ட் பிலிம் உலகின் ஸ்பெஷல் என இவரை சொல்லலாம். ‘செந்நாய்’, ‘மாடத்தி’ என இவர் நடித்த படங்களில் ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு தனது அச்சு அசல் நடிப்பின் மூலம் உயிரூட்டியிருப்பார் செம்மலர் அன்னம். இதில் ‘செந்நாய்’ படத்திற்காக ஏகப்பட்ட விருதுகள் இவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திவ்ய பாரதி
‘பேச்சுலர்’ போன்ற ஒரு முற்போக்கு களம் கொண்ட படத்தில் நடிப்பதற்கே ஒரு தில் வேண்டும். திவ்யபாரதி அதில் நடித்ததுடன் மட்டும் இல்லாமல் அந்தப் பாத்திரத்திற்குத் தேவையான நியாயங்களையும் செய்திருப்பார். இளைஞர்கள் பலரின் தற்போதைய சீக்ரெட் கிரஷ்ஷாக மாறியிருக்கும் இவர் விரைவில் ஓப்பன் கிரஷ்ஷாக மாறுவார் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனந்தி
ஹீரோயின் ஒரியண்டட் படங்கள் என்றாலே ஒன்று ஹாரர் அல்லது திரில்லர் என்று தமிழ் சினிமா போய்க்கொண்டிருக்க. ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ போன்ற ஹீரோயின் ஓரியண்டட் படங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கலாம் என உதாரணமாகியிருக்கிறார் ஆனந்தி. படிப்பா, காதலா என குழம்பும் ‘கமலி’ பாத்திரத்தில் மிக நுட்பமான நடிப்பை வழங்கி அசத்தவும் செய்திருந்தார் ஆனந்தி.