ஒன்லைன்:
எதிர்பாராமல் ஒரு கொலைக் குற்றத்தில் சிக்கும் மூன்று போலீஸைத் தேடி, அதிகாரம் நடத்தும் வேட்டைதான் ‘நாயாட்டு’.
கதை என்ன?
மணியன் (ஜோஜூ ஜார்ஜ்), ப்ரவீன் (குஞ்சாக்கோ போபன்), சுனிதா (நிமிஷா சஜயன்) மூவரும் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்கள். அரசியல் அடியாளான சுனிதாவின் சொந்தக்காரப் பையன் பிஜூ மூலமாக ஸ்டேசனில் ஒரு பிரச்னை வருகிறது. மணியன், ப்ரவீன் இருவரும் அவனைத் தாக்க கைகலப்பில் முடிகிறது. அன்று இரவு மூவரும் வந்த கார் ஒரு பைக்கில் மோதி, விபத்தாகிறது. அந்த விபத்தில் பைக் ஓட்டி வந்த பிஜூவின் நண்பர் இறந்து போகிறார். முன் பகை காரணமாக போலீஸ் கொன்று விட்டதாக கிளம்ப, சிறிது நேரத்தில் ‘தலித் இளைஞரைக் கொன்ற காவல்துறை’ என்று அரசியல் பிரச்னையாக மாறுகிறது அந்த சம்பவம். தேர்தல் நேரம் என்பதால் தனது வாக்குகளைத் தக்கவைத்துக்கொள்ள ஆளும்கட்சி அந்த மூன்று பேரையும் கைது செய்ய நினைக்கிறது. காவல்நிலையத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகும் அந்த மூன்று பேரும் பிடிபட்டார்களா? தேடுதல் வேட்டை என்ன ஆனது? என்று நீள்கிறது திரைக்கதை.
படம் எப்படி?
போலீஸ் சிஸ்டம் எப்படி வேலை செய்யும் என்ற ‘விசாரணை’ படத்தின் மலையாள வெர்சன்தான் ‘நாயாட்டு’. கூடுதலாக இதில் தேடுபவர்கள், தேடப்படுபவர்கள் இரு பிரிவுமே போலீஸ்காரர்கள். விசாரணை படம் உங்களுக்குப் பிடித்திருந்தால் இதுவும் நிச்சயம் பிடிக்கும். பச்சைப் பசேலென கண்ணுக்குக் குளிர்ச்சியான இடத்தை திரையில் காட்டி, டார்க்கான கதை சொல்லும் அழகிய முரண் வித்தியாசமாக இருக்கும். வழக்கமான மலையாள படங்களில் இருக்கும் அதே பொறுமை இதிலும் இருக்கும். ஹீரோயிசம் எதுவும் இல்லாத எதார்த்தமான க்ளைமேக்ஸ் ரசிக்க வைக்கும்.
படத்தின் மாஸ்டர் மைண்ட்ஸ்:
போலீஸ் நினைத்தால் ஒரு சம்பவத்தை பொய்யாக எப்படி ஜோடிக்க முடியும், ஒருவரை சிக்கவைக்க எப்படியெல்லாம் ஆதாரங்களை உருவாக்கும் என்று டீட்டெய்லாக பல இடங்களில் காட்டியிருப்பார்கள். காரணம் இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதிய ஷாஹி கபீர் உண்மையிலேயே போலீஸாக இருந்தவர். துல்கர் சல்மானின் சார்லி படத்தை இயக்கிய மார்ட்டீன் பிரக்கத்தான் இந்தப் படத்தின் இயக்குநர்.
ஆனாலும் மார்ட்டீன் சேட்டா…
தலித் மரணங்களை சந்தர்ப்பவாதம் போல நெகட்டிவாக சித்தரித்தது, மாநில எல்லையோரத்தில் வசிக்கும் தமிழர்களை கஞ்சா விற்பவர்கள் போலக் காட்டியது என பல நெருடலான விஷயங்களும் படத்தில் இருக்கிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை நிச்சயம் பார்க்கலாம்.
[zombify_post]