தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை எழுந்திருக்கிறது. இதற்கு முக்கியமான காரணமாக மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்பட வேண்டிய 795 மெகாவாட் திடீரென கிடைக்காமல் போனதுதான் என தமிழக அரசு சொல்கிறது.
மின்வெட்டு
கோடை வெப்பம் தகிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் தமிழகத்தின் மின் தேவையும் அதிகரித்திருக்கிறது. இந்தநிலையில், கடந்த 18-ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு பிரச்னை பூதாகரமாக வெடித்திருக்கிறது. மின்வெட்டு பிரச்னையால் திருவண்ணாமலை உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் மறியல் உள்ளிட்ட வகைகளில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, கடந்த 20-ம் தேதி பல இடங்களில் நிலைமை மோசமானது என்று தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, `இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என ஏப்ரல் 20-ம் தேதி விளக்கமளித்திருந்தார்.
தூத்துக்குடி தேசிய அனல்மின் கழகத்திடமிருந்து கிடைக்க வேண்டிய 200 மெகாவாட், நெய்வேலி அனல்மின் நிலையத்தில் இருந்து வர வேண்டிய 480 மெகாவாட், கர்நாடகாவின் குட்கி தேசிய அனல்மின் கழக ஆலையிலிருந்து கிடைக்க வேண்டிய 115 மெகாவாட் என 795 மெகாவாட் திடீரென கிடைக்காமல் போனதாக மின்வாரியம் தரப்பில் சொல்லப்பட்டது.
பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்
இந்தநிலையில், மின்வெட்டு பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ” தமிழகத்தின் மின்தேவை 17,100 மெகாவாட்டாக இருக்கும் நிலையில், 13,100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. கோடைகாலத்தில் மின்தேவை அதிகரித்திருக்கும் நிலையில், மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி இல்லாததால், மின் தடை ஏற்படுகிறது. தற்போது அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் விவசாயிகள், சிறு,குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்களையும் பாதிக்கும் இந்த மின்வெட்டு பாதிப்பை சரிசெய்ய இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது’’ என்று கேள்வி எழுப்பினார். பா.ம.க தலைவர் ஜி.கே.மணி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை ஆகியோரும் மின்வெட்டை சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அமைச்சரின் விளக்கம்
இந்தக் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ’’தமிழகத்தில் கடந்த 18-ம் தேதி 312 மில்லியன் யூனிட்டாக இருந்த மின் நுகர்வு, கடந்த 21-ம் தேதி 363 மில்லியன் யூனிட்களாக உயர்ந்தது. மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து வரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் கிடைக்காமல் போனதால் மின்தடை ஏற்பட்டது. இதற்காகக் குறைந்த விலையில் 3,000 மெகாவாட் மின்சாரத்தை வாங்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 41 இடங்களில் மட்டுமே மின்தடை பிரச்னை ஏற்பட்டது. அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பிரச்னை சரிசெய்யப்பட்டது’ என்று பேசினார். அமைச்சரின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.கவினர் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின்னர் தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘’தமிழகத்துக்கு தினசரி 72,000 டன் நிலக்கரி தேவை என்கிற நிலையில், மத்திய அரசு தினமும் 48,000 முதல் 50,000 டன் நிலக்கரியை மட்டுமே ஒதுக்கீடு செய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி தேவையில், 20,000 டன் நிலக்கரியைக் குறைத்தே தருகிறது. இதனால், தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். தொழிற்சாலைகளுக்கும், மக்களுக்கும் இனி எந்த சூழலில் இனி மின்தடை ஏற்படாமல், சீரான மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் கடிதம்
இந்தநிலையில், தமிழகத்துக்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கும்படி பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில்,’’ தமிழகத்துக்கு நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதிசெய்திட நிலக்கரி அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். துறைமுகங்களுக்கு நிலக்கரியை எடுத்துச் செல்ல 22 ரயில்வே ரேக்குகள் தேவைப்படும் நிலையில், ஒரு நாளைக்கு சராசரியாக 14 ரேக்குகள் மட்டுமே ரயில்வேயால் வழங்கப்படுகின்றன. தடையற்ற மின் விநியோகத்தைப் பராமரிப்பதற்காக அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது’ என முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.
Also Read –
கமலாலயமும் எம்.ஜி.ஆர் மாளிகையும் – பேரவையில் உதயநிதி – ஓ.பி.எஸ் கலகல!