மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு வளர்க்கும் பொதுமக்கள் ஆண்டுக்கு ரூ.10 உரிமைத் தொகை செலுத்தி வளர்ப்புப் பிராணிகளைப் பதிவு செய்ய வேண்டும் என ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருக்கிறார்.
மதுரை மாநகரில் இயங்கும் இறைச்சி, மீன் கடைகளுக்கு உரிமம் பெறுவதற்கு புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கிறது. மாநகராட்சி பகுதியில் தொழில் செய்பவர்களுக்கு உரிமம் வழங்கப்படுவது இப்போது நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இறைச்சி, மீன் கடைகள் வைத்திருப்பவர்கள் இந்த உரிமம் பெறாமல் கடைகளை நடத்தி வருகிறார்கள். அதேபோல், கழிவுகளையும் முறையாக அப்புறப்படுத்துவதில்லை. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, இறைச்சி, மீன் கடைகள் வைத்திருப்போர் உரிமம் பெறுவதற்கான நடைமுறையை மாநகராட்சி அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இறைச்சி, மீன் கடைகள் வைத்திருப்போர் கடையின் அளவைப் பொறுத்து ஆண்டுதோறும் உரிமைத் தொகை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, சதுர அடிக்கு ரூ.10 என ஆண்டுதோறும் மாநகராட்சிக்கு உரிமைத் தொகை கட்ட வேண்டும். உதாரணமாக 100 சதுர அடியில் கடை வைத்திருப்போர் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக மாநகராட்சிக்கு செலுத்தி உரிமம் பெற வேண்டும். அதேபோல், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் நாய், ஆடு, மாடு, குதிரை வளர்ப்போர் ஆண்டுக்கு ரூ.10 உரிமைத் தொகை கட்டி அவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களின் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் மதுரை மாநகராட்சி எச்சரித்திருக்கிறது. ஆடு, மாடு, குதிரைகளை சாலைகளில் விட்டால் ஆயிரம் ரூபாய் அபராதமும், தினசரி ரூ.100 பராமரிப்புத் தொகையாகவும் வசூலிக்கப்படும்.
இந்த புதிய நடைமுறைகள் தொடர்பாக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து ஆட்சேபம் இருப்பவர்கள் நகர்நல அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம் எனவும் மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.