கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. பின்னணி என்ன?
அன்னைத் தமிழில் அர்ச்சனை
தமிழகத்தில் இருக்கும் 41 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் `அன்னைத் தமிழில் அர்ச்சனை’ திட்டத்தை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கடந்த ஆகஸ்ட் 6-ல் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “இந்தத் திட்டத்தை முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இது புதிய திட்டமில்லை. ஏற்கனவே கடந்த 1971-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிந்தனையில் உருவான திட்டம். இதுதொடர்பாக அப்போதைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கண்ணப்பன், அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 1974-ல் கோயில்களுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டது. 1998-ல் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக விவாதம் எழுந்தபோது, பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று பதிலளித்திருந்தார்’’ என்று தெரிவித்தார்.
இதற்காக தமிழில் 14 மந்திரங்கள் அடையாளம் காணப்பட்டு, ஒவ்வொரு கோயிலிலும் இருக்கும் அர்ச்சகர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முதற்கட்டமாக 41 கோயில்களிலும் தொடங்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் பக்தர்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மற்ற கோயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர், தனது மனுவில், “கோயில்களில் ஆகம விதிகளை மீறி தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது. சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை செய்ய உத்தரவிட வேண்டும். 1998-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிப்படியான நடைமுறைகளை மாற்ற முடியாது. மத விவகாரங்களில் அரசு தலையிட முடியாது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என்று தீர்ப்பில் குறிப்பிட்டனர். தமிழில் அர்ச்சனை செய்ய எந்தவொரு தடையும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஏற்கனவே உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழில் அர்ச்சனை செய்யத் தடையில்லை என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், விரிவான ஆய்வுக்குப் பிறகே அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பதால், அதை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்றும் தங்களது தீர்ப்பில் தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டிருக்கிறது.
Also Read – விநாயகர் சதுர்த்தி 2021: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் – 7 சுவாரஸ்ய தகவல்கள்!