ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம் பகுதியில் ஜூலை மாதம் 2-ம் தேதி 1965-ல் பிறந்தவர் நடிகை கௌதமி. தன்னுடைய முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர். இதைத் தொடர்ந்து கமல், சத்யராஜ் மற்றும் ராமராஜன் என தமிழின் முன்னணி கதநாயகர்களாக இருந்த பலருடனும் நடித்துள்ளார். நடிப்பில் மட்டுமல்லாது, ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், ரியாலிட்டி ஷோவின் ஜட்ஜ் என பல துறைகளிலும் தனது முத்திரையை பதித்தவர். மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். குறிப்பாக 1987 முதல் 1998 வரை முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தமிழில் குரு சிஷ்யன், ரிக்ஷா மாமா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் வெளியான மறக்க முடியாத சில காட்சிகளைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப்போகிறோம்!
குரு சிஷ்யன்
ரஜினிகாந்த், பிரபு மற்றும் கௌதமி நடிப்பில் 1988-ம் ஆண்டு வெளியான திரைப்படம் குரு சிஷ்யன். தமிழில் இந்த திரைப்படத்தின் மூலம்தான் கௌதமி அறிமுகமானார். இந்தப் படத்தில் கௌதமி காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். பிரச்னைகளின்போது துடிப்பான இன்ஸ்பெக்டராக அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் இவர் காவல்துறை அதிகாரியாக இருந்து ரஜினியிடம் வெட்கப்படும் சீன்கள் எல்லாம் வேற லெவல் லவ் சீன்கள். குறிப்பாக தவறாக ரஜினியை கைது செய்துவிட்டோம் என்று வெட்கத்துடன் ரஜினியிடம் பேசும் சீன் எப்போதும் அவரது ரசிகர்களின் ஃபேவரைட்தான்.
எங்க ஊரு காவல்காரன்
ராமராஜன், நம்பியார், செந்தாமரை, கோவை சரளா மற்றும் கௌதமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் 1988-ம் ஆண்டு வெளியான திரைப்படம் எங்க ஊரு காவல்காரன். குரு சிஷ்யன் படத்தின் காவல்துறைப் பெண்ணாக அதிரடி காட்டிய கௌதமி கிராமத்துப் பெண்ணாக எங்க ஊரு காவல்காரன் படத்தில் கலக்கியிருப்பார். கால்ல கண்ணாடி சில்லு குத்தினதுக்கு கட்டுப்போடுற காட்சில, `பூவாயி, உன் கை பூ போல இருக்குறதுனாலதான் ஊர்ல எல்லாரும் உன்ன பூவு பூவுனு கூப்பிடுறாங்களா..ஆமா நீ என்ன பூவு?’ அப்டினு ராமராஜன் கேட்கும்போது `ம்ம்.. காலைல கனகாம்பரம், மத்தியானம் மரிக்கொழுந்து, சாயந்தரம் ஜாதிமல்லி, ராத்திரில அரளிப்பூ’ அப்டினு வசனம் பேசுற காட்சியில் ரொம்ப அழகா பேசி கிராமத்துப் பொண்ணா அசத்தியிருப்பாங்க!
தேவர்மகன்
சிவாஜி, கமல்ஹாசன், ரேவதி மற்றும் கௌதமி நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தேவர்மகன். இந்தப்படம் இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் சிறந்த நடிகர்கள் என்ற பெயரை மக்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் வாங்கிக் கொடுத்தது. கமல் மற்றும் ரேவதிக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை அறிந்தபின் கௌதமி நடிக்கும் காட்சியை அவ்வளவு சீக்கிரம் ரசிகர்களால் மறக்க முடியாது. அவ்வளவு எமோஷனலாக கமல் மீது இருக்கும் காதலை கோபத்துடன் அந்தக் காட்சியில் வெளிப்படுத்தியிடுப்பார். இதைத் தொடர்ந்து ட்ரெயினில் கமல்ஹாசனுடன் கௌதமி பேசும் காட்சிகளிலும் காதல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.
நம்மவர்
கமல்ஹாசன், நாகேஷ், கரண் மற்றும் கௌதமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் நம்மவர். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் மூக்கில் இருந்து ரத்தம் வரும் காட்சி, ட்ரீட்மெண்டுக்கு போவதற்கு முன்னால் வரும் காட்சி போன்றவற்றில் கவுதமி வேற லெவலில் நடித்திருப்பார். கமல்ஹாசன் மற்றும் கவுதமி காம்போவைப் பிடிக்கும் ஃபேன்ஸ்க்கு நம்மவர் படம் மறக்க முடியாத ஒரு படமாக இருக்கும். `எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்கீங்கள்ல நீங்க?’ அப்டினு கௌதமி கேக்குற சீன்லலாம் செமயா நடிச்சிருப்பாங்க. இந்தப் படத்தில் வரும் பாடல்களில்கூட கௌதமியின் பெர்ஃபாமன்ஸ் ரொம்ப நல்லா இருக்கும்.
பாபநாசம்
கமல்ஹாசன், ஆஷா சரத், நிவேதா தாமஸ் மற்றும் கௌதமி நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபநாசம். கமல்ஹாசனுக்கு ஜோடியாக குடும்ப தலைவி கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார், கௌதமி. கஞ்சத்தனமாக இருக்குற கமல்ஹாசனை கியூட்டா மிரட்டுற சீன், கொலை பண்ற சீன், போலீஸ் காரங்களை பார்த்து பயப்படுற சீன், கொலை செஞ்சதுக்கு அப்புறமா பதட்டப்படுற சீன் என எல்லாவிதமான சீன்லையும் வெரைட்டியான நடிப்பை கௌதமி வெளிப்படுத்தியிருப்பாங்க. குறிப்பிட்டு இந்தப் படத்தில் சொல்ல வேண்டிய சீன் என்றால், அது கொலை செய்யும் சீன்தான். தன்னுடைய மகளை காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தோடு ரோஷனிடம் கெஞ்சும் காட்சிகள் எல்லாம் நம்மையே உருகவைக்கும் விதமாகவும் இவரின் நடிப்பால் ரோஷன் மீது நமக்கே கோபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும்.
கௌதமி நடிப்பில் வெளியான படங்களில் எப்போதும் உங்களோட ஃபேவரைட் சீன் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க மக்களே!
Also Read : 2 விநாடிக்கு ஒரு வாகனம்; 10,000 வேலைவாய்ப்பு – ஓலாவின் கிருஷ்ணகிரி ஃபேக்டரியில் என்ன ஸ்பெஷல்?