`ஷங்கர், விஜய், மிஷ்கின், பா.இரஞ்சித்’ – இது கபிலனின் சக்ஸஸ் காம்போ!

இயக்குநர் தரணி இயக்கிய தில் படத்தில் உன் சமையல் அறையில் பாடலை எழுதிதான் கபிலன் தமிழ் சினிமாவுக்கு பாடலாசிரியர் ஆனார். முதல் பாடலிலேயே அந்தப் பாட்டுக்கென ஒரு பேட்டன் செட் பண்ணி அதை சுவாரஸ்யமாக்கி இருப்பார். இந்தப் பாடலில் வரிகள் அனைத்தும் ‘நான் இதுவா நீ அதுவா இல்ல அதுவா’ங்கிற டோன்ல இருக்கும். உதாரணத்திற்கு வரிகள் சொன்னால்தான் புரியும்னு நினைக்கிறேன். ‘நீ குழந்தை என்றால், நான் தொட்டிலா தாலாட்டா?; நீ தூக்கம் என்றால், நான் மடியா தலையணையா?’னு இப்படி பாட முழுக்கவே ஒரே பேட்டன்ல இருக்கும். இதுக்காக கபிலன் தொடர்புபடுத்தி இருந்த கைதி – சிறை – தண்டனை; புதுமை – பாரதி – பாரதிதாசன் போன்ற விஷயங்கள் எல்லாமே சிறப்பா இருக்கும். 

Kabilan
Kabilan

அடுத்து பிரபுதேவா நடித்த அள்ளித் தந்த வானம் படத்தில் சென்னை பட்டணம்; எல்லாம் கட்டணம் பாடலில் வந்த எல்லா விஷயங்களும் இப்போ வரைக்கும் அது நடைமுறையில்தான் இருக்கு. அதுதான் இந்தப் பாடலோட வெற்றினு சொல்லலாம். அந்தளவுக்கு நிறைய விஷயங்களை பிக் பண்ணி எழுதியிருப்பார். காந்தி ஜெயந்தி மதுக்கடை திறந்து மறைவா வித்தா காசு; எல்கேஜி-யும் காசு எம்.பி.பி.எஸ். காசு இட்லிய வித்தாலும் காசு உன் கிட்னிய வித்தாலும் காசு போன்ற வரிகளை உதாரணமா சொல்லலாம்.தில் படத்திற்குப் பிறகு தரணி இயக்கிய தூள் படத்திலும் ஆசை ஆசை என்கிற மெலடி பாடலை எழுதிய கபிலன், இதிலும் ஒரு பேட்டனை கையாண்டிருப்பார். இதில் இப்பொழுது; எப்பொழுது என வருவதைப் போலவே பாடல் முழுக்க எழுதி இருப்பார். அதிலும் குறிப்பாக, ‘புல்வெளி ஆகிறேன் இப்பொழுதுநீ பனித்துளி ஆவது எப்பொழுது?; கொட்டும் மழை நான் இப்பொழுது உன் குடிநீராவது எப்பொழுது?’ என்கிற வரிகளெல்லாம் சிறப்பாக இருக்கும். 

சரத்குமார் நடித்த அரசு படத்தில் சிம்ரன் பிராமின் வீட்டு பெண்ணாக நடித்திருப்பார். அதை மல்லிகை மல்லிகை பந்தலே பாடலில், ‘தயிர் சாதமாய் உன்னை அள்ளி திண்பேனே; உன்னை துளசி செடியாய் சுற்றி வந்தேனே’ என அழகாக குறிப்பிட்டிருப்பார். கரு.பழனியப்பன் இயக்கிய பார்த்திபன் கனவு படத்தில் ஆலங்குயில் கூவும் ரயில் பாடலில் ஸ்ரீகாந்த் ஒவ்வொரு விஷயமாக கேட்க அதற்கு பதிலாக சினேகா பாடுவார். செல் போன், சிகரெட், வெட்கம், மீசை, திருக்குறள், நிலா, கண்ணாடி என இதற்கெல்லாம் இரண்டு இரண்டு வரிகளில் கவித்துவமாக விளக்கம் கொடுத்த கபிலன், காதலுக்கு, ‘நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றை கனவு தான்’ என அழகாக சொல்லியிருப்பார். ஜித்தன் படத்தில் காதலியே காதலியே என்கிற பாடலில் பட்டாம்பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமோ; தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்; சுதந்திர கிளியாய் பறந்தேன், என்னை ஜோசிய கிளியாய் சிறை எடுத்தார்’ போன்ற வரிகளில் ஓர் ஒரு தலை காதலரின் வலிகளை வரிகளாய் எழுதியிருப்பார். இப்படி ஒரு சோகப்பாடல் எழுதிய அதே படத்தில்தான், ‘எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்’னு ஒரு குத்துப்பாடலும் எழுதியிருப்பார். பரத் நடித்த எம் மகன் படத்தில் ‘வராரு வராரு யாரு வராரு’னு ஒரு வித்தியாசமான பாடலை எழுதியிருப்பார் கபிலன். இறந்து போன தாத்தாவை அடக்கம் பண்றதுக்கு தூக்கிட்டு போகும் போது வரப்பாடல். இவ்வளவு எமோஷனலான காட்சியை படத்தில் கொண்டாடமான சூழலாக மாற்றியிருப்பார். அதற்கேற்றார் போலவே கபிலனின் வரிகளும் இருக்கும். ‘அன்னாளும் பொய் சொன்ன அரிசன்றன் வராரு; செல்வங்கல சேத்தவரு செல்லாக் காசா வராரு’னு கலாய்ப்பும் பாராட்டும் கலந்து இருக்கும். மரியான் படத்தில் தனுஷ் மீனவர் என்பதால் அதில் வரும் இன்னும் கொஞ்சம் நேரம் பாடலில் வரிகளில் கடலும் கடல் சார்ந்த விஷயங்களாகவே சேர்ந்திருப்பார். ‘இப்போ மழை போல நீ வந்த கடல் போல நான் நிறைவேன்; எதிர்பாரா நேரத்துல இதயத்துல வளைய விட்டு வளைய விட்டு வளையவிட்டாயா; நீ வந்து வந்து போயேன் அந்த அலைகள போல; இந்த உப்பு காத்து இனிக்குது உன்னையும் என்னையும் இழுக்குது; இந்த மீன் உடம்பு வாசனை என்ன நீ தொட்டதும் மணக்குதே’ என பல வரிகளில் இப்படி கடலை கனெக்ட் செய்திருப்பார்.

இந்தப் பாடல்கள் தவிர கபிலன் எழுதிய சில பாடல்களில் இருக்கும் சிறப்பான வரிகள் என்னென்னனு பார்க்கலாம். பீட்சா படத்தில் மோகத்திரை பாடலில், ‘தீண்டும் தினம் தென்றல் மணம் கூந்தல் இழை வெந்நீர் மழை உன் காதலால் என்னுள் நூறு கனா’ வரிகளும்; தெகிடி படத்தில் விண்மீன் விதையில் பாடலில், ‘இனி நீயும் நானும்… ஒன்றாய்ச் சேர்ந்தால்… காதல் இரண்டு எழுத்து… – மணல் மீதுத் தூறும் மழைப் போலவே… மனதோடு நீதான் நுழைந்தாயடி…’ வரிகளும்; அஞ்சான் படத்தில் காதல் ஆசை பாடலில், ‘விழிகளிலே உன் தேடல் செவிகளிலே உன் பாடல் இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்’ வரிகளும்; யான் படத்தில் ஆத்தங்கரை ஓரத்தில் பாடலில், ‘வாய் பேசும் வாசனை கிளியே ஊா் பேசும் ஓவிய சிலையோ அந்த வெண்ணிலாக்குள்ள ஆயா சுட்ட வடகறி நீதானே’ வரிகளும்; ஜெயில் படத்தில் காத்தோடு காத்தானேன் பாடலில், ‘இலையில் மலரின் கைரேகை இமைகள் யாவும் மயில் தோகை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஆனந்த வன்மம் மறவேனே’ வரிகளும் சிறப்பாக இருக்கும்.

கபிலன் காம்போ

கபிலனின் கரியரில் விஜய்க்குத்தான் அதிக பாடலை எழுதியிருக்கிறார். அதில் பலவும் விஜய்யின் கரியரில் மிக முக்கியமான பாடல்களாகவே அமைந்திருக்கிறது. இந்த காம்போவின் முதல் பாடலான ஆள்தோட்ட பூபதியே எவர்க்ரீன் ஹிட் என்று சொல்லலாம். இப்போதுக்கூட இந்தப் பாடலை வாரிசு படத்தில் ரீமிக்ஸ் செய்திருக்கிறார் என்கிற தகவலும் வருகிறது. அந்தளவுக்கு விஜய்யின் கரியரின் மிக முக்கியமான பாடலாக இது அமைந்தது. இதன் பிறகு தொடர்ச்சியாக திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா; கில்லி படத்தில் அர்ஜூனரு வில்லு; மதுர படத்தில் மச்சான் பேரு மதுர; சச்சின் படத்தில் குண்டு மாங்கா தோப்புக்குள்ள; போக்கிரி படத்தில் ஆடுங்கடா என்ன சுத்தி; குருவி படத்தில் டண்ணான டர்னா; வில்லு படத்தில் ஹே ராமா ராமா, வாடா மாப்ள; வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்சா, கரிகாலன், புலி உரும்புது; சுறா படத்தில் நான் நடந்தால் அதிரடி, வங்க கடல் எல்லை, தமிழன் வீர தமிழன்; காவலன் படத்தில் பட்டாம்பூச்சி; தெறி படத்தில் செல்லக்குட்டி, ராங்கு என பல ஹிட் பாடலை எழுதியவர், தெறி படத்திற்குப் பிறகு இந்த கூட்டணியில் எந்தப் பாடலும் உருவாகவில்லை. 

கபிலனின் அடுத்த சக்ஸஸ் காம்போனா அது இயக்குநர் பா.இரஞ்சித்துடன்தான். இரஞ்சித்தின் முதல் படமான அட்டக்கத்தியில் இருந்தே இந்த கூட்டணி பயணிக்க ஆரம்பித்துவிட்டது. அட்டக்கத்தி படத்தில் ஆசை ஓர் புல்வெளி, ஆடைப்போனா ஆவணி; மெட்ராஸ் படத்தில் ஆகாயம் தீ பிடிச்சா, சென்னை வட சென்னை; கபாலி படத்தில் உலகம் ஒருவனுக்கா, வானம் பார்த்தேன்; காலா படத்தில் கற்றவை பற்றவை; சார்பட்டா படத்தில் வம்புல தும்புல என தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் இந்த காம்போவில் இருந்து நிறைய நல்லப் பாடல்கள் வந்திருக்கின்றன. 

Also Read: இந்தப் பாட்டுலாம் இவங்க பாடுனதா… ரஞ்சிதமே ‘மானசி’யின் இன்ட்ரஸ்டிங் ஜர்னி!

அடுத்து மிஷ்கின் – கபிலன் காம்போவும் மிக முக்கியமான காம்போதான். கபிலனுக்கு ஆள்தோட்ட பூபதி பாடல் கிடைப்பதற்காக வாய்ப்பையே மிஷ்கின் ஏற்படுத்திக்கொடுத்தார் என்பதை ஒரு பேட்டியில் அவரே சொல்லியிருப்பார். அப்படி மிஷ்கின் உதவி இயக்குநராக இருந்த சமயத்தில் இருந்தே இருவரும் நண்பர்கள் என்பதால், மிஷ்கின் இயக்கிய படங்களில் பல நல்ல பாடல்களை எழுதியிருக்கிறார். அஞ்சாதே படத்தில் கண்ணதாசன் காரைக்குடி, கத்தால கண்ணால; நந்தலாலா படத்தில் ஒரு வாண்டு கூட்டமே; யுத்தம் செய் படத்தில் ஆராரோ ஆரிராரோ, கன்னித்தீவு பொண்ணா; சைக்கோ படத்தில் உன்ன நினைச்சு, நீங்க முடியுமா; பிசாசு 2 படத்தில் உச்சந்தல ரேகையில, நெஞ்சை கேளு என இந்தக் காம்போ இப்போது வரைக்கும் ஆக்டிவ். கபிலன் – இரஞ்சித்; கபிலன் – மிஷ்கின் காம்போவைவிட சர்ப்ரைஸான காம்போவாக இருக்கிறது. ஷங்கர் – கபிலன் காம்போ. ஷங்கரின் பாய்ஸ் படத்தில் அலே அலே, பூம் பூம் என இரண்டு பாடல்கள் எழுதிய கபிலன், அலே அலே பாடலில் தனது கற்பனையின் உச்சத்தைக் காட்டியிருப்பார். குறிப்பாக, ‘எகிறி குதித்தேன் வானம் இடித்தது’ என ஆரம்பித்து ‘புருவங்கள் இறங்கி மீசையானது; நரம்புகளில் மின்னல் நுழைகிறதே உடல்முழுதும் நிலா உதிக்கிறதே; வானவில் உரசியே பறந்ததும் இந்த காக்கையும் மயில் என மாறியதே’ என இவரது கற்பனை இந்தப் பாடலில் நீண்டுக்கொண்டே போகும். அடுத்து அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலில், ‘ தெர்மாகோல் சிற்பம் நீ உன்னில் ஒட்டி கொண்டுள்ள சின்ன வெள்ளை பந்தெல்லாம் நானடி’ – ‘ஆப்பிள் லாப்டாப் பெண்ணே மடியில் வைத்து உன்னை விரல்கள் தேயக் கொஞ்சி நான் ரசிப்பேனே’ என காதலுடன் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜியைச் சேர்த்திருப்பார். ஐ படத்தில் மெர்சலாகிட்டேன், என்னோடு நீ இருந்தால் என இந்த காம்போவும் ஹிட்.

இந்தப் பாடல்கள் இல்லாமல் நரசிம்மா படத்தில் லாலா நந்தலாலா, பம்மல் கே சம்பந்தம் படத்தில் சகலகலா வல்லவனே, தம் படத்தில் கண்ணம்மா கண்ணம்மா, விசில் படத்தில் காதல் கிறுக்கா, சுள்ளான் படத்தில் யாரோ நீ, எம்.குமரன் படத்தில் யாரு யாரு இவனோ, கஜினி படத்தில் ரங்கோலா, பம்பரக் கண்ணாலே படத்தில் பம்பரக் கண்ணாலே, சரவணா படத்தில் காதல் சுத்துதே, பொல்லாதவன் படத்தில் படிச்சுப்பார்த்தேன், ராமன் தேடிய சீதை படத்தில் மழை நின்ற பின்பும், ஆதவன் படத்தில் வாராரோ, 7ஆம் அறிவு படத்தில் யம்மா யம்மா, பேரழகன் படத்தில் காதலுக்கு பள்ளிக்கூடம், சந்திரமுகி படத்தில் அண்ணனோட பாட்டு, சம்திங் சம்திங் படத்தில் உன் பார்வையில் என கபிலனின் ஹிட் லிஸ்ட் பெருசு பாஸு. 

கபிலனின் தூரிகை

Kabilan
Kabilan

கபிலன் இப்போது மீளமுடியாத துயரத்தில் இருக்கிறார் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். அவரது மகள் தூரிகையின் தற்கொலையால் மனதளவில் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறார் கபிலன். பொதுவாகவே கவிஞர்கள் தங்களது மகிழ்ச்சியையும் சரி துக்கத்தையும் சரி கவிதைகளாய்தான் வெளிப்படுத்துவார்கள். அப்படி கபிலன் அவரது துக்கத்தை கவிதைகளாக ட்விட்டரில் வெளிப்படுத்துகிறார். அதில் படித்ததில் பாதித்த கவிதையை சொல்லணும்னு நினைக்கிறேன். 

‘கொரியர் இளைஞனிடம் உனக்காக கையொப்பமிட்டிருக்கிறேன்; கடைசியில், உன்னையே கையொப்பமிட்டுதான் வாங்கினேன்’ என தனது வலிகளை வரிகளாக்கிக் கொண்டிருக்கும் கபிலன், சீக்கிரம் தேறி வர வேண்டும் என்பதே அவரின் வரிகளை ரசிக்கும் நம்மைப் போன்றவர்களில் ஆசை. இதேப் போல் கபிலனின் எந்த வரி உங்களை ரொம்ப பாதித்தது என்பதை கமெண்ட் பண்ணுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top