உலக அளவில் புழக்கத்தில் இருக்க ஒரு விஷயத்துக்கு நம்ம ஊரோட பெயர் சூட்டினா அது கொஞ்சம் பெருமிதமா இருக்கும். ஆனா, ஒரு நோய்க்கு நம்ம ஊரோட பெயர் சூட்டப்பட்டிருக்குன்னா அது எப்படி இருக்கும்? அப்படி ஒரு நோய் தான் “மெட்ராஸ் ஐ”. இந்த நோய்க்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதுல ஆரம்பிச்சு, இணையத்தில் நம்ம மக்கள் இந்த நோய் பற்றி அதிகமா தேடுற சில விஷயங்களுக்கான பதிலை இந்த வீடியோவில் பார்ப்போம். இந்நோய்க்கு ஏன் இந்தப் பெயர் சூட்டப்பட்டது தெரியுமா? நோய்த் தொற்றுக்கு ஆளானால் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன? நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களுடைய செல்போன்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது ஏன் தெரியுமா?
‘மெட்ராஸ் ஐ’ என்றால் என்ன?
மெட்ராஸ் ஐ’னு பரவலா இந்தியாவில் அழைக்கப்படும் இந்நோயிற்கான மருத்துவப் பெயர் விழி வெண்படல அழற்சி (Conjunctivitis), அமெரிக்காவில் இந்நோய் Pink eye எனவும் அழைக்கப்படுது. கண்களுடைய வெளிப்புறச்சவ்வுகளிலும், இமையோட உள்புறச்சவ்வுகளிலும் ஏற்படும் ஒரு வித அழற்சியால் கண்கள் இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறக்கூடிய நோய்தான் மெட்ராஸ் ஐ.
பொதுவாக நம் உடலில் தோல், திசுக்களில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளால் தொற்றுக்கு உள்ளாகும் போது நம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தி வெள்ளையணுக்களை அந்த இடத்தில் குவிக்கும் அதனால் அந்த இடம் லேசாக வீக்கமடையும், அப்பகுதி சிவக்கும் இதைத்தான் அழற்சி என சொல்வார்கள்.
அடினோவைரஸ் மற்றும் சில பாக்டீரியாக்களால், வேறு சில காரணிகளால் கண்களில் இந்தத் தொற்றுநோய் ஏற்படுகிறது. இந்நுண்ணுயிர்த் தாக்குதலை எதிர்கொள்ளும் நம்முடைய நோய் எதிர்ப்புக் காரணிகளால், கண்களில் வீக்கம் ஏற்படுவதும் இளஞ்சிவப்பு நிறமடைகிறது. இதனால் ஒருவிதமான அரிப்பும், கண்களில் நீர்க்கசிவும் ஏற்படுகிறது.
இந்நோய்த் தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
‘வைரஸ்’ மற்றும் ‘பாக்டீரியாக்கள்’ போன்ற நுண்ணுயிரிகள் மூலமாகத் தொற்று ஏற்படலாம். வாசணைத் திரவியங்கள், வேதிப்பொருள்கள் மூலமாகவும் பாதிப்பு ஏற்படலாம். அலர்ஜி போன்ற ஒவ்வாமைகளால் தொற்று ஏற்படலாம். ஆட்டோ இம்யூன் குறைபாட்டாலும் இந்நோய்த் தொற்று ஏற்படும்.
இதற்கான சிகிச்சை முறை என்ன? எவ்வளவு நாள்களில் இது சரியாகும்?
நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 65% பேருக்கு இரண்டு முதல் ஐந்து நாள்களில் எந்த விதமான சிகிச்சை முறைகளும் இல்லாமலே தானாக இது சரியாகிவிடும். நம் உடலின் நோய் எதிர்ப்புத்திறனே இதைச் சரிசெய்துவிடும். ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்புத்திறனைப் பொறுத்தது இது. ஒவ்வொருவருக்கும் இது வேறுபடும்.
எந்த வகையான நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறதோ அதற்கேற்ற சிகிச்சை முறை மேற்கொள்ள வேண்டும். நோய்த்தொற்றுக்கு உள்ளானவர், கைகளை வைத்து கண்களைத் தேய்க்காமல் இருக்கவேண்டும். சிலவகைத் தொற்றுகளுக்கு குளிர்ச்சியான நீரால் கண்களை அலசி தூய்மையான பருத்தித் துணிகளைக் கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.
Also Read – விஜய் ரசிகர்களும் ரசிக்கும் முகவரி.. கிளாசிக் ஹிட்டுக்கான 4 காரணங்கள்!
வைரஸ், பாக்டீரியாவினால் ஏற்பட்ட தொற்றுகள் பெரும்பாலும் சிகிச்சை முறைகள் இல்லாமலே சரியாகிவிடும். இவற்றின் தாக்கத்தால் இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள் ஏற்பட்டாலும், இரண்டு முதல் ஐந்து நாள்களுக்குள் சரியாகாமலும் தொற்று மேலும் தீவிரமடைந்தாலும் மருத்துவரின் பரிந்துரையின்படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
மெட்ராஸ் ஐ நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யக்கூடாதவை
சிகிச்சையின் போது செய்யக்கூடாத ஒரு விஷயம், தொற்று பாதிக்கப்பட்டவர் தன்னுடைய தலையணை, போர்வை, துண்டு, கைக்குட்டைகள், கண் அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை பிறருடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது. கைகளைக் கொண்டு கண்களைத் தேய்க்கக்கூடாது. கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
நோய்த்தொற்றுக்கு உள்ளானவருடைய செல்போன்களை மற்றவர்களுடன் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக நோய்த்தொற்றுக்கு உள்ளான பெற்றோர்கள், குழந்தைகளுக்கு விளையாட செல்போன்களைத் தருவதை தவிர்க்க வேண்டும். நோய்த் தொற்றுக்கு உள்ளானவரின் கண்களில் வடியும் நீரை அவர் கைகளால் தொட்டிருக்கலாம். காதுகளில் வைத்துப் பேசும் போது அந்நீர் செல்போனில் பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். அவற்றை சானிடைஸ் செய்யாமல் பிறர் பயன்படுத்தும் போது அதன் மூலமாக இன்னொருவருக்கும் தொற்று பரவும்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், வீட்டில் இருக்கும் கண் மருந்துகளையோ, மருந்தகத்தை அனுகி நேரடியாக ஒரு மருந்தை வாங்கிப் பயன்படுத்துவதையோ கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
நோய்த்தொற்று தீவிரமடைந்தால் கட்டாயம் மருத்துவரை அனுகி சிகிச்சைப் பெற வேண்டும். சுயசிகிச்சைமுறைகளைத் தவிர்ப்பது நல்லது.
பருவமழைக்காலத்தில் கண்கள் சிவந்தாலே, மெட்ராஸ் ஐ என முடிவுக்கு வந்துவிடக்கூடாது. இதுதவிர வேறு சில நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், சுயசிகிச்சை முறைகளைத் தவிர்த்து மருத்துவரை அனுகி சிகிச்சையை மேற்கொள்வதே உகந்தது.
மெட்ராஸ் ஐ எப்படி பரவும்?
நோய்த் தொற்றுக்கு உள்ளானவரை நேருக்கு நேர் பார்ப்பதால் மட்டுமே பரவிவிடும் என்ற ஒரு தவறான கருத்து உள்ளது. நோய்த்தொற்றுக்கு உள்ளானவரின் கண்களில் வடியும் நீரை மற்றவர்கள் தொடுவதன் மூலமாக மட்டுமே இந்நோய் பரவும். நோய்த்தொற்றுக்கு உள்ளானவரைத் தொடுவதன் மூலமும் அவருடைய கைக்குட்டை, துண்டு, உடை, போர்வை போன்றவற்றை பகிர்ந்துகொள்வதன் மூலமாகவுமே பெரியளவில் பரவும். நோய்த்தொற்றுக்கு உள்ளானவர் இருமுவதாலும் தும்முவதாலும் காற்றின் மூலமாக அடுத்தவருக்கு பரவும்.
ஏன் இந்நோய்க்கு ‘மெட்ராஸ் ஐ’ பெயர் சூட்டப்பட்டது?
1918-ம் ஆண்டு மெட்ராஸில் ஒரு விதமான புதிய வகை கண் நோய் ஏற்பட்டது. அந்நோய்க்கான காரணத்தையும், அதை குணமாக்குவதற்கான வழிமுறைகளையும் குறித்த ஆராய்ச்சி அப்போது நடைபெற்றது. அவ்வாராய்ச்சியின் முடிவில் ‘மெட்ராஸ் ஐ’ நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரியான அடினோ வைரஸ் முதலில் மெட்ராஸில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் இங்கு கண்டறியப்பட்டதால் இந்நோய்க்கு மெட்ராஸ் ஐ எனப் பெயர் சூட்டப்பட்டது.