தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொல்லித்தான் கே.டி.ராகவன் விவகாரத்தில் வீடியோ வெளியிட்டேன் என்று அக்கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மதன் ரவிச்சந்திரன் தெரிவித்து ஆடியோ வெளியிட்டிருக்கிறார். என்ன நடந்தது?
கே.டி.ராகவன்
ஓராண்டுக்கு முன்னர் பா.ஜ.க-வில் இணைந்த மதன் ரவிச்சந்திரன், தமிழக பா.ஜ.க தலைவர்கள் மகளிரணி நிர்வாகிகளிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். தன்னிடம் அதுபற்றிய ஆதாரங்கள் இருப்பதாகச் சொன்ன அவர், தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், வீடியோ காலில் மகளிரணி நிர்வாகி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. வீடியோ தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடே வெளியிடப்படுகிறது என்றும் மதன் சொல்லியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அண்ணாமலை, இந்த விவகாரத்தில் மதன் பலமுறை கேட்டும் வீடியோ குறித்த தகவல்களைத் தன்னிடம் தர மறுத்துவிட்டதாகவும், அதன்பின்னர் அவரே வெளியிட்டு விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது செயல்கள் அனைத்துக்கும் மதனே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அண்ணாமலை அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பின்னர், அக்கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் பெயரில் வெளியான மற்றொரு அறிவிப்பில், கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகக் கூறி மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மதன் வெளியிட்ட ஆடியோ!
இந்தநிலையில், அண்ணாமலை சொல்லித்தான் அந்த வீடியோவை வெளியிட்டதாகக் கூறி அவருடன் பேசிய ஆடியோ ஆதாரங்களை மதன் தற்போது வெளியிட்டிருக்கிறார். அதில், கே.டி.ராகவன் குறித்த வீடியோவை வெளியிடும் முன்னரே, அண்ணாமலையிடம் காட்டியதாகவும் அதுகுறித்து அவர் பேசியதாகவும் ஆடியோவில் இடம்பெற்றிருக்கிறது. அதேபோல், அண்ணாமலை பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாகவும் அந்த பதிவில் மதன் குறிப்பிட்டிருக்கிறார்.
ராகவன் வீடியோவை அண்ணாமலையிடம் காட்டியபோது, அந்தப் பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் சொன்னதாகவும், அதையடுத்தே வீடியோவைத் தான் வெளியிட்டதாகவும் கூறியிருக்கிறார். பா.ஜ.க-வில் பெண்களிடம் அத்துமீறும் செயல் நடைபெறுவது தன்னைவிட அண்ணாமலைக்கு நன்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். தன்னையும் வெண்பாவையும் பற்றி அவதூறு கிளப்பியதால், இரண்டு குடும்பத்தினரும் மன உளைச்சலில் இருப்பதாகவும் மதன் குறிப்பிடுகிறார்.
கட்சியை விட்டு நீக்கியதாக அறிக்கை விட்ட பின்னர் அண்ணாமலையை அவர் வீட்டில் சந்தித்துப் பேசியதாகவும் அப்போது அண்ணாமலை பேசியதாக ஒரு ஆடியோவையும் மதன் வெளியிட்டிருக்கிறார். அறிக்கை பற்றி கேட்டதற்கு அண்ணாமலை, “ஆபிஸ்ல தயார் பண்ண அறிக்கை. ஆங்கிலத்தில்தான் நான் அறிக்கை தயார் செய்தேன். இதுக்கு அப்புறம் இன்னொரு அறிக்கை விடப்போறோம். மதன், வெண்பா ரெண்டு பேரையும் இன்வைட் பண்ணி பேசினோம். கட்சி சார்பா எந்தவொரு வன்மமும் கிடையாது. முறைப்படி அவர்களை அழைத்துப் பேசினோம். இந்த அறிக்கை கட்சியோட பத்திரிகைத் துறை தயார் பண்ணிக் கொடுத்தது. அதுல நான் கையெழுத்துப் போட்டேன். சீனியர் தலைவர்கள் கூட கூப்பிட்டுச் சொன்னாங்க. கடைசி பாராவைப் படிச்சீங்களானு…’ என்கிறரீதியில் விளக்கம் கொடுத்ததாகவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
பா.ஜ.க-வில் நான் உறுப்பினர். அவர் கட்சியோட தலைவர். அவர் சொல்லித்தான் நான் வீடியோ வெளியிட்டேன். பாதிக்கப்பட்ட பெண்களை ஏற்கனவே இவர் மிரட்டிக் கொண்டிருக்கிறார். இந்த ஆடியோ ஆதாரம் மட்டும் இல்லாமல் போயிருந்தால், அவர்கள் பாதிக்கப்பட்டதற்கான முழு பொறுப்பையும் என் மீது சுமத்தியிருப்பார் அண்ணாமலை’ என்று மதன் குற்றம்சாட்டியிருக்கிறார். வீடியோவின் இறுதியில் தோன்றும் மதனோடு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வெண்பா,கட்சியில் ஆக்டிவ்வாக இல்லாத என்னிடமே இவ்வளவு பேரம் பேசுகிறீர்களே… கட்சியில் இருக்கும் பெண்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு முழுக்க முழுக்க பொறுப்பானவர் அண்ணாமலைதான் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஏன்னா, வீடியோவில் இருப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னபோது, `இல்ல நீங்க வீடியோவை வெளியிடுங்க’னு சொன்னது அண்ணாமலைதான். இந்த வீடியோவுக்கு இங்கிலீஷ், ஹிந்தி சப்டைட்டில் போட்டு கட்சியின் மேலிடம் வரை அனுப்ப எல்லா நடவடிக்கையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
Also Read – பகீர் கிளப்பிய மதன்… பா.ஜ.க பொதுச்செயலாளர் பொறுப்பை உதறிய கே.டி.ராகவன் – என்ன நடந்தது?