சீர்காழி அருகே கோயில் படிக்கட்டில் பெயர் பொறிப்பது தொடர்பான சர்ச்சையில் 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் சர்ச்சையாகியிருக்கிறது.
கோயில் படிக்கட்டு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமம் இருக்கிறது. மீனவ தொழில் செய்துவரும் மக்கள் அதிகம் வசிக்கும் இந்த கிராமத்தில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்துக்கு அதேபகுதியைச் சேர்ந்த நிலவன் என்பவர் வெண்கலத்தால் ஆன படிக்கட்டுகளைச் செய்து அதில் தனது பெயரைப் போட்டு அன்பளிப்பு செய்திருக்கிறார். படிக்கட்டில் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதற்கு ஊர் முக்கியஸ்தர்களான தேவேந்திரன், முத்து, காத்தலிங்கம், மணியன் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இந்தவிவகாரம் பெரிதான நிலையில், நிலவன் மட்டுமல்லாது அவரது சகோதரர்களான கர்ணன், ஜெயக்குமார், மாதவன், முரளி, ராஜா உள்ளிட்ட 6 பேருடைய குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கிவைப்பதாகக் கட்டப்பஞ்சாயத்து செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நேற்று நடைபெற்ற ஊர் திருவிழாவின்போது நிலவன் உள்ளிட்ட சகோதரர்கள் 6 பேரின் குடும்பத்தினர் விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என மைக்கில் அறிவித்ததாகவும் சொல்கிறார்கள். அந்தக் குடும்பத்தினருக்கு ஊரில் இருக்கும் மளிகைக் கடைகளில் யாரும் பொருட்கள் கொடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்ததோடு, மீறுபவர்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
வட்டாட்சியரிடம் புகார்
இதையடுத்து சட்டவிரோதமாகக் கட்டப்பஞ்சாயத்து செய்து தங்கள் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி அந்தக் குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளோடு சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது வட்டாட்சியர் இல்லாததால், அலுவலக வாயிலில் குழந்தைகளோடு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துணை வட்டாட்சியர் வந்து அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின்னர், அவர்கள் கலைந்து சென்றனர்.
வரும் 27-ம் தேதி நடைபெறும் திருவிழாவில் தங்கள் குடும்பத்தினரை அனுமதிக்க வேண்டும் என்றும், கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read – OLX விளம்பரங்கள்தான் குறி… கேரள புல்லட் திருடனை சென்னை போலீஸ் மடக்கியது எப்படி?!