தங்கத்தின் தங்கம்!
ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில், ராமநாதபுரம் ஜில்லா, கமுதி பக்கம் சாயல்குடியைச் சேர்ந்தவர் தங்கப் பாண்டியன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டியனுக்கு ஊரில் நல்ல வசதியும் இருந்தது. நிலபுலன்கள், சொந்த வீடு எல்லாம் இருந்த தால், அவருடைய படிப்பிற்கு எந்தச் சிக்கலும் இல்லை. அந்தக் காலத்திலேயே பி.ஏ., முடித்து அதன்பிறகு பி.எட்., படிப்பையும் முடித்துவிட்டார். படித்த இளைஞர்களிடம் அந்தக் காலத்தில், தீப்பிடித்தது போல் பரவிய, தந்தை பெரியாரின் திராவிடர் கழகக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தங்கப்பாண்டியன், அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சுயமரியாதைக் கொள்கைகளுக்காகப் பிரச்சாரம் செய்து வந்தார். அந்த நேரத்தில், திராவிடர் கழகத்தில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. திராவிடர் கழகத்தின் தளபதியாக இருந்த அண்ணா தலைமையில், பல இளைஞர்கள் தனியாகப் பிரிந்து, 1949-ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினர்.
1949-ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்தப் பிரிவையொட்டி, அண்ணா தலைமையை ஏற்றுக் கொண்டு திராவிடர் கழகத்தைவிட்டு வெளியேறியவர்களை கண்ணீர்த்துளிப் பசங்க என்றார் பெரியார். அதையொட்டி, அறிஞர் அண்ணாவும் தன்னோடு வந்தவர்களின் பட்டியலை, திராவிட நாடு இதழில், கண்ணிர் துளிகள் என்னும் தலைப்பில் வெளியிட்டார். அந்தப் பட்டியலில், “தங்கப்பாண்டி, திராவிட மாணவர் கழகம், கமுதி” என்ற பெயர் வெளியாகி இருந்தது. அப்படி, பெரியார் காலத்தில் இருந்து, அரசியல் பின்புலம் உள்ள தங்கப்பாண்டியனின் மகன்தான் தங்கம் தென்னரசு… தங்கம் தென்னரசுவின் அரசியல் பயணத்தை நாம் அவரிடம் இருந்து மட்டும் தொடங்க முடியாது… காரணம், தங்கப் பாண்டியனின் அரசியல் வாழ்வுதான், தங்கம் தென்னரசுவின் அரசியலுக்கும் அடித்தளம். அதனால், தங்கப்பாண்டியனின் பின்புலத்தைச் சொல்லாமல், தங்கம் தென்னரசுவின் அரசியல் வாழ்க்கையையும், அவருடைய அரசியல் வளர்ச்சியையும் சொல்ல முடியாது.
அண்ணாவோடு வந்து தி.மு.க-வில் இணைந்துவிட்ட தங்கப் பாண்டியன், 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி கமுதியில் கிளைக்கழக உறுப்பினராகத் தன்னை இணைத்துக்கொண்டார். சொந்த ஊரில் குஞ்சம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பானு என்று ஒரு மகள் இருக்கிறார்.
அந்த நேரத்தில், ஆசிரியர் வேலைக்குப் படித்த தகுதியான இளைஞர்கள் குறைவு. ஆனால், மாநிலம் முழுவதும் ஆசிரியர் வேலைக்கு ஆட்களை நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சரியாக படித்த பட்டதாரி இளைஞரான தங்கப்பாண்டியனுக்கு, பட்டதாரி இளைஞர்களுக்கு ஆசிரியர் வேலை என்ற அடிப்படையில், மல்லாங்கிணறில் உள்ள அரசுப் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் வேலை கிடைத்தது. அதே பள்ளியில் ஆசிரியராக இருந்த ராஜாமணி என்பவரையும் தங்கப்பாண்டியன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சுமதி என்ற ஒரு மகளும், தங்கம் என்று ஒரு மகனும் உண்டு. அந்தக் காலத்தில், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்தவர் தென்னரசு. அவர் மீது தங்கப்பாண்டியனுக்கு பெரிய மதிப்பு இருந்தது. தென்னரசுவுக்கும், தங்கப்பாண்டியன் மீது பெரு மதிப்பு இருந்தது. அதனால், தன் மகனுக்கு தங்கம் தென்னரசு என்று பெயர் வைத்தார். அந்தப் பெயரை தி.மு.க-வின் முக்கியத் தளபதியாக இருந்த கலைஞரை வைத்து சூட்டினார். தலைமை ஆசிரியராக இருந்தாலும், தி.மு.க-காரராக வாழ்ந்த தங்கப்பாண்டியனின் வாழ்வில் திருப்புமுனை, 1968-ஆம் ஆண்டு வந்தது.
அன்றைக்கு ராமநாதபுரம் தனி மாவட்டமாக இருந்தாலும், அதன் மாவட்டச் செயலாளராக தென்னரசு இருந்தாலும், தென் மாவட்டங்களில் மதுரை முத்து என்ற பெயர் பிரபலம். அவர்தான் தென் தமிழகத்தின் தி.மு.க அரசியல் முகமாக இருந்தார். பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் தங்கப்பாண்டியன் மீது மதுரை முத்துவுக்கும் நல்ல அபிமானம் உண்டு. இப்படிப்பட்ட நிலையில், 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க அடுத்த 17 ஆண்டுகளில் தமிழகத்தின் ஆளும் அதிகாரத்தைப் பெற்று ஆட்சி அமைத்தது. அண்ணா முதலமைச்சரானார். அதுவரை பொறுமையாக ஆசிரியர் வேலையோடு, கட்சி வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்த தங்கப்பாண்டியனுக்கு மதுரை முத்து, இராமநாதபுரம் திமுக மாவட்டச் செயலாளர் தென்னரசு ஆகியோரோடு நல்ல பழக்கமும், மதிப்பும் இருந்தது, அவரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதுபோல் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட பல திருப்புமுனைகளைத் தெரிந்துகொள்ள ‘Tamilnadu Now’-ன் `Mr.Minister’ சீரிஸின் இந்த எபிசோடை முழுமையாகப் பாருங்கள்.