`இம்சைஅரசன் 23ஆம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாகத் தயாரிப்பாளர் ஷங்கருக்கும் வடிவேலுவுக்கு இடையே இருந்த கருத்துவேறுபாடு சுமூகமாகப் பேசி முடிக்கப்பட்டிருக்கிறது. இதனால், வடிவேலு நடிக்கக்கூடாது என அவர்மீது போடப்பட்டிருந்த ரெட் கார்டும் நீக்கப்பட்டிருக்கிறது. வடிவேலு மீண்டும் நடிக்கவருகிறார் என்பதுதான் சமீபத்தின் ஹாட் டாப்பிக். அவர் எந்தப் படத்தில் நடிக்கப்போகிறார்; அவரை எப்போது திரையில் பார்க்கலாம் என மக்கள் ஆவலாக இருக்கும் அதே வேளையில், அவர் நடிக்கப்போகும் முதல் படத்துக்கு ஒரு புது சிக்கலும் பின்னாலே வந்து கொண்டிருக்கிறது. அதுதான் `நாய் சேகர்’ என்கிற பெயர்.
`நாய் சேகர்’ என்றால் நம் நினைவுக்கு வருவது வடிவேலுவும் அந்தக் கேரக்டரின் கெட்டப்பும்தான். சுந்தர்.சி நடிகராக அறிமுகமான ‘தலைநகரம்’ படத்தில்தான் ‘நாய் சேக’ராக நடித்திருப்பார் வடிவேலு. இந்தப் படத்தை இயக்கிய சுராஜ்தான், வடிவேலுவை மீண்டும் இயக்கப்போகிறார். அந்தப் படத்திற்குத்தான் ‘நாய் சேகர்’ என பெயர் வைக்கயிருக்கிறார்கள். இதில் என்ன சிக்கல் என்றால், ஏற்கெனவே அதே பெயரில் ஒரு படமே எடுத்து முடித்துவிட்டார்கள்.

‘ஸ்டுடியோ க்ரீன்’ ஞானவேல்ராஜா `நாய் சேகர்’ என்கிற தலைப்பை வேற ஒரு படத்திற்காக முன்பே பதிவு செய்துவைத்திருக்கிறார். ஆனால், அந்தப் படத்தை அவரால் எடுக்க முடியாமல் போக, தலைப்பு மட்டும் இவரது நிறுவனத்தின் பெயரின் பதிவு செய்து இருக்கிறது. இந்த தலைப்பை சில மாதங்களுக்கு முன்பு ஏஜிஎஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. தற்போது காமெடி நடிகர் சதீஸை ஹீரோவாக வைத்து இதே தலைப்பில் படமொன்றையும் எடுத்து முடித்துவிட்டார்கள். இன்னும் பெயர் அறிவிக்கப்படாததால், இந்தப் பிரச்னை வெளியில் தெரியாமல் இருக்கிறது.

எப்படியும் அந்தப் பெயருக்கு நமக்குதான் அதிக உரிமை இருக்கிறது என்கிற மனநிலையில் வடிவேலு தரப்பும், நாம் பதிவு செய்யப்பட்ட தலைப்பைத்தான் வாங்கியிருக்கிறோம்; அதனால் நம்மீது தவறு இல்லை என்கிற மனநிலையில் ஏஜிஎஸ் நிறுவனமும் இருக்கிறது. இந்த இரு தரப்பும் பேசிக்கொண்டால் மட்டுமே இந்த தலைப்பு பிரச்னை தீரும். வடிவேலு சில ஆண்டுகள் கழித்து நடிக்க வந்திருக்கிறார்; அதனால் பிரச்னை எதுவும் வேண்டாம் என ஏஜிஎஸ் நிறுவனம் இந்தத் தலைப்பை விட்டுத்தரவும்; நம்மைப் போன்ற சக காமெடி நடிகர் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்பதால் அவருக்கு இந்தத் தலைப்பைக் கொடுத்துவிட்டு நாம் புதிய தலைப்பை வைத்துக்கொள்ளலாம் என வடிவேலு முடிவு செய்யவும் வாய்ப்புகள் இருக்கிறது என்பதால் இந்தப் பிரச்னை என்ன ஆகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Also Read – `டூப்னா வித்தியாசம் தெரியாதா’ – ஆக்ஷன் காட்சிகளை செதுக்கிய `கேப்டன்’ விஜயகாந்த்!
0 Comments