சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நிறுவனங்களுக்கென புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசானது Intermediary Guidelines and Digital Media Ethics Code 2021 என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்ட விதிமுறைகளை அமல்படுத்த ட்விட்டர் நிறுவனம் அவகாசம் கோரியுள்ள நிலையில், அதனை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனமானது உள்நாட்டு சட்டங்களுக்கு இணங்க செயல்படும் என்பதில் உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் புதிய டிஜிட்டல் சட்டங்கள் தொடர்பாக பேசிய சுந்தர் பிச்சை, “ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உள்நாட்டு சட்டங்களை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். எங்களிடம் தெளிவான மற்றும் வெளிப்படைத்தன்மையான அறிக்கைகள் எப்போதும் உள்ளன. அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப செயல்படும்போது நாங்கள் எங்களது அறிக்கைகளில் அவற்றை எடுத்துக்காட்டுகிறோம்” என்றார். சுதந்திரமான இணைய சேவை என்பது அடிப்படையான விஷயம் என்றூ கூறிய சுந்தர் பிச்சை இந்தியாவுக்கென இதற்கு நீண்ட பாரம்பரியம் உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார்.
சுந்தர் பிச்சை தொடர்ந்து பேசும்போது, “ஒரு நிறுவனமாக இலவச மற்றும் திறந்த இணையத்தின் மதிப்புகள் மற்றும் அவை கொண்டு வரும் நன்மைகள் குறித்து மிகவும் தெளிவாக நாங்கள் இருக்கிறோம். அதற்காக எங்களது வாதங்களையும் நாங்கள் வைத்து வருகிறோம். அதேநேரம் உலக நாடுகளில் உள்ள கட்டுப்பாடுகளுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறோம். அதற்காக செயல்முறைகளில் பங்கேற்கிறோம். இது நாம் கற்றுக்கொள்வதன் ஒரு பகுதியாகவே நினைக்கிறேன். நிறுவனம் சட்ட செயல்முறைகளை மதிக்கிறது. இதற்கென சரியான சமநிலையை தாங்கி வருகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பமானது சமூகத்தை ஆழமாகவும் பரந்த வழிகளில் தொடுவதாகவும் குறிப்பிட்ட அவர், “அரசாங்கங்கள் கட்டமைப்புகளை ஆராய்ந்து சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அது காப்பிரைட் தொடர்பான உத்தரவுகளைக் கொண்ட ஐரோப்பாவக இருந்தாலும் சரி தகவல் ஒழுங்குமுறைகளைக் கொண்ட இந்தியாவாக இருந்தாலும் சரி. தொழில்நுட்பங்கள் நிறைந்த உலகில் தங்களை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் மாற்றியமைப்பது என்பதை கண்டுபிடிக்கும் சமூகங்களின் இயல்பான பகுதியாகவே நாங்கள் இதனைக் காண்கிறோம். கூகுளும் இந்த அரசாங்கங்களின் செயல்முறைகளில் பங்கேற்கிறது” என்று தெரிவித்தார்.
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் மற்றும் கூகுள் போன்ற டிஜிட்டங்கள் தளங்களை மையமாகக் கொண்டு கடந்த 26-ம் தேதி முதல் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த தளங்கள் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் அதிகளவில் எழுச்சியைப் பெற்றன என்பது கவனிக்கத்தக்கது. புதிய விதிமுறைகளின்படி இந்த நிறுவனங்கள் குறைதீர்க்கும் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அந்தக் குழுவில் ரிசைடிங் அதிகாரி, சீஃப் கம்ப்ளெண்ட்ஸ் அதிகாரி மற்றும் நோடல் தொடர்பு அதிகாரி ஆகியோர் இடம்பெற வேண்டும் என்றும் அனைத்து மாதங்களிலும் பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனமானது தனியுரிமைகளை இந்த புது விதிகள் பாதிக்கும் என்றுக்கூறி புதிய விதிகளுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Also Read : சமூக வலைதளங்களுக்கு இந்தியா வகுத்துள்ள புதிய விதிமுறைகள் என்னென்ன?