LIC IPO விஷயத்தில் பாலிசிதாரர்கள் நோட் பண்ண வேண்டிய விஷயங்கள் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம பார்க்கப் போறோம்.
LIC IPO
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான LIC-யின் பங்குகள் முதல்முறையாக வெளியிடப்படுகின்றன. இதில், முதல்முறையாக பாலிசிதாரர்களுக்கென ஒதுக்கீடும் செய்யப்பட்டிருக்கிறது. எல்.ஐ.சி பாலிசி வைத்திருப்பவர்கள், மற்றவர்களை விட சலுகையுடன் அதன் பங்குகளை வாங்க முடியும். பங்குகளை வெளியிடுவதன் மூலம் ரூ.21,000 கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன்மூலம், இந்தியாவின் மிகப்பெரிய ஐ.பி.ஓ என்கிற பெருமையை LIC IPO பெறும்.
பாலிசிதாரர்களுக்கான சலுகைகள்
LIC IPO-வில் ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில், பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.60 வரையில் சலுகை கிடைக்கும் என்கிறார்கள். இதனால், அவர்கள் அதிகபட்சமாக ரூ.889 கொடுத்து முதலீடு செய்ய முடியும். இவர்களுக்கு அதிகபட்ச தொகையாக ரூ.2 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?
பிப்ரவரி 28, 2022 நிலவரப்படி தங்களது காப்பீட்டுடன் பான் எண்ணை இணைத்திருக்கும் அனைத்து பாலிசிதாரர்களும் இதில் முதலீடு செய்ய முடியும். இதனால், தங்கள் பாலிசியோடு பான் கார்டை இணைக்காதவர்கள், ரூ.60 சலுகை பெறத் தகுதி பெற மாட்டார்கள்.
Lapsed Policies
maturity, surrender அல்லது பாலிசிதாரர்கள் உயிரிழப்பு போன்ற சூழ்நிலைகளில் உங்கள் பாலிசி இருந்தாலும், அவர்களது தகவல்கள் எல்.ஐ.சியிடம் இருக்கும். எனவே, இவர்களும் பாலிசிதாரர்கள் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து சலுகை விலையில் பங்குகளை வாங்க முடியும்.
யாரெல்லாம் சலுகை பெற முடியாது?
வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்த சலுகையைப் பெற முடியாது என எல்.ஐ.சி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்திய குடிமகன்கள் மட்டுமே இதன்கீழ் சலுகையைப் பெற முடியும். இதுதவிர, குரூப் பாலிசிதாரர்களைத் தவிர மற்ற அனைவரும் இந்த சலுகையைப் பெறத் தகுதியானவர்கள்.
பாலிசிதாரர்கள் ரூ.2 லட்சத்துக்கு மேல் பங்குகளை வாங்க முடியுமா?
பாலிசிதாரர்கள் முதலீடு செய்யும் அதிகபட்ச தொகையாக ரூ.2 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது, ஒவ்வொரு பிரிவுக்குமான அதிகபட்ச தொகைதான். ஒருவேளை பாலிசிதாரர்கள் இதற்கு அதிகமான தொகையை முதலீடு செய்ய விரும்பினால், Retail பிரிவின் கீழ் ரூ.45 என்கிற சலுகையுடன் கூடுதலாக ரு.2 லட்சம் முதலீடு செய்யலாம். இதன்மூலம், ரூ.4 லட்சம் வரையில் முதலீடு செய்ய முடியும்.