ரவீந்திர ஜடேஜா

தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டர்… ரவீந்திர ஜடேஜா எனும் மேஜிக் மேன்!

ரவீந்திர ஜடேஜா, இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர். இப்போது சி.எஸ்.கே அணியின் விலை மதிப்புமிக்க வீரர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அசைக்க முடியாத இடம் இவருக்கு உண்டு. இவரைப் பற்றிப் பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை ஜடேஜா எனும் ஜட்டுவுக்கு பிறந்தநாள் இன்று. இவரைச் செதுக்கிய பெருமை ஆரம்பகால பயிற்சியாளர் செளஹான், ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே மற்றும் தோனி ஆகிய மூவரைத்தான் சேரும்.

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டைத் தேர்வு செய்தது ஏன்?

1988-ம் வருடம் குஜராத்தில் உள்ள நவகம் கேட் எனும் இடத்தில் பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பம். ரவீந்திர ஜடேஜாவின் அப்பா அனிருத் ஜடேஜா, சரியான வேலை இல்லாமல் சின்ன சின்ன வேலைகளைச் செய்து வந்திருக்கிறார். அம்மா லதா, மருத்துவமனையில் நர்சாகப் பணிபுரிந்தார். ஜடேஜாவுக்கு சின்ன வயதிலிருந்தே தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருந்தது. அதற்காக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல அவரோ, “பையனை விளையாட வைச்சு டயர்டாக்கி நல்லா தூங்க வச்சுடுங்க’ என்கிறார். அதனால், பக்கத்தில் இருந்த கிரவுண்டுக்கு போய் விளையாட அனுமதிக்கப்பட்டார், ஜடேஜா. அங்குச் சீனியர் மாணவர்கள் கிண்டல் செய்ய, கிரிக்கெட் பங்களா எனும் கிரிக்கெட் பயிற்சி மையத்துக்கு அனுப்பப்பட்டார்.

அங்குதான் இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அந்தப் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் மகேந்திரசின் செளஹான் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி. கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டான ஆபீசர். பயிற்சியில் கடுமையான கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் கையாளக் கூடியவர். சுழற்பந்து வீச்சாளார்களுக்கு சிறப்பாகப் பயிற்சி தரும் அவர், பந்து வீசும்போது பிட்ச்சின் இடையில் ஒருவரை நிற்கவைத்து விட்டு, அவரின் தலைக்கு மேல் பந்தை வீசச் சொல்லிப் புதுவகை நுட்பத்தைக் கையாண்டு பயிற்சியளிப்பாராம். இவர்தான் ரவீந்திர ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்க்கை மாற்றியவர் என்றே சொல்லலாம்.

Also Read – என்னடா இப்படிலாம் திருடுறீங்க.. வெரைட்டி ஸ்கேம் சம்பவங்கள்!

ஒரு நேரத்தில் கிரிக்கெட் பங்களாவில் பயிற்சி, ஆர்மி பள்ளியில் கல்வி என இரண்டு வாய்ப்புகள் ஜடேஜாவைத் தேடி வந்திருக்கின்றன. ஜடேஜா தேர்ந்தெடுத்தது கிரிக்கெட் பயிற்சியைத்தான். ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளராக ஆரம்பித்தவரை, பயிற்சியாளர் செளஹான் இடது கை ஸ்பின்னராக் ஒருகட்டத்தில் மாற்றினார். தனது முதல் ஆட்டத்தில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் கொடுத்ததற்காகப் பயிற்சியாளர் செளகான் பார்வையாளர்கள் முன்னிலையில் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். அடி வாங்கிய வெறியோடு பவுலிங் செய்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஜடேஜா. 19 வயதுக்கு உட்பட்ட இந்திய ஜூனியர் அணியில், தனது 16 வயதில் விளையாடினார். 2008-ம் ஆண்டு 19 வயதுக்குப்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் கோலி கேப்டனாக இருந்த இந்திய அணிக்குத் துணை கேப்டனாக ஜடேஜா இருந்தார்.

ரவீந்திர ஜடேஜா

2008 ஐ.பி.எல் தொடங்கிய காலகட்டம்… ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரவீந்திர ஜடேஜாவை வாங்கியது. அந்த அணியின் கேப்டன் ஆஸ்திரேலிய வீரர் வார்னே. இவரிடமிருந்து சுழற்பந்து வீச்சு நுட்பங்களைக் கற்றுக் கொண்டார், ரவீந்திர ஜடேஜா. இவரது திறமையைப் பார்த்த வார்னே, “எதிர்காலத்தில் நல்ல விளையாட்டு வீரர் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறார்’ என்றார். 2008-09 ரஞ்சி சீசனில் 739 ரன்களும் 42 விக்கெட்டுகளும் எடுத்தார், ஜடேஜா. அதன்மூலம் இந்திய சீனியர் தேர்வு குழுவின் பார்வையைத் தனது பக்கம் திருப்பினார். 2009-ம் ஆண்டு முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராகக் களமிறங்கினார் ஜடேஜா. அறிமுகமான முதல் போட்டியில் ஜடேஜா அடித்த ரன்கள் 60. 2010-ம் ஆண்டு ஐ.பி.எல் விதிகளை மீறி ஒரு அணியிலிருந்து கொண்டே மற்றொரு அணிக்குப் போக முயன்றதாக ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டது. வாழ்க்கை ஜடேஜாவுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கியது. 2012-ம் ஆண்டு 23 வயதாக இருந்த ஜடேஜா, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாதனையைப் படைத்தார். அந்த ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் டிரிபிள் செஞ்சுரி அடித்து, உள்ளூர் கிரிக்கெட்டில் இந்த சாதனையைப் படைத்த உலகின் எட்டாவது, இந்தியாவின் முதல் வீரராக மிளிர்ந்தார். டான் பிராட்மேன், பிரையன் லாரா, பில் பான்ச்ஃபோர்ட், வால்ட்டர் ஹம்மாண்ட், W.G.கிரேஸ், கிரஹாம் ஹிக் மற்றும் மைக் ஹஸ்ஸி ஆகியோர் இந்தச் சாதனை பட்டியலில் இருந்தனர்.

அதன் பின்னர் 2013-ல் சாம்பியன் ட்ராபி தொடரில் ஜடேஜா ஒரு முக்கியமான வீரராக உருவானார். அந்தத் தொடரில் போட்டியில் 12 விக்கெட்டுகளை எடுத்து ‘கோல்டன் பால்’ பெற்றார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் உலகின் நம்பர் ஒன் பவுலர் என்ற பெருமையைப் பெற்றார். இந்திய முன்னாள் வீரரான அனில் கும்ப்ளேவுக்கு பின் இந்த இடத்தை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா மட்டுமே.

சி.எஸ்.கே பயணம்

ரவீந்திர ஜடேஜா

2012- ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடக்கிறது, வீரர்களின் பெயர்கள் வரிசையாகச் சொல்லச் சொல்ல அணிகள் வாங்கிக் கொண்டே இருந்தன.அந்த வரிசையில் ஜடேஜா பெயர் வந்தது. அத்தனை அணிகளும் ஏலம் கேட்டன. கடைசி வரை சி.எஸ்.கே மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் மாறி மாறி ஜடேஜாவை ஏலம் கேட்டன. அப்போது 10 கோடி ரூபாய் விலை கொடுத்துச் சென்னை அணி ஜடேஜாவை வாங்கியது. அதன் பின்னர் ஜடேஜாவுக்கு எல்லாமே ஏறுமுகம்தான். அதுவரை பேட்டிங், பவுலிங் எனக் கவனத்தை ஈர்த்த ஜடேஜா ரன்அவுட் மூலம் சிறந்த ஃபீல்டராகவும் கவனம் ஈர்க்க ஆரம்பித்தார். ஜடேஜா செய்யும் ‘அண்டர்ஆர்ம்ஸ் டைரக்ட் த்ரோ’ நிச்சயமாக விக்கெட்டை எடுத்துவிடும். 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் டாப் பேட்ஸ்மேன்கள் ஆடி முடியும்போது தோனியுடன் ஆபத்பாந்தவனாகக் கைகொடுத்தார் ஜடேஜா. அந்த மேட்ச் தோற்றுப்போனாலும், ஜடேஜாவின் அந்த ஆட்டம் அவருக்குப் பல ரசிகர்களைத் தேடித்தந்தது. அதற்கு முன்னர் இருந்தே ஜடேஜாவுக்கான இடத்தைக் கொடுத்து வந்திருந்தார் தோனி. அதுவும் அவர் நன்றாக விளையாடுவதற்கு ஒரு காரணம். பேட்டிங்கின்போது இவரது ஸ்வார்டு ஆக்‌ஷனுக்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன் மும்பையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்தப் போட்டியில் 20-வது ஓவரில் ஜடேஜா அடித்தது 37 ரன்கள். அந்த அடியைப் பார்த்து மற்ற அணிகள் மிரண்டன. தலைவனான தோனியின் கோட்டைக்குள் ஜடேஜா இப்போது முக்கியமான தளபதி. கடந்தமுறை கேப்டன்சி கொடுக்கப்பட்டபோது, சில பிரச்னைகளால் அவரால் சரியாக கையாள முடியவில்லை. ஆனால் இப்போது வரை ஜடேஜாவின் பீல்டிங், பவுலிங், பேட்டிங் என ஆல்ரவுண்டர்ஷிப்பை தக்க வைத்துக் கொண்டு வருகிறார். எதிர்காலத்தில் மீண்டும் ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக மாறவும் வாய்ப்பு உண்டு.

2 thoughts on “தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டர்… ரவீந்திர ஜடேஜா எனும் மேஜிக் மேன்!”

  1. Howdy! Do you know if they make any plugins to help with Search Engine Optimization? I’m trying to get my website to rank for some targeted keywords but I’m not seeing very good success.
    If you know of any please share. Many thanks! I saw similar blog here: Eco product

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top